Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...31


அழகியசிங்கர் 





நேற்று புத்தகக் காட்சி முடிந்து வீட்டிற்குக் கிளம்பும்போது மணி 12 ஆகிவிட்டது.  பைக் வைத்திருந்த இடத்திற்குப் போகும் போது ஒரே இருட்டு.  நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன.  நாயைக் கண்டால் எனக்குச் சற்று பயம்.  எங்கே கடித்து விடுமோ என்ற பயம்தான்.  அதனால் வண்டியை அப்படியே வைத்துவிட்டு ஆட்டோவில் போய்விடலாமென்று நினைத்தேன். ஆனால் சிலர் பின்னால் வண்டிகளை எடுக்க வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து, 'நாய்,' என்றேன்.  'அதெல்லாம் ஒன்றும் பண்ணாது வாருங்கள்,'  என்றார்கள்.  
'நான் வண்டியை எடுக்கும்வரை நீங்கள் இருக்கணும்,' என்றேன்.  அவர்கள் சரி என்றார்கள்.  இருட்டில் அவர்கள் முகங்கள் கூடத் தெரியவில்லை.  என் முகம் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது.  குரல்தான் எங்களை இணைத்தது.
எனக்குத்தெரியும் புத்தகக் காட்சியின் கடைசி நாள் டென்ஷனாக இருக்கும்.  வீட்டிற்கு சீக்கிரம்போக முடியாது என்று.  கொஞ்சம் பணம், செக் புக் என்று எல்லாம் எடுத்துக்கொண்டு போனேன்.  என் ஜோல்னாப் பையை மாட்டிக்கொண்டே திரிந்தேன்.
பெண் வீட்டிலிருந்து வந்ததால் சாப்பிடத் தயிர் சாதம் வைத்திருந்தேன்.  இரவு ஏழு மணிக்குச் சாப்பிட்டேன்.  என் கடையில் புத்தகம் விற்கக் கொடுத்த எல்லாப் பதிப்பாளர்களுக்கும் பணத்தைக் கொடுத்துவிட வேண்டுமென்ற துடிப்புடன் இருந்தேன்.  அதனால்தான் இரவு 12 ஆகிவிட்டது.
ஒவ்வொரு முறை புத்தகக் காட்சி முடிந்தவுடன் ஒரு பெரிய கடலைத் தாண்டி வருவதுபோல் உணர்வேன்.  ஒவ்வொரு முறை புத்தகக் காட்சியின்போது எதாவது சம்பவம் நடக்காமல் இருக்காது.  இந்த முறை காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து ஒருவருக்கு வாங்கிக்கொண்ட வந்த புத்தகம் காணாமல் போய்விட்டது. 
இன்னொரு உண்மையைக் கண்டுகொண்டேன்.  கூட்டமாக இருக்கும்போது மற்ற ஸ்டால்களுக்குச் சென்று புத்தகங்கள் வாங்கக் கூடாது என்று.  அந்தத் தவற்றைச் செய்ததால் அவதிப்பட்டேன்..
ஸ்டாலில் எப்போதும் கூட்டம் வராது.  அப்படி கூட்டம் வராதத் தருணத்தில் நாம் சும்மா உட்கார்ந்திருக்கக் கூடாது.  மற்ற பதிப்பாளர்களின் முக்கியப் புத்தகங்களை எடுத்து வாசித்துக்கொண்டிருக்க வேண்டும்.  
ஸ்டாலில் இருக்கும்போது பெரும்பாலும் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விட்டேன்.  காப்பி இரண்டு முறையாவது சாப்பிடுவேன்.  முழு நாளில் மதியம் அளிக்கும் சாப்பாட்டை ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவேன்.  
என் கூட இருந்த நண்பர் (அவர் பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று சொன்னதால் சொல்லவில்லை) இன்னும் உறுதியானவர். 
இந்த முறை மாலை நேரங்களை நன்றாகப் பயன்படுத்தினேன்.   நண்பர்களைக் கூப்பிட்டு கூட்டங்கள் நடத்தினேன்.  விருட்சம் வெளியீடாக வந்த எல்லாப் புத்தகங்களைப் பற்றியும் பேச வைத்தேன்.  அதே நானே சோனி டிஜிட்டல் காமெராவில் பதிவு செய்து முகநூலில் பதிவு செய்தேன்.  அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.
எல்லாப் புத்தகக் காட்சிகளும் எனக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும்.  இந்தப் புத்தகக் காட்சியும் எனக்குப் பாடம் கற்றுக்கொடுக்காமலில்லை.  புத்கதக் காட்சி முன் நான் ஒரு மாணவன். 

Comments