Skip to main content

அப்பாவின் நினைவு நாள்

 வாழ்க்கை அனுபவங்கள்

அழகியசிங்கர்

துளி – 233


புத்தகக் காட்சி முன்னிட்டு இந்த முறை இதுவரை 7 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இன்னும் நிறையா புத்தகங்கள் கொண்டு வரவேண்டும். அவசரம் அவசரமாக எல்லாவற்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் இன்னும் 20 புத்தகங்கள் தயாரிக்க வேண்டிய மெட்டிரியல் இருக்கிறது. நேற்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பு அச்சடித்து வந்தது. புத்தகத்தின் தலைப்பு அப்பாவின் அறை. உண்மையில் என் அப்பாவின் நினைவுதினம் நேற்றுதான். அவருக்கு நடத்தப்போகும் திதியைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோமே தவிர, அவருடைய மறைந்த தினத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளவில்லை. என் நண்பர் சுரேஷ்தான் ஞாபகப் படுத்தினார். அவருக்கு என் நன்றி. அப்பாவின் அறை என்ற கதை அவர் இருப்பை ஞாபகப்படுத்துகிற கதை. அப் புத்தகம் வழியாக அப்பாவும் ஞாபகமூட்டினார். ஆனால் எனக்குத்தான் புரிந்துகொள்ளத் தெரியவில்லை. அப்பாவே மன்னித்து விடுங்கள். அப்பா 2017ஆம் ஆண்டு இயல்பாக வயது முதிர்ச்சி அடைந்ததால் மரணத்தைத் தழுவினார். அப்பா காற்றில் கலந்த சமயத்தில் நான் அப்பா இனி இல்லை என்ற கட்டுரை எழுதியிருந்தேன். அதை இப்போது திரும்பவும் அளிக்கிறேன்.


இனி அப்பா இல்லை


அப்பா எப்போதும் போல் இல்லை. கண்ணை முழிக்காமலிருந்தார். கன்னத்தில் லேசாகத் தட்டி தட்டி காப்பி கொடுத்தேன். குடிக்க விருப்பமில்லாமல் இருந்தார். ஆனால் குடித்தார். கொஞ்ச நேரம் கழித்து கஞ்சி கொடுத்தேன். திரும்பவும் அப்பா கண்ணை முழிக்கவில்லை. லேசாகத் தட்டினேன். கையை உயரத் தூக்கினேன். லேசாக முணுமுணுத்தார். பின் கஞ்சியைக் கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவரை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

புத்தகக் காட்சி ஒட்டி ஒரு விவாதம் எனக்கும் மனைவிக்கும் நடந்தது. ‘அப்பா சரியாயில்லை. நீங்கள் இரண்டு மணிநேரம்தான் அங்கு இருக்க வேண்டும்,’ என்று. நானும் சரி சரி என்றேன். ஆனால் மனதிற்குள் அப்பா புத்தகக் காட்சி வரை இருப்பார் என்றுதான் நினைத்தேன்.

அவர் படுத்தப் படுக்கையாக ஒரு வருடமாக இருந்து கொண்டிருந்தார். இரவு நேரங்களில் அவர் சத்தம் போடுவார். நான் ஓடிப்போய் அவர் கையைப் பிடித்துக்கொள்வேன். ‘பயமாய் இருக்கிறதடா’ என்பார். நான் பயப்படாதே என்பேன். ஆனால் நான்தான் உண்மையில் பயந்தவன்.

என் அப்பா ஒரு தைரியமான மனிதர். பாலகுமாரன் என்ற எழுத்தாளர் அவர் அம்மாவிற்கு ஒரு பத்திரிகையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் நானும் அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுத நினைத்தேன். ஆனால் வேண்டாமென்று விட்டுவிட்டேன். என் அப்பா நல்ல மாதிரி. அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. அவருடைய ஆசைகள் குறைவானவை. மிகவும் சாதாரண விஷயங்களில் திருப்தி அடைந்து விடுவார்.

அப்பாவிடம் கேட்டேன் ஒருநாள் : ‘ரமண மகரிஷியைப் பார்த்திருக்கிறாயா?’ என்று. இல்லை என்று சொன்னார். அவருக்கு அதெல்லாம் தோன்றவில்லை. அவர் அதிகம் படித்தவர் இல்லை. ஆனால் அவர் ஒரு முறை க.நா.சு நாவல்கள் போரடிக்கும். படிக்க முடியாது என்று சொன்னது ஆச்சரியம்.

ஞானக்கூத்தனின் ‘பென்சில் படங்கள்’ புத்தகத்தைக்கொண்டு வந்தபோது அதில் உள்ள கவிதைகளைப் படித்து அவரிடமே ரசித்துச் சொல்லியிருக்கிறார். நான் தடித்தடியாய் புத்தகங்கள் வைத்திருப்பேன். எடுத்துப் படிக்க எனக்கு மனசு வராது. அப்பா எடுத்துப் படித்து விடுவார்.

ஒரு முறை அசோகமித்திரன் கதைகள் எல்லாவற்றையும் அவர் படித்து விட்டார். எனக்கு ஆச்சரியம். எதாவது ஒரு கதையைப் பற்றி சொல்லுப்பா என்று கேட்டேன். அவருக்குச் சொல்ல வரவில்û. தி ஜானகிராமன் கதைகளையும் படித்து விட்டார். நான் எழுதும் என் படைப்புகளை அப்பாவிடம் காட்டுவேன்.

ஒரு முறை அப்பாவைப் பற்றியே ஒரு கதை எழுதியிருந்தேன். அவருக்குப் பிடிக்கவில்லை. ‘என்ன எழுதியிருக்கே.?’ என்று திட்டவும் செய்தார். அன்றிலிருந்து நான் எதாவது எழுதினால் தானாகவே விரும்பிப் படிக்க மாட்டார். நான் படிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும்.

முட்டாள்தனமாய்ப் பதவி உயர்வுப் பெற்று சென்னையை விட்டுப் போனவுடன், அப்பாவிற்கு வருத்தமாகி விட்டது. அவர் எங்கள் வங்கித் தலைவருக்குத் தமிழில் நாலைந்து பக்கங்கள் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தி கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.

யாராவது அப்பா தன் பையன் மாற்றல் பெற்றுத் திரும்பவும் சென்னைக்கு வரவேண்டுமென்று கெஞ்சி கடிதம் எழுதுவார்களா? என் அப்பா அதைச் செய்தார். என்னடா இது இப்படித் தவிக்க வைத்துவிட்டு வந்து விட்டேனே என்று எனக்குத் தோன்றும்.

ரிட்டையர்டு ஆவதற்கு முன் இரண்டு வருடம் நான் சென்னைக்கு வந்து விட்டேன். அப்பவும் அப்பா விடவில்லை. மேற்கு மாம்பலத்திலேயே ஒரு கிளை அலுவலகத்தில் என்னை மாற்றும்படி கடிதம் எழுதினார்.

எனக்கு இவர் இதுமாதிரி எழுதியது தெரியாது. அப்பாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். 2014ஆம் ஆண்டு நான் ரிட்டையர்டு ஆகி வந்தபிறகு அப்பாவுடன் நான் முழுக்க முழுக்க இருந்தேன்.

‘நானும் வீட்டிலே இருக்கேன்..நீங்களும் இருக்கீங்க..’ என்றேன். அப்பா முதல் அறையிலிருந்து கடைசி அறை வரை அடிக்கடி சென்று கொண்டிருப்பார். நான் கிண்டல் செய்வேன்.

‘இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் போகிறியா, அப்பா’ என்று. என் எழுத்தாள நண்பர்கள் பலரிடம் அவர் ஹோமியோபதி மருந்துகளைப் பற்றிச் சொல்லிப் போர் அடிப்பார். ஒரு முறை புத்தக ஸ்டாலிற்கு வந்திருந்து என் ஸ்டாலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

போன ஆண்டு ஜøன் மாதம் பிறகு அவரால் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளவே முடியவில்லை. ஆட்கள் வைத்து அவரைப் பார்த்துக்கொண்டோம். அவருக்கு தன் இயலாமை குறித்து வருத்தம். அப்பா ராத்திரி முழுவதும் தூங்காமல் கத்திக்கொண்டே இருப்பார். அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவர் கைகளைப் பற்றிக்கொள்வேன். என் கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக் கொள்வார். அப்பா படுத்திருந்த அறைக்குப் பக்கத்தில் நான் படுத்துக்கொள்வேன். 05.01.2017அன்று அப்பா இறந்து விட்டார். இரவு 9 மணிக்கு. என்னால் இனிமேல் அவர் படுத்திருந்த அறைக்குப் பக்கத்தில் படுக்க முடியாது.

. (06.01.2017)

Comments