Skip to main content

தாஜ் என்ற நண்பர்



அழகியசிங்கர்





சீர்காழியிலிருந்து தாஜ் என்ற நண்பர் போன் செய்வார்.  கவிதைகளை அனுப்புவார்.  நவீன விருட்சம் பற்றி விஜாரிப்பார்.  அவருடைய கவிதைகளை நான் விருட்சத்தில் பிரசுரம் செய்திருக்கிறேன்.  பின்னால் அவர் வெளிநாட்டில் பணிபுரிய சென்றுவிட்டார்.

நான் சீர்காழியில் பணிபுரியச் சென்றபோது, என்னைப்பார்க்க அவர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார்.  இரண்டு மூன்று முறைகள் அவரைச் சந்தித்திருக்கிறேன்.  ஒருமுறை சீனிவாசன் நடராஜனுடன் சந்தித்தேன்.  இன்னொரு முறை அபுதீன் என்ற எழுத்தாளரை அறிமுகப்படுத்தினார்.  தாஜ் மென்மையானவர்.  அவர் வீட்டிற்கும் சென்றிருக்கிறேன்.

அலுவலகத்தில் அதிக நேரம் செலவு செய்யும்படி இருந்ததால் தாஜ் உடன் இலக்கியக் கூட்டங்களை நடத்த முடியவில்லை.

ஒரு முறை அவரைப் பார்த்துக் கேட்டேன் : "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று.

"ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து கொண்டிருக்கிறேன்," என்றார்.

எனக்கு சீர்காழியில் என்ன ரியல் எஸ்டேட் செய்ய முடியும் என்று தோன்றியது.  சும்மா இருக்கிறேன் என்று சொல்வதற்குப் பதில் அப்படி சொன்னாரோ என்று தோன்றியது.

சமீபத்தில் என் வீட்டிற்கு ஒரு முறை வந்திருந்தார்.  அவருடைய வீட்டில் நடக்கும் (அவர் பையனுக்கு என்று நினைக்கிறேன்) திருமணத்திற்கு வர அழைத்திருந்தார்.  அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை.   அப்போது விருட்சத்திற்கு நன்கொடை கொடுத்தார். எனக்குத் தெரியவில்லை அவரைச் சந்திப்பது அதுதான் கடைசி முறை என்று .  அவர் ஊருக்குப் போய் ஒரு கதை அனுப்பியிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவர் எப்போதும் கவிதைகள்தான் எழுதுவார் எப்போது கதை எழுத ஆரம்பித்தார் என்று கூட தோன்றியது.

பெண்கள் என்ற பெயரில் ஒரு நீண்ட கதை அனுப்பினார்.  போன 106வது இதழில் அந்தக் கதையைப் பிரசுரம் செய்திருந்தேன்.  அவருக்கு அனுப்பினேன்.  ஆனால் அவருக்குக் கிடைக்கவில்லை.  அவர் திரும்பவும் போன் செய்தபோது, 'உங்கள் கதை வந்த இதழை அனுப்பினேன், கிடைத்ததா?' என் று
கேட்டேன்.  'இல்லை,' என்று அவர் சொன்னபோது, திரும்பவும் அனுப்பினேன்.
அவருடைய குறுநாவல்கள் தொகுப்பு காலச்சுவடு முலம் வருவதை அறிந்து மகிழ்ந்தேன்.  இதை அவரே குறிப்பிட்டிருந்தார் முகநூலில்.  நேற்று அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை.  ஆனால் சீர்காழி பக்கம் போக நேர்ந்தால் தாஜ் என்ற நண்பர் ஞாபகத்திற்கு வராமல் இருக்க மாட்டார்.  தெரு முனையில் தெரியும் அவர் வீடும் என் கண்ணில் தப்பாமல் இருக்காது.   விருட்சம் மூன்றாவது தொகுதி ஒன்று தயாரிக்க உள்ளேன்.  தாஜ் கவிதையும் அதில் ஆரம்பமாக இருக்கும். அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
  

Comments