Skip to main content

Posts

Showing posts from July, 2010

சேகுவேராவின் சேற்று தேவதை

(கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசினை வென்ற சிறுகதை - 2010) யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர் முழுதும் அலைந்தபடியிருந்தாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவள் குளித்து வந்த அழுக்குச் சேற்று வாய்க்கால் மூடப்பட்டுவிட்டது. மூடப்பட்ட காலம் தொட்டு அவள் அள்ளிக்குளிக்கப் பயன்படுத்தும் அகன்ற பெரும் அழுக்குச் சிரட்டையைப் போல, அவளும் தலையில் ஈரம் படாமலே வீதிகள் தோறும் சுற்றி வந்தாள். இத்தனைக்கும் ஊரின் மத்தியில் பெரிய ஆறு, நாணல்களைத் தொட்டபடி ஓடிக்கொண்டிருக்கிறது. அவளுக்கென்று தனி இருப்பிடம் இல்லை. இருட்டிவிட்டால் போதும். எந்த இடத்தில் நிற்கிறாளோ அதற்கு அண்மையிலுள்ள வீட்டின் திண்ணையில், மாட்டுக்கொட்டகையில், கிணற்றடியிலெனத் தங்கிவிடுவாள். அவளால் யாருக்கும் எந்தத் தொந்தரவுமற்ற காரணத்தால் ஊரார் எதுவும் சொல்வதில்லை. இன்னுமொரு காரணம் இருக்கிறது. விடியலின் முதல் கிரணம் கண்டு அவள் விழித்தெழுந்து, எந்த இடத்தில் தங்கினாளோ அந்த இடம், முற்றம், கிணற்றடி என

குற்றச்சாட்டு

தாயிடம் குழந்தை பால் குடித்ததாய்க் குற்றம் சாட்டுகிறார்கள். சக்தி பார்த்த சிவன் தாண்டவமாடியதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் இதயம் ரத்தம் பாய்ச்சுவதாய்க் குற்றம் சாட்டுகிறார்கள். கருவறை மானுடரை அனுமதித்ததாய்க் குற்றம் சாட்டுகிறார்கள் பூ மலர்ந்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள் காவிக்கு அடியில் சதை இருந்ததாய்க் குற்றம் சாட்டுகிறார்கள் திராட்சை மதுவானதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் தங்க மாலையைக் கழுத்து அணிந்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள் கைகள் கொடை வழங்கியதாயக் குற்றம் சாட்டுகிறார்கள் வள்ளுவர் காமத்துப்பால் எழுதியதாய்க் குற்றம் சாட்டுகிறார்கள் கண்கள் இமை திறந்து காட்சி உண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் சுவாசித்தலை அவ்வப்போது செய்ததாய்க் குற்றம் சாட்டுகிறார்கள் காற்றால் இலைகள் அசைந்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

மரம் மாறும் பறவைகள்

ராஜினாமா செய்தவனுக்கு நண்பனாயிருப்பதில் சில சவுகரியங்கள் இருக்கிறது மேலாளர்களின் அரசியல் பற்றி தைரியமாக சொல்லலாம் ஒளித்து வைத்திருக்கும் பணி உயர்வு புத்தகங்களைக் காட்டலாம் சந்திக்கப்போகும் நேர்முகத் தேர்வுகளைப்பற்றி சந்தேகம் கேட்கலாம் நண்பனாய் இருத்தலின் அசெளகரியம் என்பது அவனது புதிய சம்பளத்தை கேட்காமல் இருப்பது கேட்டுவிட்டு கவலைப்படாமல் இருப்பதுo ************ சமீபத்தில் வேலை மாறிப்போன நண்பனொருவன் புதிய அலுவலகத்தைப் பற்றிபேசிக்கொண்டிருந்தான் புதிய நண்பர்களைப்பற்றி புதிய பொறுப்புகளைப்பற்றி புதிய தலைமைகளைப்பற்றி உணவகங்கள் பற்றி பெசன்ட் நகர் கடற்கரையில் அவனுடன் அமர்ந்திருந்த புதிய பெண்ணைப்பற்றி கடைசிவரை சொல்லவில்லை.

மொழி

மொழிதன் இருப்பைக் கலைத்துக் கொள்வதொரு மனப் பிறழ்வில்-ஒரு துயரம் ஒரு மகிழ்வு-ஒரு தாங்கவொணா கணம் கனம் கொண்ட மொழியின் இருப்பு விஸ்வரூபம் பெறுகிறது கானின் வான் மறைத்த கிளைகளோடும் பருத்த தண்டுகளோடும் அது தாவரச் செறிவின் பசிய ஒளிர்வில் மூடுண்டு விரிகிறது. சிள்வண்டு சிறகசைப்பும் நிசப்தம் கொத்தும் பறவை சப்தங்களும் மன வெளியை நிறைத்துப் பரவ அடர்ந்திருக்கும் சருகுகளில் புதைந்து நடக்க மோகம் கொள்கின்றன கால்கள்... பின்னும் மொழியொரு தீராக் கானகம்!

எதையாவது சொல்லட்டுமா / 22

திரும்பவும் ஆத்மாநாம் வந்து விட்டார். திரும்பவும் ஆத்மாநாம் உயிர்தெழுந்து விட்டாரா என்று தோன்றுகிறது. சமீபத்தில் பெருந்தேவி கவிதையைப் படிக்கும்போது அப்படித்தான் தோன்றியது. முத்தம் என்று ஆத்மாநாம் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து பெருந்தேவி அக்கவிதையுடன் தன்னுடைய கூற்றையும் சேர்த்து எழுதியிருந்தார். 30 ஆண்டுகளுக்குமுன் ஆத்மாநாம் இப்படி அவர் கவிதையைத் தொடர்ந்து எழுதியிருந்தால் சந்தோஷப் பட்டிருப்பார். அவர் வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை. அவர் ஒரு பெண்ணுடன் அன்புடன் இருந்தார். உடவே பெண் வீட்டில் அந்தப் பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நடத்தி முடித்து விட்டார்கள். ஆத்மாநாமிற்கு நிறைவேறாத காதல். அவருடைய வியாபாரம் படுத்துவிட்டது. அவர் லாகீரி வஸ்துகள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். மனப் பிறழ்வு ஏற்பட்டு விட்டது. அவரை முப்பது ஆண்டுகளுக்கு முன் 3 முறைகளுக்குமேல் சந்தித்திருப்பேன். முதல் முறை இலக்கு என்ற இலக்கியக் கூட்டத்தில். ஞாநி தங்கியிருந்த பீட்டர்ஸ் ரோடு அடுக்ககத்தில் சந்தித்தேன். நானும் போயிருந்தேன். 'இவர்தான் ஆத்மாநாம்' என்று யாரோ சொன்னார்கள். ஆத்மாநாமை விட ஞா

Two poems

தலைமுறைகள் தாண்டிய பாட்டு பூவுடன் இணைந்த மணம் போல் அழகுடன் கமழ்ந்த திறனால் களபலியான தங்கம்மையே தாயம்மையே அந்தப்புரம் அழைத்து அறநெறி தவறிய கொற்றவனின் கொடும் நீதியில் குமுறிக் கொந்தளித்து பிறவி அளித்த அன்னை மண்ணிலேயே கன்னிகழியா கண்மணிகள் உம்மிருவரை உயிருடன் கரைத்துவிட்டு மலையும் மடுவும் தாண்டி நதியும் கரையும் கடந்து தெற்குத் தெற்கொரு தேசமாம் பசுமைசூழ் வள்ளியாற்றங்கரை இரணியல் வந்து எங்களுடன் பயணித்த சிங்க விநாயகரையும் அவர் பார்வையிலேயே ஒடுப்பறையில் நாகரம்மனையும் நாகரம்மன் சன்னிதியில் தங்கம்மை தாயம்மை உம்மிருவரையும் குடிவைத்தோம் கும்பிட்டோம தலைமுறை தலைமுறைதாண்டிவந்து பகைமறந்து மன்னித்து பாரிடமெங்கணும் மாதர்குல நீதிகள் செழித்தோங்கிட பொங்கலிட்டோம் குரவையிட்டோம் வாழ்த்துறோம் வணங்குறோம காமிரா கண் முதுமையிலும் இனிமை காண உறுப்புக்கள் ஒத்துழைக்காதிருந்தும் வயதேறுவதை பொருட்ப்படுத்தாமல் இளமை மிடுக்கை மனதில் மேயவிட்டு வாழ முயன்றுகொண்டிருக்கையில் குறிப்பிட்ட கோணங்களில் அடிக்கடி படமெடுத்து பத்திரிகைகளில் போட்டு படுகிழமென்று பகிர

இரண்டு கவிதைகள்

01 தொடர்பிலிருந்து நீ விலகிச் செல்லும் ஒவ்வொரு முறையும் பிறிதொரு மார்க்கத்தில் உன்னை பின்தொடர யத்தனிக் கும் வேளையில் நீயாகவே அழைத்துப் பேசி தொடரச் செய்கிறாய் இந்த விளையாட்டை இன்னுமோர் முறையும். O 02 புதிதாய் வந்து நின்றிருந்த காரின் முன்புறம் நெடுநேரம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது மகனின் கையிலிருந்த கல்லொன்றை காண நேர்ந்த பொழுதுக்குள் வரைந்து தள்ளியிருந்தான் நிறைய கோட்டோவியங்களை. சுற்றியிருந்தோரிடமிருந்து ஏதும் சுடுசொல் வருவதற்குள் பட்டென்று சொல்லி ஓடிப்போனான் 'பெரிய ரப்பர் கொண்டு அழித்தால் போய்விடும் அப்பாவென்று.' o

எதையாவது சொல்லட்டுமா / 21

சீர்காழி வந்து 6 மாதம் ஓடிவிட்டது. நேற்று நாகூர் விரைவு ரயில் வண்டியில் படுத்துக்கொண்டிருந்தபோது யோசித்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் இப்படித்தான். பஸ்ஸில் பயணம் செய்வது மோசமாக உள்ளது. கால் வீங்கி விடுகிறது. அப்புறம் சரியாகி விடுகிறது. ரயிலில் பயணிப்பது அப்படி அல்ல. எப்போது ரயில் விடப்போகிறார்கள் என்று காத்திருந்து மே மாதத்திலிருந்து விட ஆரம்பித்து விட்டார்கள். பெரிய அனுகூலம் இது. என்னைப்போல் எத்தனைப் பேர்கள். எத்தனைக் குடும்பங்கள். ஆனால் ரயிலில் எப்போதும் வெயிட்டிங் லிஸ்டில்தான் இடம் கிடைக்கிறது. பின் படுப்பதற்கான இடமாக மாறி விடுகிறது. கலகலவென்று இருக்கிறது ரயில். விதவிதமான பயணங்கள். விதவிதமான மனிதர்கள். நான் ஒவ்வொரு வாரமும் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு வரத் தவறுவதே இல்லை. சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஜீ எஸ் டி ரோடில் ஒரு இடத்தில் ஒரு முஸ்லிம் முதியோரை யாரோ போட்டுவிட்டுப் போய்விட்டார்களாம். அவர் மயக்க நிலையில் ரோடில் இருந்தாராம். பின் அவருக்கு உரிய கவனம் கொடுத்தபிறகு யார் அவருடைய உறவினர்கள் என்பதை அவர் சொல்ல விரும்பவில்லையாம். அவர்களைப் பார்க்க வேண்டும

எதையாவது சொல்லட்டுமா / 20

குற்றமும் தண்டனையும் சமீபத்தில் தி நகரில் உள்ள போதீஸ் கடையில் உள்ள பணத்தைக் கொள்ளை அடித்தச் செய்தியை பேப்பரில் படித்தேன். போதீஸ் மட்டுமல்ல இன்னும் பல சம்பவங்கள். இந்தத் திருடர்களைப் பிடிக்க நல்ல அனுபவமுள்ள பல காவல் துறையைச் சேர்ந்தவர்கள் செயல்பட வேண்டும். கிட்டத்தட்ட கொள்ளையர்களைப் பிடிக்க காவல் துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பலவிதமான பயிற்சிகளை அளிக்க வேண்டும். ஒரு விதத்தில் யார் குற்றவாளிகள் என்று யோசித்தால் எல்லோரும் குற்றவாளிகவே இருக்க நேரிடுமோ என்று தோன்றுகிறது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்தான். லஞ்சம் வாங்குவதும் மற்றும் குற்றமல்ல. லஞ்சம் கொடுப்பவனும் குற்றவாளி. அதுமாதிரி நிலைக்கு ஆளாகிற அரசாங்கமும் குற்றவாளிதான். பணத்தின் மீது பலருக்குப் பித்துப் பிடித்துவிடுகிறது. இப்படிப் பித்துப் பிடிப்பது பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடுகிறது. பித்து என்கிற விஷயமே ஆபத்தானதுதான். 30 ஆண்டுகளுக்குமேலாக நான் வங்கியில் பணிபுரிகிறேன். அங்கு நடக்கும் பல குற்றங்களைப் பார்க்கிறேன். முன்பெல்லாம் கள்ள நோட்டுக்களை அதிசயமாகத்தான் பார்ப்பேன். இப்போது எல்லா நோட்டுக்களையு

புத்தக விமர்சனம்

எழுத்து நாடகம் சினிமா - சோதனைகளும் சாதனைகளும் - ஒரு வரலாற்றுப் பதிவு - ஆசிரியர் எஸ் சுவாமிநாதன் - பக்கம் 176 - விலை ரூ.75 - வெளியீடு இயல் பதிப்பகம், சென்னை 4 கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து படைப்பிலக்கியம், சினிமா, நாடகம், ஆய்வு ஆகிய தளங்களில் இயங்கி வருபவர் ஆசிரியர். 176 பக்கங்களில் ஒரு நூல் எழுதியுள்ளார். ஐம்பது பக்கங்கள் இலக்கியம், 25 பக்கங்கள் நாடகம், 100 பக்கங்கள் சினிமா பற்றி கணையாழியில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். தமிழ் கலாசாரத்தின் அதமப்பொது மடங்கு ரசனை (Lowest Common Denominator) பற்றி பொரிந்து தள்ளியுள்ளார். புத்தகமாக எடிட் பண்ணும்போது அந்த சாடுதல் பகுதிகளைக் கத்திரித்திருக்கலாம்.முதல் கட்டுரை கு.ப.ரா பற்றி. கு ப ரா பற்றி ல.ரா சொன்னது, ந பிச்சமூர்த்தி சொன்னது, சி சு செல்லப்பா சொன்னது, தி ஜானகிராமன் சொன்னது என்று மேற்கோள்களிலேயே பாதி கட்டுரையை ஓட்டி விடுகிறார்.நுருன்னிஸா, தாய், விடியுமா, பெண்மனம் ஆகிய நான்கு கதைகளை கு.ப.ரா எழுதிய கிட்டத்தட்ட எண்பது கதைகளில் சிறந்ததாக சிலாகித்துப் பேசுகிறார் ஆசிரியர்.அடுத்தக் கட்டுரை சுந்தர ராமசாமி பற்றியது. வாழ்க்கை முழுவ