அழகியசிங்கர்
லா ச ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் என்ற தொகுப்பில் 23 கதைகளில் உத்தராயணம் ஒரு கதை. நினைவோடை உத்தியில் எழுதப்பட்ட கதை. தன்னைப் பற்றிச் சொல்கிற மாதிரி கதை. அப்படிச் சொல்லிக்கொண்டே போகும்போது எதை எதைச் சொல்லலாம் எதை எதைச் சொல்லக் கூடாது என்பது இக் கதையில் ஒழுங்காகக் கொண்டு வருகிறார்.
எல்லாவற்றுக்கும் மொட்டை மாடிதான். அதிகம் குடி இல்லாத ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் வீடு கட்டி வந்திருக்கிறார்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இதெல்லாம் கதையில் நேரிடையாக சொல்லப்படவில்லை.
கதையை இப்படி ஆரம்பிக்கிறார். ‘அந்தா கொண்டைக்கு எல்லாருக்கும் கொடுப்பனை இருக்காது. நெற்றியிலிருந்து பின்னுக்கு இழுத்து, அழுந்த வாரி இறுகப் பிணைத்து எழுப்பி கொண்டையின் கோபுரம் நெஞ்சை முட்டுகிறது.’
வயதானவர் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு கனவு காண்கிறார். இவர் கனவு காண்பதற்குத்தான் மொட்டை மாடிக்கே போகிறார்.
அவர் வீட்டில் உள்ளிருந்து மொட்டை மாடிக்கு ஏணி மூலமாகத்தான் போக முடியும். அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறார் தினமும்.
தூக்கக் கலகத்திலிருந்தவரை அவள் பெண் சாந்தா எழுப்புகிறாள். சாந்தாவைப் பற்றி விவரிக்கும்போது பரந்த முகத்தில் பேரழகு என்று விவரிக்கிறார்.
அவர் புதல்வன் சேகர் வெட்டி வீழ்த்திய முள்ளை வென்னீரடுப்புக்காக, ஏணியடியில் சுவரோரம் சேர்த்து வைத்திருக்கிறான்
இங்கே ஒரு வர்ணனை வருகிறது. கிணற்றடியில் வாழை இலைகள் நர்த்தனமாடி வரவேற்கின்றன. கவித்துவமான வரிகள். லாசரா எப்போதும் தன் கதையில் கவித்துவமான வரிகளைக் கொண்டு வந்து விடுவார்.
க.நா.சு எப்போதும் கவிதையை உரைநடையாக மாற்றி எழுதிவிடுவார். ஆனால் லாசாராவோ உரைநடையில் கவித்துவ நடையைக் கொண்டு வருகிறார். அதுதான் அவருடைய சிறப்பு.
நடுப்பிள்ளையும்ல அடுத்தவனும் பல் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘இந்த வீட்டில் ஒரு பேஸ்ட்டா, மண்ணா, ஒண்ணு உண்டா? எப்பவும் மாசச் கடைசிதானா?’
என்று கேட்கிறார்கள்.
‘ஏன் மண்ணு இருக்கே’ என்று பெரியவர் நக்கலடிக்கிறார்.
டாமி என்ற நாய் வாலை ஆட்டிக்கொண்டு வருகிறது. இங்கே எழுதுகிறார்: ஆனால் கண்களில் மட்டும் உள்ளொளியின் அழகு மங்கவில்லை.
எட்டி உதைக்கிறார். உதையை வாங்கிக்கொண்டு குரைக்கக்கூட இல்லை. தென்னை மரத்தடியில், தான் ஏற்கனவே பறித்து வைத்திருக்கும் பள்ளத்துக்குப் போய்ப் படுத்துக் கொள்கிறது.
நடுப்பையன் பெரியவரைக் கேட்கிறான்.
‘என்ன அப்பா வாரம் ஒருநாள் மௌன விரதம் என்று வாயை அடைச்சுட்டு கண்ணால் பேசிக்கொண்டிருக்கிறாய், பேசுகிறாயா சுட்டெரிக்கிறாய். ஒரு கதவை மூடிவிட்டு இன்னொரு கதவைத் திறந்து விடுகிறாய். இப்படிக் கண்ணால் கரிப்பதற்குப் பதிலாக வாயைத் திறந்து எங்களைத் திட்டிவிடலாம் என்கிறான்.’
‘நான் பதில் பேசவில்லை. பேசும் நியாயம் எப்பவோ தாண்டியாச்சு’ என்கிறார் பெரியவர்.
இந்தக் கதையில் எல்லோரும் பெரியவர் செய்கையை அங்கீகரிப்பதில்லை. அவர் சொல் கேட்பதில்லை. இதை விவரித்துக்கொண்டே போகிறார்.
நட்ட பயிர் அம்புகளாய்க் காய்கிறது. சரப்படுக்கையில் படுத்து. உன் உத்தராயணத்துக்குக் காத்திரு என்ற ஒரு வரி வருகிறது நடுவில்.
அவர் இருப்பிடத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். எட்ட எட்டத்தான் வீடுகள். மனைகளை வாங்கிப் போட்டவர்களுக்கு வீடு கட்ட இன்னும் வசதி கிட்டவில்லை. உச்சிவெய்யிலில் பூமி பாளம்பாளமாக வெடித்திருக்கிறது.
இங்கே ஒரு வரி அற்புதமாக எழுதியிருக்கிறார் லா.ச.ரா. தூரத் தூரக் கட்டடங்கள் கானலில் நடுங்குகின்றன.
இங்கு மனைவி ஹரிணி பற்றி விவரிக்கிறாள்
‘மண்டை இடிக்கிறது, பெருமாள் எப்பவோ வந்து தயாராக வைத்திருந்த ஏனத்தில் பாலை ஊற்றி விட்டுப் போய் விட்டான். ஹரிணி தயவு பண்ணனும். ஆனால் அவள் அயர்ந்து தூங்குகிறாள்.’
அவருக்கும் ஹரிணிக்கும் நடக்கும் பேச்சு வார்த்தையில் அவள் கொல்கிறாள்.
‘அத்வானம் பிடிச்ச இந்த இடத்தில் வீட்டை வாங்கிப் போட்டுடடு, ஒரு நாளை பார்த்தாப்போல் நான் வயித்தில் நெருப்பைக் கட்டிக்கொண்டு …ஐயையோ என்னால் இனிமேல் முடியாது. உங்கள் வீட்டை நீங்கள் காவல் காத்துண்டு கிடங்கோ..எங்களை எங்காணும் மயிலாப்பூரில் குடி வெச்சுடுங்க.’.என்கிறாள்.
அடுத்தது மனைவி முழங்குவது. ‘மொட்டை மாடியில் காத்து வாங்கலாம்னா படி கிடையாது. என்ன வீட்டில் வாழறோமோ?’
‘மாடிப்படி கட்டுவதற்குள், பணம் போண்டி. அப்படியும் விடவில்லை. ஏணி வைத்து ஏறுகிறோம.’
ஹரிணிக்கு ஏற முடியாத எரிச்சல் என்கிறார் பெரியவர்.
இப்போது எல்லோரும் அவரை விட்டுவிட்டு வெளியில் போய்விடுகிறார்கள். அவர்கள் புதல்வர்கள் மாம்பலத்திஙூருகும் பாட்டி வீட்டிற்குப் போய் விடுகிறார்கள்.
மனைவியும், பெண்ணும் கட்டை தொட்டி நாடார் வீட்டிற்கு டிவி பார்ப்பதற்குப் போய் விடுகிறார்கள்.
இந்த இடத்தில் சொல்கிறார் : நான் இப்போது உணர்வது என் தனிமையையா வெறுமையையா..
எல்லோரும் போனபின் இவருடைய பொழுது போக்கு மொட்டை மாடிதான்.
மாடிக்குப் போய் எதையெதையோ யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் அப்படி என்ன யோசிக்கிறார் என்பதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
‘சரி, என்ன செய்யப் போகிறாய். அத்தனை நட்சத்திரங்களையும் வாரிச்கூடையில் அள்ளிப் போட்டுக்கொண்டு, பீச்சில் சுண்டலா விற்கப்போகிறாயா. அல்லது நட்சத்திரப் பூக்கள் தொடுக்கப் போகிறாயா.’
இப்படியெல்லாம் மொட்டை மாடியில் யோசிக்கிறார். பின் கீழே இறங்கி வருகிறார்.
‘இசைகேடாய், தூக்கக் கலக்கத்தில் நான்தான் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டேனோ?’
அப்படியே சாய்ந்து முள் படுக்கையில் சுமார் இருபது அடி உயரத்திலிருந்து விழுந்து விடுகிறார்.
‘சாந்தாவும், ஹரிணியும் வரும்வரை இங்கேதானா?’ என்று கேட்கிறார்.
அவருடைய நாய் ஓடிவந்து அவர் முகத்தை ஓரிரு தடவை முகர்ந்து பார்த்த பிறகு தலைமாட்டில் உட்கார்ந்து, மூக்கை வானத்துக்கு நீட்டி ஒரு நீண்ட ஊளை….
இதுவேதான் அவர் உத்தராயணமா? என்பதுடன் கதை முடிகிறது.
நினைவோடை உத்தியில் எழுதப்பட்ட கதை. நிறையா கதைகள் நினைவோடை உத்தியில் கதைகள் எழுதியிருக்கிறார் லா.ச.ரா. இன்னொரு எழுத்தாளரைப் பற்றியும் நான் இங்குக் குறிப்பிட வேண்டும். அவர் நகுலன். நினைவோடை உத்திக்குப் பெயர் போனவர்.
((திண்ணை முதல் இணைய வார இதழில் 16.05.2021 இல் வெளி வந்தது )
Comments