Skip to main content

ஒரு கதை ஒரு கருத்து...3

 அழகியசிங்கர்



சுஜாதா


ஒரு கதையில் இரண்டு கதைகள்


ஏன் சுஜாதா எழுதிய இந்தக் கட்டுரையை இவ்வளவு நாட்களாகப் படிக்கவில்லை என்று வருந்துகிறேன். அவர் விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற குறிப்பிட்டதை இப்போது படிக்கும்போது என் கண்ணைத் திறந்து விட்டது போல் தோன்றுகிறது. இந்த வருடம் அவர் பிறந்தநாள் போதுதான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். அவர் விஞ்ஞானச் சிறுகதைகள் என்றால் என்ன என்று எனக்குப் பாடம் நடத்தி விட்டார். நன்றி சுஜாதா அவர்களே!
அழகியசிங்கர் கதைகள் என்ற பெயரில் 664 பக்கங்களுக்கு நான் என் மொத்த கதைகளையும் கொண்டு வந்தேன். அதில் 100 கதைகள் இருக்கும்.
சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற புத்தகம் படித்தபோது நானே 3 கதைகள் விஞ்ஞானச் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். சுஜாதான் கண்டுபிடிக்க வைத்தார். எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. என் கதைகளுக்கு இது கூடுதல் பலம் கொடுக்கிறது நான் விஞ்ஞானச் சிறுகதைகள் என்று என்னமோ நினைத்து யோசனை செய்ததை ஒன்றுமில்லாமல் உடைத்துப் போட்டுவிட்டார் சுஜாதா.
100 கதைகளில் நான் எழுதிய 3 கதைகள் விஞ்ஞானச் சிறுகதைகள். அவற்றை இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். 1. வால் 2. நான்தான் 3. முடிவல்ல. இந்த மூன்று கதைகளும் விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற பிரிவில் இப்போது எடுத்துப் போக விரும்புகிறேன். சுஜாதாவைப் படித்தபிறகு எதையோ கண்டுபிடித்து விட்ட உற்சாகம் எனக்கு.
விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற புத்தகத்திலிருந்து 'ஒரு கதையில் இரண்டு கதைகள்' என்ற தலைப்பில் எழுதிய முதல் கதையை எடுத்துக் கொண்டு வாசித்தேன். அபாரம். 1965ல் இந்தக் கதையை சுஜாதா எழுதி உள்ளார்.
சோழர்கள் சாம்ராஜ்யம் சின்னாபின்னமாகிப் போய் சில நூறு வருடங்களுக்குப் பின்னர் எஞ்சியிருந்த ஒரே பகுதியை ஆண்ட - மிச்சமிருந்த ஒரு சோழனின் ஒரே மகள்.
எப்போதுமே சுஜாதாவிற்கு எழுதிக்கொண்டே வரும்போது நகைச்சுவை உணர்வு தானாகவே வெளிப்பட்டு விடுமென்று தோன்றுகிறது.”
(சோழனுக்கு மற்றொரு மகளும் உண்டு என்று பேச்சு. இதை அந்தச் சோழன் ஒப்புக்கொண்டதில்லை. ஊர்வாய்!)
இளவரசி மேகலா பல்லக்கில் வந்து கொண்டிருக்கிறாள். சோலையிளந் தென்றல் போல, சோமரசக் கவிதை போல இளவரசி மேகலா.
இளவரசியின் கையில் ஓலை இருந்தது. ஒரு மடல். அதை மடல் என்று சொல்வதா, காதல் கடல் என்று சொல்வதா? எழுத்தாணியை இதயத்தில் தோய்த்து, தேவநாதன் எழுதியிருந்தான்.
எழுத்துப்பிழைகளும், இலக்கணப் பிழைகளும் மலிந்திருந்த அந்த லிகிதம் அவளுக்கு ஓர் அலட்சிய முறுவலைத்தான் தந்தது.
அவளுடைய உதவியாளைக் கூப்பிட்டாள் மேகலா. உதவியாளன் செங்கல்வராயன் பணிவுடன் அவள் முன் வந்து நின்றான். அவன் கையிலிருந்த பந்தத்தில் அந்த ஓலையைக் கொளுத்தினாள் இளவரசி.
'பித்துப் பிடித்தவன்' என்றாள்.
தூரத்தில் குளம்பொலி கேட்கிறது. நான்கு கொள்ளைக்காரர்கள். ஒரு கொள்ளைக்காரன் பரியைவிட்டு இறங்கினான். பல்லக்கின் அருகில் இளவரசியை மிரட்டுகிறான். இளவரசியோ யாருக்கும் பயப்படவில்லை. தன் உதவியாளனைக் கூப்பிட்டு சண்டைப் போடச் சொல்கிறாள். உதவியாளன் செங்கல்வராயன் கடைசியாக வாளை உருவியது சென்ற ஆயுத பூஜையின்போது. இப்போது உருவினால் கைப்பிடி மட்டும் வந்தது.
கழுத்தில் மாட்டியிருக்கும் வைர மாலையை மட்டும் கழட்டச் சொல்கிறான். 'முடியாது' என்கிறாள் இளவரசி.
அப்பொழுது மற்றொரு குளம்புச் சப்தம் கேட்டது. கால் விந்திக்கொண்டே வந்தது ஒரு குதிரை.
தேவநாதனைக் கிண்டலாக வர்ணிக்கிறார் சுஜாதா. கொள்ளைக்காரனை வீழ்த்துகிறான் தேவநாதன். இது ஒரு நாடகம்.
"ஆண்டவனே என்னை விட்டுவிடுங்கள். உங்கள் வாள் வலிமைக்கும் தோள் வலிமைக்கும் என்னால் ஈடு செய்ய முடியாது. எனக்கு உயிர் கொடுங்கள் தேவனே. இந்த தொழிலை விட்டுவிட்டு இந்த நாட்டைவிட்டு ஓடிவிடுகிறேன," என்கிறான் கொள்ளைக்காரன்.
"ஓடு என்கிறான்," தேவநாதன்.
"நில்," என்கிறாள் இளவரசி
"நிற்கிறேன்," என்கிறான் கள்வன்.
தேவநாதனை சண்டைக்குக் கூப்பிடுகிறாள் இளவரசி. அவள் முன்னால் தேவநாதனால் சண்டையில் நிற்க முடியவில்லை.
தேவநாதன் உடுக்கை நழுவ ஓடினான் என்று எழுதியிருக்கிறார் சுஜாதா.
முடிக்கும்போதுஇளவரசியின் நினைவில் அந்த ஆசை முகம் என்று முடிக்கிறார். இப்போது இரண்டாம் கதை தொடங்குகிறது.
(இன்னும் வரும்)
Chandramouli Azhagiyasingar

Comments