நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...33
அழகியசிங்கர்
இன்னும் புத்தகக் காட்சி முடிந்துவிட வில்லை. புத்தகக் காட்சி 4ஆம் தேதியிலிருந்து ஆரம்பித்து 20ஆம் தேதி முடிந்து விட்டது. ஆனால் நான் இன்னும் முடிக்கவில்லை. புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போது இரும்பு அலமாரிகளில் உள்ள எல்லாப் புத்தகங்களையும் சாக்கில் கட்டி வைத்து விடுவேன். பின் இரும்பு அலமாரிகளை புத்தகக் காட்சி எடுத்துக்கொண்டு போவது வழக்கம். புத்தகக் காட்சி முடிந்தவுடன் திரும்பவும் இரும்பு அலமாரிகளை எடுத்துக்கொண்டு வந்து விடுவேன். இரும்பு அலமாரியில் உள்ள ஒரு தட்டில் உள்ள புத்தகங்கள் ஒரு சாக்குப் பை நிரம்பும் அளவிற்கு இருக்கும். இது மாதிரி 30அல்லது 40 சாக்கு மூட்டைகளில் புத்தகங்களை வைத்திருப்பேன். ஒவ்வொரு தட்டிலும் புத்தகங்களை வைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.
இரண்டு நாட்களாக இதுதான் என் வேலை. ஒவ்வொரு இரும்பு அலமாரியையும் நகர்த்தி வைத்து புத்தகங்களை அடுக்குவது. கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் புத்தகங்கள் என்னைக் கைவிடவில்லை.
இந்தப் புத்தகக் காட்சியில் இரண்டு படைப்பாளிகள் என்னைக் கௌரவம் செய்தார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் புத்தகக் காட்சியில் பங்குக் கொண்டிருக்கிறேன். இதுவரை யாரும் என்னை மேடைக்கு அழைத்துப் போய் அவர்கள் எழுதிய புத்தகங்களை வழங்கியதில்லை. எந்தப் புத்தகக் காட்சியிலும் யாரும் கௌரவம் செய்ததில்லை. இந்த முறை மட்டும் அப்படி நடந்தது. ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போதும் பல எழுத்தாளர்கள் எனக்குப் புத்தகங்களை நன்கொடையாகக் கொடுப்பார்கள். நானும் சிலருக்கு என் புத்தகங்களை நன்கொடையாகக் கொடுப்பேன். நான் நன்கொடையாக வாங்க நினைக்கும் புத்தகங்களûப் படித்து எழுத நினைப்பேன். சில புத்தகங்களைப் படித்தும் எழுதியிருக்கிறேன். இந்த முறை என்னை கௌரவம் செய்த இரண்டு படைப்பாளிகளின் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒருவர் பெயர் üமுகங்கள்ý என்ற பெயரில் எழுதிய சத்யா ஜி பியின் புத்தகம். இன்னொரு புத்தகம் உஷாதீபனின் சிறுகதைத் தொகுப்பு. நிலைத்தல் என்ற சிறுகதைத் தொகுப்பு. காவ்யா ஏற்பாடு செய்த கூட்டத்தில் அதைப் பெற்றுக்கொண்டேன்.
எப்போதுமே அரங்கை விட்டு வெளியே வந்தால், அதுவும் அதிக நேரம் ஆகிவிட்டால், எனக்கு அரங்கு ஞாபகம் வந்து திரும்பி விடுவேன். எனக்கு உதவி செய்யும் நண்பரின் மனம் நோகக் கூடாது என்று நினைப்பவன். அதனால் உஷாதீபன் கூட்டத்தில் பேச முடியாமல் போய்விட்டது. இது சற்று வருத்தம்தான்.
கிட்டத்தட்ட 10 புத்தகங்கள் நன்கொடையாகக் கிடைத்தன. அப் புத்தகங்களைப் பட்டியலிட விரும்புகிறேன்.
1. சத்யா ஜி பி எழுதிய முகங்கள்
2. உஷாதீபனின் நிலைத்தல் சிறுகதைத் தொகுப்பு
3. படித்தேன்......எழுதுகிறேன் - உஷாதீபன் கட்டுரைத் தொகுப்பு
4. முபீன் சாதிகா கட்டுரைகள்
5. இருளும் ஒளியும் - கவிதைகள் - பிருந்தா சாரதி
6. மேசை மேல் செத்த பூனை - கவிதைகள் - இந்திரன்
7. 84 கவிதைகள் - இரா. மதிபாலா
8. வருகைக்கான ஆயத்தங்கள் - சிறுகதைகள் - இதயா ஏசுராஜ்
9. சாமானிய மனிதனின் எதிர்க்குரல் - கட்டுரைகள் - விஜய் மகேந்திரன்
10. ஆவணப்பட இயக்கம் - கட்டுரைகள் - அம்ஷன் குமார்
இந்த முறை என் புத்தகங்களை வாங்கியவர்கள் புத்தகத்தில் கையெழுத்துப் போடும்படி கேட்டுக்கொண்டார்கள். இதுவும் முன்பு நடந்ததில்லை. இனி வாங்கிய புத்தகங்களைப் பற்றி நாளை எழுதுகிறேன்.
Comments