Skip to main content

Posts

Showing posts from March, 2009

ஒரு கவிதை

நான் கூச்சலிட்டுக் கொண்டாடுகிறேன் என்னுடையதல்ல இந்த வெற்றி தேம்பியழுகிறேன் எனக்கு சம்பந்தமில்லாதது இந்தத் தோல்வி ஆடிக்களைத்த மைதானத்தை நடந்தளந்ததைத் தவிர சொல்வதற்கு எதுவும் இல்லை வெற்றியுமில்லை தோல்வியுமில்லை

சாகசக்காரியின் வெளி

அதீத மனங்களில் மிதந்து வழியும் ஆசைகளை அவளறிவாள் தன் வஞ்சக விழிகளில் சிரித்து மென்மை வழியும் குரலினை சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி தூண்டிலென எறிவாள் கபடங்களறியாக் கண்களைக் கொண்ட பிஞ்சுமனங்களை அவளிடம் கொடுத்துப் பார்த்திருங்கள் அல்லது உலகம் மிகவும் நல்லதெனச் சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை அவளிடம் விடுங்கள் அம் மனிதன் தானாகவே முன்பு நல்லதெனச் சொன்ன நாவை கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான நஞ்சை மிடறாக்கி அருந்த வைத்திருப்பாள் அவள் கைவசமிருக்கும் எல்லா நெஞ்சங்களையும் கெட்டதாக்கி அழுகவைத்துப் பின்னொருநாள் புது இதயங்களுக்கு மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள் அழுதழுது நீங்கள் அவளைத் தேடிச் சென்றால் உங்களைத் திரும்பச் சொல்லி மென்மையானதென நீங்கள் சொல்லும் அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள் கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம் எச்சிலோடு காறி உங்கள் வாடிய முகங்களில் துப்பிடுவாள் பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை வக்கிரங்களறியவென அவளிடம் கொடுத்த நீங்கள் இதையெல்லாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும் ஏனெனில் அவள் சாகசக்கார வெளியில் வன்முறைகளை விதைப்பவள்

ஸில்வியா ப்ளாத் இரண்டு கவிதைகள்

தீப்பாடல் பசியப் பிறந்தோம் குறைகொண்ட தோட்டமிதற்கு.. ஆயின் புள்ளியாய்த் தெறித்துத் தேரைபோல் மறு கொண்ட முட்செடி பலதில் பகையுடன் நழுவும் எம் காவலர் தம் கண்ணி வைக்க சிக்குமதில் மானும் சேவலும் மீனும் ஏன் எல்லாம் நன்றேகுருதி சிந்தும் தந்திரமாக யாவும் சீர்குலைந்து நிற்கும் அவன் சீற்றமுற்ற வீண்சாமானினின்று தேவதை-ஏதோ வடிவ ஆடையுடுப்பதை வ ெட்டியழிப்பதேநம் கடனென்ப நேர்-விசாரணையேதும் திறக்காது சாமர்த்தியமாய்ப் பிடித்து ஒளிரும் எம் செயல் ஒவ்வொன்றாய் வண்டலாக்கி மீண்டும் உருவற்ற சேற்றுமண்ணாக்கி புளிநொதித்த வானெனும் ஆடையாய் மூட இனிய உப்பும் களையின் முறுக்கிய தண்டும் யாம் வழியின் கடைக்கோடியில் வைத்துச் சமாளிக்க செங்கதிர் எரித்த யாம் ரத்தக்குழாய் பலதின் முட்கம்பி வலைப்பின்னலில் அடுக்கிய தீக்கல் உருளத் தூக்குவோம் மறமான காதல், கனாவென கறார்-அழலை நிறுத்த அன்றி வா, என் காயம்படச் சாய்.. நின்றெரி நின்றெரி.. சொற்கள் கோடரிகள். அவை வீழும் மரத்தில் தொடங்கும் வட்டங்கள்.மையத்தினின்றும் குதிரைகளாய்ப் பாயும் எதிரொலிகள். கண்ணீராய்ப் பொங்கும் மரச்சாறு. பாறைதனில் தன் கண்ணாடி மீண்டும் நிறுவ முயலும் நீராய். பசிய களையுமுண்ட

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

10 பூனையைப்போல அலையும் வெளிச்சம் குட்டி ரேவதி கதவுகளை ஓசைப்படாது திறந்து மழைபெய்கிறதாவென கைநீட்டிப் பார்க்கிறது வெளிச்சம் தயங்கியபடி பின் இல்லையென்றதும் மரவெளியெங்கும் நிழற்கடைவிரித்து கூடார முகப்பில் ஏறி அமர்கிறது வேடிக்கைப் பார்க்க பூமியெங்கும் பூனை உடலின் நிற அழகுகள் தனது நிழலே தன்னை தின்னத் துவங்கியதும் சரசரவென மரமிறங்கிப் பாய்கிறது மாடத்துச் சுடருக்கு மதில் சுவரென விடைத்து நிற்கும் இரவு முதுகின் மீதமர்ந்து கூடலின் பேரொளியை சுவீகரிக்கும் நிலவின் அகன்றவிழியால்

வைரமுத்துவும் சம்பத்தும்

யோசித்துப் பார்த்தால் வைரமுத்துதான் தமிழில் அதிகமாக விருதுகளைப் பெறுபவர் என்று தோன்றுகிறது. சமீபத்தில் அவருக்கு 'சாதனா சம்மான்' விருது கிடைத்துள்ளது. இச் செய்தியை வெளியிட்ட பத்திரிகை 'மேலும் ஒரு விருது' என்று குறிப்பிட்டிருந்தது. இப்படியெல்லாம் விருதுபெற அவர் பெரிய சாதனை செய்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவர் சினிமாப் பாடலாசிரியராக அறிமுகமாகிறார், பின் அவர் கவிஞராக தன்னை தெரியப்படுத்திக் கொள்கிறார். பின் நாவலாசிரியராக பவனி வருகிறார். அவர் எழுதினால் போதும் எல்லோரும் வரவேற்று பிரசுரம் செய்ய தயாராக இருக்கிறார்கள். அவருடைய நாவல் தொடர் கதையாக பெரிய பத்திரிகைகளில் வெளி வருகிறது. ஒரு பத்திரிகையில் அவர் கேள்வி பதில் எழுதுகிறார். இன்னொரு பக்கம் அவர் சினிமாவிற்கு பாடல்களை எழுதித் தள்ளுகிறார். அவருடைய முக ராசி அவர் எதை எழுதினாலும் அவருக்கு விருது தேடிக்கொண்டு வருகிறது. அரசாங்கம் விருது கொடுக்கிறது. தனியார் நிறுவனம் விருது கொடுக்கிறது. சிறந்த பாடலாசிரியருக்கான விருது வாங்குகிறார். சிறந்த கவிதைக்கான விருது வாங்குகிறார். சிறந்த நாவலுக்கான விருதையும் பெறுகிறார். இப்படி சகலகலா வல்லவனாக

பிரிதலின் நிறங்கள் - மூன்று கவிதை

1. யாருமற்ற அறையில் மடியில் முகம் புதைத்த ஒருத்தியின் விசும்பல் சப்தம் கேட்கிறது. மெல்ல மெல்ல உருவம் பெறுகிறேன் நான். விசும்பலின் கரங்களை பற்றிக்கொண்டு கண்கள் மூடி லயித்திருந்த கணத்தில் கதவைத் திறந்து உள்நுழைகிறான் அந்நியனொருவன். விசும்பல் சப்தமும் உருவம் தொலைந்த நானும் காற்றில் கலந்து மறைந்து போகிறோம். தன் அறை அது என்றெண்ணியபடி உடை களைந்து சதைப்பசியுடன் நெருங்குகிறானவன் . 2. புழுதிகளால் நிறைந்திருக்கிறது நீ வசிக்கும் அறையின் கண்ணாடி சன்ன்ல்கள். தூர வானின் நீலம், வெளிச்சமற்ற அறையின் இருள், இரக்கமற்ற வார்த்தையின் சிவப்பு என உன் கண்ணீர் மூன்று நிறங்களின் கலவையாய் வழிந்தோடுகிறது. நீயோ சலனமின்றி சன்னல் புழுதியில் என் பெயரை எழுதிக்கொண்டிருக்கிறாய். 3. சாத்தானின் கைகளில் தேவதை உன்னை சேர்க்கிறார்கள். சில வருட தனிமைத்தவம் உடைத்து வெளிவருகிறேன் நான். சாத்தானும் தேவதையும் சொர்க்கத்தில் மிதப்பதை காண்கிறேன். சாத்தானை ஆசிர்வதித்து தேவதையை சபித்து கடவுளாகிறேன் நான்.

என் சட்டைப்பையினுள்

அது ஒரு மிருகம் கொடூர மிருகம் நெற்றியில் பல் பதித்து தோலுரிக்க ஆரம்பித்து கால் நுனி வரை இழுத்துப் போடும். முழுவதுமாய் எனை சிவப்புப் பாளமாக்கி நக்கும். அந்நக்குதலின் சுகத்துக்காய் கிடந்திருக்கலாம். மிகத் தடிமனான நாக்கு அதற்கு. செங்களரியில் கன்னம் வைத்து அதன் குளிருக்கு இதம் சேர்க்கும். அவ்வப்போது எங்கேனும் ஓடிவிடும். தேடினாலும் கிடைக்காது. திடீரென முன்வந்து பல்லிளிக்கும். எனை முழுவதுமாய் உறிஞ்சக் கெஞ்சினால் குதிகாலில் கோணியூசி குத்தி உறிஞ்சி, உறிஞ்சி எனக்குள்ளேயே துப்பும். எப்போதும் தூங்காது. தலை மேட்டில் அமர்ந்து கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கும். அதனோடு இருத்தல் தரும் சுகம் அலாதியானது. பார்க்க சாது போல என்னை அண்டி நடந்து வரும். பிறர் முன் நான் அதன் முதலாளி போல் நடிப்பேன். என் போலிமை அறிந்தும் காட்டிக் கொடுக்காது ஆதரவாய் அமைதி காக்கும். எங்கள் விசுவாசத்தை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. கைமாறிக் கொண்டேயிருப்போம் எனக்கான அதுவும் அதற்கான நானும்.

ஒரு கவிதை

ஒவ்வாத வேலையிலிருந்து மாநகரப்பேருந்தில் திரும்பிக்கொண்டிருக்கிறேன் அளித்த வாக்குறுதிகளைப் போன்ற நெரிசலில் சிக்கி, அறையில் இன்னும் கழுவப்படாமல் இருக்கும் பாத்திரங்களைப் போன்ற நெடியிலிருந்து தப்பி, முட்டி முன்னேறி, ஜன்னலருகே முகம் வைத்தேன் கொஞ்சம் காற்றையும், நிறைய சந்தோசத்தையும் அளித்துக் கடந்துகொண்டிருக்கிறது எங்களூர் பேருந்து

பிக் பாக்கெட்

சிறுகதை பர்சைத் தொலைத்திருந்தார் சங்கரன். அவர் பொதுவாக காரில் போகும் நபர். இன்று வண்டி திடீரென்று சப்பையான தனது வலது முன்பக்கச் சக்கரத்தைக் காட்டி 'சாரி பா' என்றது. ஸ்டெப்னி மாற்ற நேரம் இல்லாததால், வெறுத்துப் போய், மூன்று வருடங்களில் முதன் முறையாக மாநகராட்சிப் பேருந்தில், நெரிசலில் பயணித்தார். அப்படி ஒண்ணும் சிரமமாக இல்லை. எத்தனை பேர்! எத்தனை முகங்கள்! ஒவ்வொன்றிலும் கவலை, மகிழ்ச்சி, ஆர்வம், சோர்வு என பலவகை உணர்ச்சிகளுடன் முகங்கள்! டிக்கெட் வாங்கிக்கொண்டு ஒரு பொறுப்புள்ள, கண்ணியமான குடிமகனின் இலட்சணங்களுடன் ஓட்டுனர் இருந்த திசையில் முன்னேறிக் கொண்டிருந்தார். சைதாப்பேட்டை தாண்டி, நந்தனத்தை நெருங்கியது பஸ். என்னவோ சொல்லமுடியாத உணர்ச்சி திடீரென்று. அனிச்சையாகப் பான்ட் பாக்கெட்டைத் தடவிப் பார்த்தார். ஆ, பர்ஸ் காணோம். சுற்று முற்றும் பார்த்ததில், அருகில் இருந்தவன் கையில் என்னவோ இருந்தது. நழுவி அவன் பின்னால் சென்றதைப் பார்த்து விட்டார். உடனே, சப்தமாக 'பிக் பாக்கெட் பிக் பாக்கெட்' என்று கூவி, ஒரு அதிர்ச்சி உண்டாக்கினார். பஸ் நிறுத்தப்பட்டது. அவர் காட்டியதன் பேரில் அந்த பிக் பாக

தக்கைகள் அறியா நீரின் அடியாழம்

9.00 மணி அலுவலகத்திற்கு 9.10 9.15 ஏன் 10.30க்குக்கூட வருகிறீர்கள் நான் 8.00 மணிக்கே வருகிறேன் அறைத்தனிமையின் அவலம் நீங்க. வெண்டைக்காய் புளிக்குழம்பு கத்திரிக்காய் காரக்குழம்பு முள்ளங்கிச் சாம்பார் முட்டைப் பொறியல் முள்ளில்லா மீனும் தென்படும் சில பொழுது உங்கள் மதிய உணவில் எனக்கு மாதவன் நாயரின் உப்பு, சப்பு, உரைப்புமற்ற மற்ற நாளை போலவே சவ சவ சாப்பாடு மாலையில் திரும்பியடைய அவரவருக்கென்றொரு கூடு தார்சு வேய்ந்தேர் அல்லது ஓடு வேய்ந்தோ குறைந்தபட்சம் கூரை வேய்ந்தோவானும். எனக்கிருப்பது ஒரு பொந்து ஏன் போகவேண்டும் அங்கு எனவெழும் கேள்வியோடு உங்கள் இணைகளோடு கூடி முயங்கிப் பெற்ற வேர்வைத்துளிகள் வடிய விரியத் திறக்கிறீர்கள் உங்கள் சாளரங்களை. என்றேனும் நினைத்ததுண்டா விளக்கணைத்ததும் கவிழும் இருட்டைப்போல என் போல்வர் விரகத்தாபமும் ஏக்கப் பெருமூச்சுகளும் செரிந்தது அக்காற்றென. தக்கைகள் அறிவதில்லை நீரின் அடியாழம் ஒரு போதும்.

சில குறிப்புகள் 15

கோவில்பட்டியைச் சேர்ந்த கவிஞர் அப்பாஸ் 49வது வயதில் வெள்ளிக்கிழமை காலை (20.03.2009) இறந்த செய்தியை என் நண்பரும் கவிஞருமான சிபிச்செல்வன் மூலம் அன்றே அறிந்தேன். நான் கவிஞர் அப்பாஸ் அவர்களைப் பார்த்ததாக ஞாபகமில்லை. ஆனால் அவர் கவிதைகளை அறிவேன். 'வரைபடம் மீறி' என்ற அவர் கவிதைத் தொகுதிக்கு விருட்சத்தில் விமர்சனம் எழுதியதாகக் கூட ஞாபகமிருக்கிறது. அவருடைய மரணத்தைப் பற்றிய செய்தி தினமணி நாளிதழில் ஒரு மூலையில் வெளியிட்டிருந்தார்கள். மற்ற பத்திரிகைகள் அதைக்கூட கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான் அப்பாஸ் வாழ்க்கை முடிந்துவிட்டது. பல எழுத்தாளர்களுடைய மரணம்கூட இப்படித்தான் யார் கவனத்தையும் கவராமல் போய்விடுகிறது. மிகச் சிறிய வட்டத்தில்தான் அப்பாஸ் மரணமடைந்துவிட்டார் என்பது தெரியும். சமீபத்தில் இப்படி மறைந்த இன்னொரு கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன். அப்பாஸ் நினைவாக அவருடைய கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன். உன் முகம் உன்னைப் பற்றிய என் பிரக்ஞை கடிகார முட்களை தாண்டிய பூமியின் இருப்பு. நடக்கும் கால்களில் தெரியும் உன் முகம், ஒரு பாதி. இருப்பை அறியாது உள்வளரும் மரம் நானும், நீயும் காணாத காற்று அறிந்ததில் தெரிந்த

மூன்று கவிதைகள்

1. இன்று இன்று சமையல் கியாஸ் தீர்ந்து விட்டது. இன்று மார்கழி மாதக் குளிர் சில்லிட்டு இருந்தது இன்று சாலையில் பார்த்த ஒருவன் இடதுகண் மூடிக் கட்டுப் போட்டிருந்தது இன்று (இதுவரை சிரிக்காத) நண்பன் ஒருவனின் இடைவிடாத சிரிப்பைக் காண நேர்ந்தது இன்று வந்த கடிதமொன்றில் நண்பன் தன் முதல் மனைவியின் நினைவு நாள் நாளை என்று எழுதியிருந்தான். இன்று எழுத முயன்ற கவிதையில் பெரிதும் சோகம் கவிழ்ந்தது இன்று இந்தக் கவிதை தானே தன்னை எழுதிக்கொண்டது 2. இன்ன பிறவும் ..... அநேகமாய் முடிவதில்லை அழகைப் பற்றிய அவதானிப்பை அப்படியே கைமாற்றி விட. அதிகபட்சம் முடிவதெல்லாம் அதைப்போல இது என்பதாய் இன்னொன்றை இணையாய்ச் சொல்லி இப்படித்தான் இருக்கிறது. இன்னபிறவும் இவ்வாழ்வில். 3. பேச்சுத்துணை கடிமணம் வாழ்வில் கட்டாயத் தேவையா யென்றெல்லாம் கடிவாளமிட்ட மனதோடு ஒத்தையில் இருந்தவனை ஒருவாறு பேசிச் சரிகட்ட நான் உட்பட நண்பர்கள் பலரும் எடுத்துச்சொன்ன பலவற்றில் எகோபித்த ஒன்று பின்பகுதி வாழ்க்கையில் பேச்சுத் துணைக்கென்றாவது பெண்ணொருத்தி வேண்டுமென்பது. மணமாகிச் சில மாதங்கள் கழித்து எதேச்சையாய் எதிர்ப்பட்டவனிடம் எப்படிப் பேச்சுத்துணை என்றேன் எ

நான்கு கவிதைகள்

அழைக்கும் பிம்பம் தண்ணீரில் தன் பிம்பம் தழுவுதல் தற்கொலையா (ஆத்மாநாம் நினைவாக) இரக்கப்படாதீர்கள் தனிமையிலேயே விட்டுவிடுங்கள் என் பேரன்பும் மரக்கிளையினின்று சுழன்றபடி உதிரும் பழுப்பு இலை போன்ற என் பிரிவும் கொன்றுவிடக்கூடும் உங்களை. விட்டுச்சென்றபின் தத்தித் தத்தி வல இட உள்ளங்கால்களால் அழைத்து வந்த கூழாங்கல்லை தாட்சண்யமின்றி விட்டுச்சென்றதும் திருப்பத்தில் மறையும் வரை பார்த்திருந்தது ரயில் மறையும் வரை கையசைக்கும் வழியனுப்ப வந்தவளைப்போல. தலைப்பூ சூடாத கவிதா புத்தரின் போதனைகள் வாசித்து மூட பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது எறும்பு. வாசலில் சொற்களின் யாசகம் கவிதையில் இடம் கேட்டு பார்க்காதது மாதிரி கடந்துவிடுகிறேன். எட்டிப்பிடிக்க முயல ரொட்டித்துண்டை இன்னும் உயர்த்த முயல உயர்த்த முயல எவ்வளவு குரூரம் நாயாயிருக்கவே சும்மா விட்டது. மாமரக்கிளையில் அளவளாவியபடியிருந்த சிட்டுக்குருவி கிளம்புகிறேன் என்பதாய் தலையசைக்க எப்போது பார்க்கலாம் என்றதற்கு தெரியாதென தலையசைத்து பறந்தது. விழி எழு கழி போ வா வாழ்வெனும் புனைவு பழகு புணர் வளர் பொருளற்ற பொருளீட்டு மாண்டுபோ

வைதீஸ்வரனின் இரண்டு கவிதைகள்

த மிழில் மூத்த கவிஞர் வைதீஸ்வரன். கவிதைகள் மட்டுமல்லாமல், ஓவியத்திலும் நாட்டமுடையவர். சமீபத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை நவீன விருட்சம் இதழுக்காகப் பெற வேண்டுமென்று நினைத்தேன். அப்படி நினைத்தபடி என்னால் போக முடியவில்லை. காரணம் 7.30 மணியிலிருந்து மாலை 7.30 மணிவரை உள்ள அலுவலக நிர்ப்பந்தம். மேலும் நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் சென்றுவிட்டால் வேறு எங்கும் என்னால் செல்ல முடியவில்லை. அதனால் ஒருநாள் அலுவலகத்திலிருந்து அவர் வீட்டிற்குச் சென்றேன். அவர் வீட்டிலுள்ள எல்லோரையும் எனக்குத் தெரியும். குறிப்பாக வைதீஸ்வரனின் தாயாரை. அவருக்கு வயது 90க்கு மேல் இருக்கும். வைதீஸ்வரனும் நானும் சந்திக்கும்போது (அதுவே ரொம்ப ரொம்ப அதிசயமாக நடக்கக் கூடியது) அவர் வீட்டு வராந்தாவில் அமர்ந்து சில நிமிடங்கள் அவருடைய படைப்புகளை வாங்கிக்கொண்டு சென்று விடுவேன். அவர்கள் வீட்டிலுள்ளவர்களைப் பொதுவாகப் பார்க்க மாட்டேன். இந்த முறை வைதீஸ்வரனுக்குப் போன் செய்தபோது, அம்மா பாத்ரூம் போகும்போது கீழே விழுந்துவிட்டார் என்று குறிப்பிட்டார். எனக்கு கேட்க என்னவோ போல் இருந்தது. வயதானவர்கள் கீழே விழும்போது உ

இலக்கியக் கூட்டம்

இ ந்த ஞாயிற்றுக்கிழமை (15.03.2009) எங்கே போவது என்று யோசித்தேன். அய்யப்பமாதவனின் நிசி அகவல் விமர்சனக் கூட்டத்திற்குச் செல்லலாம் என்று தோன்றியது. மாலை 5.30க்குக் கூட்டம். ஆனால் இலக்கியக் கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்குவது இல்லை. அதுதான் வழக்கம். அதனால் நான் 5.30 மணிக்கு அங்கு செல்லவில்லை. தனியாகப் போகப் பிடிக்கவில்லை. கூட ஸ்ரீனிவாஸனைக் கூப்பிட்டேன். நண்பர் ஸ்ரீனிவாஸன் வர ஒப்புக்கொண்டார். பொதுவாக என்னால் ஒரு வகுப்பில், இலக்கியக் கூட்டத்தில் தொடர்ந்து பேசுவதைக் கேட்டுக்கொண்டே உட்கார சிரமமாக உள்ளது. அலுமினிய கிளப், போட் கிளப் அருகில் என்ற இடம் என் மனதை மிகவும் கவர்ந்தது. முன்பே ஒருமுறை அலுவலக நண்பர் ஒருவரின் குழந்தையின் பிறந்த தினக் கொண்டாட்டத்திற்கு அங்கு சென்றிருக்கிறேன். அய்யப்பமாதவனின் கூட்டத்திற்கு நானும் ஸ்ரீனிவாஸனும் சற்று தாமதமாக வந்து சேர்ந்தோம். ஞானக்கூத்தன் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பேச்சை முடிக்கும் தறுவாயில்தான் நுழைந்தோம். அவர் பேசி முடித்தவுடன் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள். நேசன் பேச ஆரம்பித்தார். மிகவும் நிதானமாக ஒவ்வொரு வரியாக யோசித்து யோசித்துப

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

லூயிஸ் சிம்ஸன் அன்பு : எனது கருவி அன்புதான் எனது கருவி அதுதரும் தப்பித்தல் மூலம் நாம் உதித்தெழுகிறோம் நாம் உண்டாக்கும் ஒலி அதிர்வுகளின் மேல் நாமே பயணம் செய்கிறோம். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒரு நட்சத்திரத் துளிரில் கண்ணி வயப்பட்டு, பிரமித்து அமரத்துவம் பெற்ற ஆன்மாவாகின்றனர் ஹலோ டோ க்கியோ ஹலோ யூஜூரு கரகரி என் குரல் கேட்கிறதா? நகரங்களிலேயே இருளடர்ந்த சான்பிரான்சிஸ்கோ, என் குரல் உனக்குக் கேட்கிறதா? இதோ, ஆதியந்தமற்ற வெளி இதோ, ஆதியந்த மற்ற ஏகாந்தம் இவற்றுள் ஏதும் உனக்கு விசித்திரமாய்ப் படுகிறதா? இங்குள்ளவர் மிகப் பலர் இதோ காந்தி இதோ யேசு மோஸஸ் இன்னும் பல செயல் திறனாளிகள் நட்சத்திர ஒளியின் மூலம் இந்த இரவு தீவிரம் பெற்றுள்ளது என் உலகைக் கண்டுபிடிக்க இந்த இரவினூடே நான் போய்க் கொண்டிருக்கிறேன் தமிழில் : கால. சுப்ரமணியம் நவீன விருட்சம் இதழ் 6 - OCTOBER - DECEMBER 1989

வேண்டுகோள்

நண்பர்களே, வணக்கம். நவீன விருட்சம் 84வது இதழ் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இதழுக்கான படைப்புகளை navina.virutcham@gmail.com மூலம் TSCu Inaimathi மூலம் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் அழகியசிங்கர்

நான் கடவுள் படம் பற்றி சில வார்த்தைகள்...

சமீபத்தில் நான் பார்த்த படம் 'நான் கடவுள்'. முதலில் நான் சாதாரணமாக எல்லோரையும் போல் சினிமா பார்க்கிறவன். சினிமாவைப் பற்றிய நுணுக்கங்கள் தெரிந்தவன் இல்லை. ஆனால் நான் பார்த்த சில படங்களில் கூட கிணறு செட் போட்டிருந்தால், கதாநாயகனோ யாராவது வசனம் பேசிக்கொண்டிருந்தால் கிணறு செட் ஆடும். கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்த ஒரு படம் என்று நினைக்கிறேன். அதேபோல் ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படம் நினைக்கிறேன். அதில் வரும் கதாபாத்திரங்கள் வசனம் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவன் பாதியில் எழுந்து வந்துவிட்டேன். தமிழ் படங்கள் பார்ப்பதுபோல், சினிமா சங்கம் மூலம் பல நாட்டு படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் எனக்கு எந்தப் படம் சிறந்த படம், எந்தப் படத்தின் டைரக்டர் சிறந்த டைரக்டர் என்ற அறிவு இல்லை. அந்த அறிவு மட்டும் இருந்திருந்தால் நானும் சினிமாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பேன். இப்போது வரும் தமிழ் சினிமாவில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி புரிந்துகொள்வது அவசியம். ஒரே மாதிரியாக தயாரிக்கப்பட்ட பார்மூலா கதைகளை ஒழித்துவிட்டு வேறுவிதமான படங்க

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

எஸ்.இராமநாதன் குழந்தை நள்ளிரவில் வந்த பூனை கண்டு, பரண் ஏறி அமர்ந்து கொண்டது அது- அதை விரட்டச் சொல்லி நச்சரிக்கும் இவள்முன் என் எல்லாச் சாமர்த்தியங்களும் தோற்றுப்போக, அநேகப் பூனைக்கதைகளைச் சொல்லத் இவள் பயம் உடைபட்டு குழந்தை தூங்கவென்று. நேரம் செல்லச் செல்ல தன் குட்டிக்குப் பால் கொடுத்துத் தூங்குகிற வளர்ந்த பெரிய பூனையாய் இவள் மாறக்கண்டு ஒடுங்கிப் போனேன் பயத்தில் நான்.

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

மார்ஸிலிஜஸ்மார்டினைடிஸ் நித்தியம் அதிகாலை விழித்த கிழவன் பார்வையில் வாசல்முன் அன்றைய சுமை. நெருப்பு வளர்த்தல், கட்டளையிடல் வாளிகளின் ஒலி கிழவனின் பெருமூச்சு அனைத்துமே அடக்கம் அச்சுமையில் அவிழ்க்கப்பட்ட சுமையில் ஆற்றவேண்டிய காரியங்களால் நிறைந்து போனது முற்றம் முழுதும். கதவின் கீச்சொலி வைக்கோலின் குசுகுசுப்பு ஜன்னலின் பளிச்சிடல் கால்நடைகளின் பெருமூச்சு பறவைகளின் இன்னிசை மனிதர்களின் பேச்சரவம் சக்கரங்களின் சடசடப்பு அந்தியும் வந்தது இன்பமயமான நீண்ட அந்திமாலை மூலம் : லிதுவேனியக் கவிதை ஆங்கில வழி தமிழில் : நஞ்சுண்டேஸ்வரன் . நவீன விருட்சம் இதழ் 5 - JULY - SEPTEMBER 1989

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

பாவண்ணன் பூனை காவல் பலிக்கவில்லை தினமும் பால்திருட் எதேச்சையாய்ப் பார்த்ததும் நின்று முறைக்கிறாய் முன்வைக்கவோ பின்வைக்கவோ உனது தந்திரம் புரியவில்லை துடிக்கும் மீசையில் கர்வம் கண்களில் கவியும் குரூரம் உடம்பில் புரளும் முறுக்கு உன் கண்களுக்கு எதுவாய்த் தெரிகிறேன் நான் எலியாகவா எதிரியாகவா @@ சாத்திய ஜன்னல்கள் நடுவில் கசியும் உன்குரல் இரக்கம் மிக்கது சோறு உனக்குப் பிடிப்பதில்லை கறி நான் சமைப்பதில்லை குழந்தையிருக்கும் வீடு பால் மிஞ்சினாலும் கொடுப்பதற்கில்லை நேற்றுவரைக்கும் உன் திருட்டின் ஆட்டத்தால் எச்சரிக்கையானது வீடு இன்றுமுதல் இன்னொரு வீட்டுக்குத் திருடப்போ @@ எச்சில் மீன் தலையைத் துப்ப என் வாசலா கிடைத்தது அதட்டலின் அர்த்தம் குழப்பிவிட்டது உன் நகங்களின் ஆத்திரப்பதிவில் பாதத்தில் கசியும் ரத்தக்கோடுகள் என்ன புரிந்து எகிறினாய் உன் மீன் எனக்கு இரையாகுமா என் வாசல் தூய்மை தவறாகுமா