Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...37


அழகியசிங்கர்  




இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் வாங்கிக் குவித்தப் புத்தகங்கள் போன ஆண்டை விட அதிகம் என்றுதான் தோன்றுகிறது.  எத்தனைப் புத்தகங்கள் என்று எண்ணவில்லை.  ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.  நினைப்பதோடு சரி.  எண்ணியதில்லை.

இந்த முறை தேசாந்திரி பதிப்பகத்திலிருந்து எஸ் ராமகிருஷ்ணனின் ஐந்து புத்தகங்கள் வாங்கினேன்.  1. சிவப்பு மச்சம் 2. பெயரற்ற நட்சத்திரங்கள் 3. கதைகள் சொல்லும் பாதை 4. ரயில் நிலையங்களின் தோழமை 5. பறந்து திரியும் ஆடு.

பறந்து திரியும் ஆடு என்ற தலைப்பில் சிறார்களுக்கு ஒரு நாவல் எழுதி உள்ளார்.  உள்ளே ஓவியங்களுடன் சிறப்பாக எழுதப் பட்டிருக்கும் நூலாக எனக்குத் தோன்றுகிறது.  இந்தப் புத்தகத்தை எடுத்தால் படிக்காமல் இருக்க முடியாது.  மேலும் இது சிறார்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகமாக நான் கருதுகிறேன்.

சிறார்களுக்கு ஒரு புத்தகம் எழுதுவது அவ்வளவு சுலபமாக இருக்குமா என்பது தெரியவில்லை.  ரொம்ப ரொம்ப புரியும்படி கதைகள் எழுத வேண்டும்.
பள்ளிக்கூடம் படித்தக் காலத்தில் நான் ரசித்தப் புத்தகம். தென்னாட்டுப் பழங்கதைகள்.  சைவ சித்தாந்தப் பதிப்பகம் கொண்டு வந்தப் புத்தகம்.  7 புத்தகங்கள்.  ஒவ்வொரு புத்தகமும் 300 பக்கங்கள் இருக்கும்.  ராமசாமி புலவரால் தொகுக்கப்பட்ட புத்தகம்.  ஒவ்வொரு முறையும் சைவசிந்ததாந்தப் பதிப்பகத்திற்குச் சென்று இந்தப் புத்தகம் திரும்பவும் அச்சிடப்பட்டுள்ளதா என்று கேட்பேன்.  ஏமாற்றத்துடன் திரும்பி வருவான்.  அதற்குக் காரணம் இருக்கிறது. இன்றைய சிறார்கள் ஆங்கிலத்தில் வாசிப்பதில் அக்கறை காட்டுகிறார்கள் தவிர தமிழில் இல்லை.  அந்தக் காலத்தில் அம்புலிமாமா என்ற பத்திரிகை வந்தது.  இப்போது இல்லை.  தமிழில் சிறார்கள் புத்தகங்கள் வரவேண்டும்.  தமிழில் எல்லோரும் வாசிக்க வேண்டும்.  80 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.100தான்.  ராமகிருஷ்ணன் அதிகமாகச் சிறார்களுக்கான புத்தகங்கள் எழுதி உள்ளார்.  



கதைகள் சொல்லும் பாதை என்ற இன்னொரு புத்தகம்.  நான் வளசரவாக்கம் வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அலுவலகத் தோழி ஒருவர், இராமகிருஷ்ணனை புகழ்ந்து பாராட்டாமல் இருக்க மாட்டார். அவரும், அவர் பையனும் காலையில் எழுந்தவுடன் ராமகிருஷ்ணன் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துவிடுவார்கள்.  முதலில் அந்தப் பெண்மணி சொன்னது என்னால் நம்ப முடியாமல் இருந்தது.   இப்படி ஒரு எழுத்தாளருக்கு தீவிர வாசகராக ஒருவர் இருப்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். 

சாகித்திய அக்காதெமி பரிசு ராமகிருஷ்ணனுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்திருப்பார்.   அந்த வாசகப் பெண்மணி மகிழ்ச்சியின் எல்லைக்கே போயிருப்பார்.  23 எழுத்தாளர்களைப் பற்றி பல தகவல்களுடன் இக் கட்டுரைத் தொகுப்பு உள்ளது.  கேள்விப்பட்ட கேள்விப்படாத பல எழுத்தாளர்கள் இதில் இருக்கிறார்கள். 

தமிழ் எழுத்தாளர்களான வைதீஸ்வரன் பற்றியும், அனார் பற்றியும் இத் தொகுப்பில் கட்டுரைகள் எழுதி உள்ளார்.  அவசியம் வாசிக்க வேண்டிய இன்னொரு புத்தகம்.  136 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.150 தான்.  



பெயரற்ற நட்சத்திரங்கள் என்ற பெயரில் ஒரு புத்தகம்.  பல சினிமாப் படங்களைக் குறித்து சுவாரசியமான தகவல்கள் பல கொண்ட புத்தகம் இது.  200 ரூபாய் விலையுள்ள புத்தகம் இது.

சிவப்பு மச்சம் என்ற பெயரில் ஒரு சிறுகதை வெளிவந்துள்ளது. 20 கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு.  எனக்குத் தெரிந்து இப்போது எழுத ஆரம்பித்திருக்கும் எழுத்தாளர்கள்.  ராமகிருஷ்ணன் புத்தகங்களைப் படித்துவிட்டுத்தான் கதைகள் எழுத ஆரம்பிக்க வேண்டும்.  அவருடைய கதைகள் எல்லாம் வினோதமான கலவைக் கொண்ட எழுத்து நடையைக் கொண்டது.  ஒவ்வொரு சமயத்திலும் சோதனை முயற்சிகளை அவருடைய கதைகளில் உருவாக்காமல் இருக்க மாட்டார்.  புறாப் பித்து என்ற கதையை நான் ஆனந்தவிகடனில் வாசித்திருக்கிறேன்.  இது குறித்து ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறேன்.



நம்ப முடிகிற தகவல்களைக் கொண்டு நம்ப முடியாத சம்பவங்களை உருவாக்குவது ராமகிருஷ்ணனின் பாணி என்று எனக்குத் தோன்றுகிறது.  இப் புத்தகம் விலை ரூ.250.  

ராமகிருஷ்ணன் பயணங்களைப் பற்றி அதிகமாக புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.  பயணங்களுடன் தகவல்களையும் சேகரித்துக் கூறுவதில் வல்லமைப் பெற்றவர்.  நயாகராவின் சாரல் என்ற கட்டுரை ஒன்று இப் புத்தகத்தில் உள்ளது.  ஒரு இடத்திற்குப் போய் அந்த இடத்தின் தன்மைகளை நம் கண் முன்னால் கொண்டு வந்து விடுகிறார்.   இப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களும் தாங்களும் அவருடன் பயணம் செய்யும் அனுபவத்தை உணருவதாக தோன்றும். ரயில் நிலையங்களின் தோழமை என்ற புத்தகம் விலை 125.  

இன்னும் சில புத்தகங்களைப் பற்றியும் எழுத உள்ளேன்.




Comments