Skip to main content

புத்தக விமர்சனம்
எழுத்து நாடகம் சினிமா - சோதனைகளும் சாதனைகளும் - ஒரு வரலாற்றுப் பதிவு - ஆசிரியர் எஸ் சுவாமிநாதன் - பக்கம் 176 - விலை ரூ.75 - வெளியீடு இயல் பதிப்பகம், சென்னை 4


கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து படைப்பிலக்கியம், சினிமா, நாடகம், ஆய்வு ஆகிய தளங்களில் இயங்கி வருபவர் ஆசிரியர். 176 பக்கங்களில் ஒரு நூல் எழுதியுள்ளார். ஐம்பது பக்கங்கள் இலக்கியம், 25 பக்கங்கள் நாடகம், 100 பக்கங்கள் சினிமா பற்றி கணையாழியில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். தமிழ் கலாசாரத்தின் அதமப்பொது மடங்கு ரசனை (Lowest Common Denominator) பற்றி பொரிந்து தள்ளியுள்ளார். புத்தகமாக எடிட் பண்ணும்போது அந்த சாடுதல் பகுதிகளைக் கத்திரித்திருக்கலாம்.முதல் கட்டுரை கு.ப.ரா பற்றி. கு ப ரா பற்றி ல.ரா சொன்னது, ந பிச்சமூர்த்தி சொன்னது, சி சு செல்லப்பா சொன்னது, தி ஜானகிராமன் சொன்னது என்று மேற்கோள்களிலேயே பாதி கட்டுரையை ஓட்டி விடுகிறார்.நுருன்னிஸா, தாய், விடியுமா, பெண்மனம் ஆகிய நான்கு கதைகளை கு.ப.ரா எழுதிய கிட்டத்தட்ட எண்பது கதைகளில் சிறந்ததாக சிலாகித்துப் பேசுகிறார் ஆசிரியர்.அடுத்தக் கட்டுரை சுந்தர ராமசாமி பற்றியது. வாழ்க்கை முழுவதும் சு.ரா என்ன தேடினார் என்று தெரியவில்லை. அந்தத் தேடலின் சக பங்குதாரர்களாகத்தான் இலக்கியவாதிகளை அவர் கருதினார் என்று நினைக்கத் தோன்றுகிறது. விருந்தினரை அவர் அனிச்ச மலர்களாக கருதினார் என்று சு.ராவின் நற்பண்புகளைப் பாராட்டுகிற எஸ்.சுவாமிநாதன் அவருடைய எழுத்தில் நேர்மை இருந்ததற்கு அவர் சில ஆண்டுகள் எழுதாமல் இருந்ததை உதாரணமாய்க் காட்டுகிறார். அவரது வாழ்க்கைக்கான முத்தாய்ப்பான எழுத்தை அவர் எழுதவில்லையோ என்று தோன்றுகிறது என்று எஸ்.சுவாமிநாதன் அங்கலாய்க்கிறார். சு.ராவின் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள், அவர் தமிழில் மொழிபெயர்த்த சில வெளிநாட்டு கவிஞர்களின் கவிதைகள், இவற்றைப் பாராட்டும் கட்டுரை ஆசிரியர் அவரது நூல்கள்பற்றி பிறர் வைத்த எதிர்மறை விமர்சனங்களை பட்டியல் போடுவது நம்மை மருள வைக்கிறது.ரேவதி வர்மா என்பவரின் சிறுகதைத் தொகுப்பு நூலை விமர்சனம் செய்திருக்கிறார் ஆசிரியர். ரேவதி வர்மாவா? ரேவதி சர்மாவா? அச்சுப்பிழை நம் கண்ணை உறுத்துகிறது.மணிக்கொடி சீனிவாசன் 1930களில் எழுதிய பத்திரிகைக் கட்டுரைகளைத் தொகுத்து, அவர் மகள் தொகுத்து நூலக வெளியிட்டிருக்கிறார். இதைப்பற்றி ஆசிரியர் பாராட்டி ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். பத்திரிகை எழுத்து என்பது Ephemeral தற்காலிகமானது. கால வெள்ளத்தில் கரைந்து போகக்கூடியது. படைப்பு இலக்கியமோ காலம் கடந்து நிற்பது. யாராலும் படிக்கப் படாதது என்ற ஆஸ்கர் வைல்டின் cynical வரிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.நாடகம் பகுதியில் நடனக் கலைஞர் அனிதா ரத்னத்தின் நாச்சியா கனவுகள் நாட்டிய நாடகம் பற்றி ரசித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார் ஆசிரியர்.இன்னொரு கட்டுரை சத்தியவான் சாவித்திரி இசை நாடகம் பற்றிய பாராட்டுக் கட்டுரை. உலக மயமாதல், அதனுடைய வெள்ளத்தில் அடித்துச் செல்லும் பலவற்றில் சொந்த மண்ணில் கலாச்சார வேர்களும் சேர்கிறது என்கிற வாதத்தை வேறொரு இடத்தில் பதிவு செய்யும் ஆசிரியர், இசை நாடக மரபை புதுப்பிக்க வேண்டுமென்று வாதிடுவது பொருந்தாத ஒன்றாக எனக்குப் படுகிறது.நூறு பக்கங்கள் சினிமா பற்றி ஆசிரியர் எழுதி உள்ளது மிகுந்த சுவாரஸ்யமான பகுதி. Randor Guy போன்ற வெற்று வரலாற்றுப் பதிவாக இல்லாமல் தீர்க்கமான நுணுக்கமான அலசலுக்கு தமிழ் இலக்காக்கி ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர்.கமலஹாசனின் விருமாண்டி, சேரனின் தவமாய் தவமிருந்து, சஞ்சய் லீலா பன்ஸாலியின் ஹிந்தி சினிமாவான Black பற்றிய அலசல்களை என்னைக் கவர்ந்தன.கண்ணகி, பராசக்தி, ஒளைவையார், எதிர்பாராதது, அந்த நாள், அமரதீபம், நாடோ டி மன்னன், பதிபக்தி, மாலையிட்ட மங்கை, கல்யாணப் பரிசு, பாகப்பிரிவினை, வீரப்பாண்டிய கட்டப்பொம்மன், படிக்காத மேதை மீண்ட சொர்க்கம் போன்ற படங்களை தமிழ் சினிமாவைப் பற்றிய பேச வைக்கிற படங்களாக இரண்டு இடங்களில் பட்டியிலிடும் ஆசிரியர், அவற்றின் நிறைகுறைகளை விரிவாக தனது வரப்போவதாக அறிவித்துள்ளார். நம்முடைய சினிமாவும், உலக சினிமாவும் என்ற நூலில் எடுத்துரைப்பார் என்று நம்புகிறேன்.நானும் நாடகங்களும் என்று மறுவாசிப்பில் நவீன தமிழ் இலக்கியம் என்றும் வேறு இரு நூல்களை எழுதத் திட்டமிட்டுள்ள ஆசிரியரின் இந்த முயற்சி வாசகர்களை ஈர்க்க வேண்டும், ஆசிரியரின் பிற நூல்களை அவர்கள் வாசிக்க தயாராக வேண்டும்.

Comments

Popular posts from this blog