அழகியசிங்கர்
நான் மூன்றாவதாகக் கொண்டு வந்த புத்தகம் üபிரமிளும் விசிறி சாமியாரும்ý என்ற புத்தகம். ஐந்தாண்டுகளுக்கு முன்பே, நான், பிரமிள், விசிறி சாமியார்,ý என்ற தலைப்பில் என்னுடைய வலைத்தளத்தில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் நடுவில் அந்தக் கட்டுரையை எழுதுவதை விட்டுவிட்டேன். பின் அக் கட்டுரைத் தலைப்பில் ஒரு மாற்றம் செய்து பிரமிளும் விசிறி சாமியாரும் என்று எழுத ஆரம்பித்தேன்.
பிரமிள் விசிறி சாமியாரைச் சந்திக்க என்னை அழைத்துக்கொண்ட சம்பவத்தை விவரித்திருப்பேன். அந்தச் சந்திப்பில் பிரமிளுடன்தான் விசிறிசாமியார் பேசிக்கொண்டிருந்தார். எனக்கோ சாமியார்களைப் பார்ப்பதில் அனுபவமில்லை. அவர்கள் எப்படியெல்லாம் பழகுவார்கள் என்பதும் தெரியாது.
ஆனால் பிரமிளுடன் இந்தச் சந்திப்பிற்குப் பிறகு விசிறி சாமியாரைத் திரும்பவும் சந்திக்கப் போகவில்லை. இந்தப் புத்தகத்தில் முதலில் விசிறி சாமியாரை பிரமிள் சந்தித்த விபரத்தையும் பின் பிரமிளைப்பற்றியும் எழுதியிருக்கிறேன்.
ஒரு இடத்தில் இந்தப் புத்தகத்தை என்னால் முடிக்கவே முடியாது என்று தோன்றியது. அந்த இடம் பிரமிளின் மரணத்தைப் பற்றி விவரிக்கிற இடம். ஏனோ அது சங்கடமாக இருந்தது. திரும்பவும் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வரவேண்டுமென்ற எண்ணம் வந்தவுடன் அதையும் எழுதி விட்டேன்.
இந்தப் புத்தகத்தில் கட்டுரைகள் விட்டு விட்டு எழுதியிருப்பதால் சொன்னதையே சில இடத்தில் சொல்லியிருக்கிறேனோ என்ற எண்ணம் தோன்றிக்கொண்டிருக்கிறது. திரும்பவும் நான் முழுவதும் படித்து சரி செய்துவிட்டேன்.
இப்போது என்ன தோன்றுகிறது என்றால் ஒரு வாசகனாக இந்தப் புத்தகத்தைப் படித்து அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. 109 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.90தான். ஆனால் புத்தகக் காட்சியை ஒட்டி 20% தள்ளுபடியில் தரத் தயாராக உள்ளேன்.
Comments