Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...14


அழகியசிங்கர்





கடந்த 20 ஆண்டுகளாகப் புத்தகக் காட்சியில் இடம் பெறுகிறேன்.   அதன் மூலம் பல அனுபவங்கள்.  அலுவல் பொருட்டு ன் வெளியூரிலிருந்தாலும் புத்தகக் காட்சியின் நினைப்போடு இருப்பேன்.  

இரண்டு விஷயங்களைக் குறித்துப்  பேச விரும்பவில்லை. ஏன்னென்றால் நான் தினமும் நடைப்பயிற்சி செய்யும்  ஒரு விசாலமான மரத்தின் முன் பேச மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்திருக்கிறேன். 

விருட்சம் ஸ்டாலில் என் புத்தகம் மட்டுமல்லாமல் பலருடைய புத்தகங்களையும் வாங்கி விற்கிறேன்.  நான் பெருமைப்படக் கூடிய பல புத்தகங்களை என் நண்பர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றையும் அறிமுகப் படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன்.  இதோ முதல் புத்தகத்தை அறிமுகப் படுத்துகிறேன்.

என் நண்பர் அம்ஷன் குமார் அவருடைய சொல் ஏர் பதிப்பகம் மூலம் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்.  புத்தகத்தின் பெயர் 'ஆவணப்பட இயக்கம்.'  206 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.200தான். இப் புத்தகம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது.  முதல் பிரிவு ஒரு ஆவணப்படத்தை எப்படி இயக்குவது என்பது பற்றி, 

இன்னொரு பகுதி ஆவணப்பட வரலாறு.  இதுவும் முக்கியமான பகுதியாகக் கருதுகிறேன்.  

அம்ஷன்குமார் ஆரம்பத்திலிருந்து பல ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறார்.  ஒரு ஆவணப்படத்தைத் தயாரிப்பதில் தீவிரத்தன்மையைக் கொண்டவர்.  என்னால் மறக்க முடியாத அவருடைய ஆவணப்படங்களில் ஒன்று அசோகமித்திரனைப் பற்றியது. இன்னொன்று பாரதியார் பற்றியது. யாழ்பாணம் தட்சிணாமூர்த்தியைப் பற்றி அவர் எடுத்த ஆவணப்படம்.   தட்சிணாமூர்த்தியின் புகைப்படங்களைத் தவிர வேற எதுவும் இல்லை. ஆனால் அம்ஷன் குமார் தன் ஆவணப்படம் மூலம் தட்சிணாமூர்தியை உயிரோடு கொண்டு வந்ததுபோல் தோன்றியது.

கூடியவிரையில் இப் புத்தகம் ஒரு பாடப் புத்தகமாக திரைப்படக் கல்லூரிக்குப் போய்விடும் என்று தோன்றுகிறது.

இப் புத்தகம் விருட்சம் ஸ்டாலில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ.200தான்.

Comments