Skip to main content

எதையாவது சொல்லட்டுமா / 22

திரும்பவும் ஆத்மாநாம் வந்து விட்டார்.

திரும்பவும் ஆத்மாநாம் உயிர்தெழுந்து விட்டாரா என்று தோன்றுகிறது. சமீபத்தில் பெருந்தேவி கவிதையைப் படிக்கும்போது அப்படித்தான் தோன்றியது. முத்தம் என்று ஆத்மாநாம் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து பெருந்தேவி அக்கவிதையுடன் தன்னுடைய கூற்றையும் சேர்த்து எழுதியிருந்தார். 30 ஆண்டுகளுக்குமுன் ஆத்மாநாம் இப்படி அவர் கவிதையைத் தொடர்ந்து எழுதியிருந்தால் சந்தோஷப் பட்டிருப்பார். அவர் வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை. அவர் ஒரு பெண்ணுடன் அன்புடன் இருந்தார். உடவே பெண் வீட்டில் அந்தப் பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நடத்தி முடித்து விட்டார்கள். ஆத்மாநாமிற்கு நிறைவேறாத காதல். அவருடைய வியாபாரம் படுத்துவிட்டது. அவர் லாகீரி வஸ்துகள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். மனப் பிறழ்வு ஏற்பட்டு விட்டது.


அவரை முப்பது ஆண்டுகளுக்கு முன் 3 முறைகளுக்குமேல் சந்தித்திருப்பேன். முதல் முறை இலக்கு என்ற இலக்கியக் கூட்டத்தில். ஞாநி தங்கியிருந்த பீட்டர்ஸ் ரோடு அடுக்ககத்தில் சந்தித்தேன். நானும் போயிருந்தேன். 'இவர்தான் ஆத்மாநாம்' என்று யாரோ சொன்னார்கள். ஆத்மாநாமை விட ஞானக்கூத்தன் பெயர்தான் பிரபலம். ழ என்ற பத்திரிகை பிரதிகளை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். எனக்கு ஏனோ அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அடர்த்தியான தலைமுடியுடன் பார்க்க பர்சனாலடியாக இருந்தார். அவர் உருவம் முரட்டுத்தனமதாக இருந்தாலும், மென்மையான உணர்வு கொண்டவர். ழ பத்திரிகையை எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். நானும் விருட்சம் பத்திரிகை வைத்திருந்தால் அப்படித்தான் கொடுத்திருப்பேன். அன்று ஆத்மாநாமைப் பார்த்தேனே தவிர பேசவில்லை. ஆனால் அவரைப் பார்க்கும்போது ஏதேவிதமான சோகம் கப்பிக்கொண்டிருந்தது.


இரண்டாவது முறை ஞாநி திருமண நிகழ்ச்சியில் பார்த்தேன். ஞாநி மியூசியம் தியேட்டரில் எல்லோருக்கும் முன்னால் பத்மாவுடன் சேர்ந்து வாழப் போவதாக அறிவிப்பு செய்தார். எல்லோருக்கும் டீ வழங்கினார். பின் நாடகம் அரங்கேறியது. எனக்கு அப்படிச் சொல்லி திருமணம் செய்து கொண்டதே ஆச்சரியமாக இருந்தது. அந்த சமயத்தில் ஆத்மாநாம் இருந்த இடத்திற்கு நான் வந்து உட்கார்ந்தேன். நகுலனைப் பற்றி நான் ஏதோ கேட்டேன். ஆத்மாநாம் ஏதோ பதில் சொன்னார். அதன் பின் விமலாதித்த மாமல்லனைப் பார்த்தவுடன் எழுந்து போய்விட்டார். மாமல்லனிடம் அவர் கொடுத்தப் புத்தகத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.


மூன்றாவது முறை ஆத்மாநாமை நண்பர் வைத்தியநாதனுடன் பார்த்தேன். அப்போது நான், வைத்தி, ஆத்மாநாம் மூவரும் ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். ஆத்மாநாமிடம் அவருடைய நிஜமே நிஜமா கவிதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம். ஆத்மாநாம் ஆனந்த்தை வீட்டிற்குக் கூப்பிட்டார். மனைவியை அழைத்துக்கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். அப்போதுதான் ஆத்மாநாமின் காகித்தில் ஒரு கோடு, அவரவர் கை மணல், சூரயனுக்குப் பின்பக்கம், நகுலனின் கோட் ஸ்டாண்ட் கவிதைகள் புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். ஆத்மாநாம் புத்தகத்தில் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டேன். ஆனந்த்தும் எழுதிக் கொடுத்தார். நான் கேட்டேன் ஆனந்தை ''இந்த வீட்டிற்கு என்ன வாடகை என்று.'' வைத்தியநாதன் உடனே, ''இதுமாதிரி லெளகீக விஷயங்களைப் பேசாதீர்கள்,''என்று சொல்ல எப்படிப் பேசுவது என்று திகைத்தேன். ஆனந்தின் கவிதை ஒன்றில் சற்றே பறந்து கொண்டிருந்த பறவையைப் பற்றி கேட்டேன். பின் அங்கிருந்து நான், வைத்தியநாதன், ஆத்மாநாம் மூவரும் அண்ணாசாலையில் உள்ள உடைகள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றோம். ஒன்றும் வாங்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து வைத்தியநாதன் பேசும்போது ஆத்மாநாம் அன்று சரியாய் இல்லை என்று குறிப்பிட்டார்.


ஆத்மாநாமின் பிரச்சினை. உடனடி புகழ். கவிதை எழுதி புகழ் எங்கு கிடைக்கும். அதுவும் உடனடியாக. இகழ் வேண்டுமானால் உடனடியாகக் கிடைக்கலாம். வாழ்க்கையின் நிராசையுடன் வாழ்ந்து வாழ்வை முடித்துக் கொண்டவர் ஆத்மாநாம். எதற்கு இதெல்லாம் சொல்கிறேனென்றால் பெருந்தேவியின் முத்தம் கவிதைக்கான தொடர்ச்சியைப் பார்த்திருந்தால் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.ஆனால் அவர் ஆதரவு அற்று, அன்பு காட்ட யாருமில்லாமலும் தற்கொலை செய்து கொண்டார். பெருந்தேவி திரும்பவும் ஆத்மாநாமை நம்மிடம் கொண்டு வந்து விட்டார். இன்றெல்லாம் ஆத்மாநாம் இருந்திருந்தால் 60 வயது இளைஞராக இருந்திருப்பார்.


இதோ பெருந்தேவியின் கவிதையை இங்கு கொடுக்கிறேன்.


முத்தம் கொடுங்கள் முத்தங்களாகக் கொடுங்கள்

(ஆத்மாநாம் பெருந்தேவி)


பரபரத்து இலக்கை நோக்கி
நீங்கள் மற்றவர்கள்
முன்னேறிக் கொண்டிருக்கையில் முழிபிதுங்கித் திணறுகையில்
உங்கள் நண்பி வந்தால்
உங்கள் அன்பனைக் கண்டால்
எந்தத் தயக்கமும் இன்றி விழி சோர
இறுகக் கட்டித் தழுவி சொல்லும் தடுமாறி
இதமாக பின்னர் ஞாபகமும்
தொடர்ந்து
முக்குளிக்க
நீண்டதாக பால்வீதியினும் நீள

முத்தம் கொடுங்கள் அமுதம் பெறுங்கள்

உங்களைப் பார்த்து பொறாது
மற்றவர்களும் பார்த்தும்
பாராது
அவரவர்
வழிசெல்பவரும்
நண்பிகளுக்கு முத்தம்
அன்பர்களுக்கு அமுதம்
கொடுக்கட்டும்
கொடுப்பர் அதேபோல்
விடுதலையின் சின்னம் முத்தம் விடுபட்டதன் சின்னம் முத்தம்
முத்தம் கொடுத்ததும் அழிவில்லை காண்
மறந்துவிட்டு
பிறவாநிலையின்
சங்கமமாகிவிடுவீர்கள்
ஒரே புள்ளியில்
பஸ் நிலையத்தில் வெயிலின் ல்லும் உருக
ரயிலடியில் காத்திருப்பின் காலும் பூபூக்க
நூலகத்தில் உதவாப் புத்தகங்களுக்கிடையில்
நெரிசற் பூங்காக்களில் பட்டுப்போன செடிகளின் நடுவில்
விற்பனை அங்காடிகளில் கோயில்களில்
வீடு சிறுத்து டி.வி. பெருத்த அறைகளில்
நகர் பெருத்த மனம்சிறுத்த தருணங்களில்
சந்தடி மிகுந்த தெருக்களில் தனியெனும் பாலையில்
முத்தம் ஒன்றுதான் ஒரே வழி முத்தமே அடைக்கலம்
கைவிடாதீர்கள் முத்தத்தை கைவிடப்படாதீர்கள் முத்தத்தால்
உங்கள் அன்பைத் தெரிவிக்க அன்பிலாத நோய் தீர
ஸாகஸத்தைத் தெரிவிக்க அவநம்பிக்கை சாவு காண
இருக்கும் சில நொடிகளில் தனதற்ற
உங்கள் இருப்பை நிரூபிக்க மரபான
முத்தத்தைவிட முத்தம்போலும்
சிறந்ததோர் சாதனம் தீராத தீர்வு
கிடைப்பதரிது அரிது அரிது
ஆரம்பித்து விடுங்கள் ஆரம்பத்திலேயே
முத்த அலுவலை உதட்டின் கடமையை
இன்றே நந்நாள்
இப்பொழுதே நற்பொழுது
இக்கணமே பொற்கணம்
உம் சீக்கிரம் பார்த்து நழுவ விடாதீர்கள்
உங்கள் அடுத்த காதலி அடுத்தடுத்து
காத்திருக்கிறாள் அன்பின் களப்பணியில்
முன்னேறுங்கள் காலத்தைக் கிடப்பில் போட்டு
கிறிஸ்து பிறந்து ம்
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து ம் தயக்கமேன்
இருபத்தியோறாம் நூற்றாண்டை பல்லாண்டு பாடுவோம்
நெருங்கிக் கொண்டிருக்கிறோம் முத்தமிட்டடைவோம்
ஆபாச உடலசைவுகளை ஒழித்து குத்துப்பாட்டுகளை மறந்து
சுத்தமாக வரமாக
முத்தம் பரமாக
முத்தத்தோடு முத்தம் முத்தங்காண முத்தம்
என்று இப்போதே
முத்த சகாப்தத்தைத் துவக்கலாம்
துவங்குங்கள் துவங்கியாயிற்று.

Comments

Popular posts from this blog