Skip to main content

பத்திரிகைகள் பலவிதம்....2

ஏப்ரல் மாத இதழ் அந்திமழை



அழகியசிங்கர்



எப்போதும் வித்தியாசமான கெட்டப்பில் வரக்கூடிய பத்திரிகை அந்திமழை வையத் தலைமைகொள் என்ற பத்திரிகை.

புதிய அரசு என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் பல ஆளுமைகளைப் பேட்டிக் கண்டு கட்டுரைகள் வாங்கி வெளியிட்டிருக்கிறார்கள்.

சிறப்புப் பக்கங்களை அலங்கரித்திருப்பவர்கள் பொருளியலாளர் ஜெயரஞ்சன், பேசாரசிரியர் ஜனகராஜன்திலகவதி ஐ.பி.எஸ், ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், பொறியாளர் சா.சாந்தி, மு.செந்தமிழ்செல்வன், மருத்துவர் ஆர் விஜயகுமார், எம்.டி.டி.எம், பிரின்ஸ் கஜேந்திரபாபு, அறப்போர் ஜெயராமன்.

வானவில் என்ற தலைப்பின் கீழ் வாசகர்களின் கடிதங்கள் 4வது பக்கத்திலிருந்து ஆரம்பமாகிறது அந்திமழை. கருத்து செறிவுடன் வாசகர்கள் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். 

பில்லி என்னும் பேரழகி என்ற ஷாஜி எழுதிய சிறப்புக் கட்டுரை நாய்களின் உலகத்தை அறிந்துகொள்ளும் சிறப்பான கட்டுரைதான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

பெல்லி  என்கிற நாய் வளர்ந்த விதத்தை ஆரம்பத்தில் கட்டுரையில் விவரிக்கிறார்.  ஃபெலி க்ஸ் என்பவர் பல இனத்திலான நாய்களை வளர்த்து இனவிருத்தி செய்து விற்பதையும் விவசாயத்தின் ஒரு பகுதியாகச் செய்து வந்தார் என்கிறார் கட்டுரையாளர்.

கட்டுரையாளர் தாமி என்கிற ராஜபாளையம் ஆண் நாயின் குண இயல்புகளுக்கு நேர்மாறானவளாக பெல்லி யைப் பார்க்கிறார்.  

அதை வளர்ப்பதற்கு அவர் படாதபாடு படுகிறார்.  தனிமைதான் தாமியை இவ்வளவு பிரச்சினை பண்ண வைக்குது.  ஒரு பெண் நாய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பெல்லி யை கட்டுரையாளருக்கு அவருடைய நண்பர் ஃபெலிக்ஸ÷ கொடுத்து விடுகிறார். 

பெல்லி  என்ற பெயர் கட்டுரையாளருக்குப் பிடிக்காததால் அதை பில்லி  என்று மாற்றி விடுகிறார்.  ஆரம்பத்தில் பில்லியின் வருகை தாமிக்குச் சற்றும் பிடிக்கவில்லை.  பலமுறை அவளைக் கடித்துக் குதறினான்.  ஒருமுறை அவளது அழகாகத் தொங்கும் இடது காதைப் பலமாகக் கடித்துக் காயப்படுத்தினான்.  அதற்குப் போட்ட களிம்பு மருந்து பலன் தராமல் காது அழுகத் தொடங்கியது. இறுதியில் காதின் அக்காதின் கீழ்ப்பகுதி அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டியதாயிற்று.  

இப்படி இந்தக் கட்டுரை பில்லி  என்ற நாயைப் பற்றி நீண்டு கொண்டே போகிறது.  ஒரு கதை மாதிரி படிக்க படிக்க சுவாரசியமாகச் செல்கிறது.  கருத்தரிக்கவே முடியாத பில்லி  கருத்தரிக்கிறாள்.  ஐந்து குட்டிகளைப் பெற்றெடுத்தாள்.  ஆனால் பரிதாபமாக அளவில் மிகச் சிறிய, சுண்டெலியின் எடைகொண்ட குட்டிகள் பிறந்தன.  எல்லாமே செத்துப் போயின. எல்லாவற்றிடமும் எல்லோருடனும் அவளுக்கு அன்பு...அன்பு...அன்பு மட்டுமே.  கட்டுரை இறுதியில் பில்லி  இறந்ததை நினைத்து பில்லீ..பிலி லீ என்று கதறி அழுகிறார்.

இணையத்தில் என்ன பார்க்கலாம் என்ற தலைப்பின் கீழ் இரா.கௌதமன் டைகர் கோல்ப் உலகின் ராஜா என்று கட்டுரை எழுதி உள்ளார். 2021 பிப்ரவரியில் கார் விபத்தொன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் டைகர் திரும்பவும் பீனிக்ஸ் பறவைபோல் கோல்ஃப் உலகில் தடம் பதிப்பார் என்று நிச்சயம் நம்பலாம் என்கிறார் கட்டுரையாளர்.டைகர் பற்றிய ஆவணப் படத்தில் சாதாரண மனிதன் வெற்றியடைந்த கதை என்று இல்லாமல் டைகர் வுட்ஸ்சின் நிறை, குறை என்று அதைனத்தையும் பேசியிருப்பது சிறப்பு என்று முடிக்கிறார் கட்டுரையை.  

அறிமுகம் என்ற தலைப்பின் கீழ் மதிமலர் 5 புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறார்.  

த.பிரகாஷ் சினிமா என்ற தலைப்பின் கீழ் பல விருதுகளைப் பெற்ற தேன் திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகத்தைப் பேட்டி எடுத்திருக்கிறார். இந்தக் கட்டுரைக்கு 'வலியில் பிறந்த கதை' என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏதோ சினிமாவுக்கு வந்தோம், போனோம் என்று இருக்கக் கூடாது.  நம்மோட கருத்து யாரோ ஒருவருக்காவது பயன்படனும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார் தேன் இயக்குநர்.

உண்மையைத் தேடி என்ற தலைப்பின் கீழ் மதிமலர் சாகித்திய அகாடமி விருது வாங்கிய எழுத்தாளர் இமையம்  பற்றி ஒரு கட்டுரை. 

அந்தக் கட்டுரையில் சில முத்துக்கள்.  பூச்சுகள் இன்றி இயல்பு வாதக் கதைகளாக முன் வைப்பது இமையத்தின் எழுத்துப்பாணி. பெண்ணின் நோக்கில் பார்க்கும்போது பல நுண்ணிய அடுக்குகளைக் கொண்டவை இமையத்தின் படைப்புகள். குறியீட்டுத்தன்மையையோ உள்மடிப்புகளையோ முற்றிலும் துறந்து நேரடித்தன்மையுடன் வாசகனை அணுகக்கூடியவை இவரது சிறுகதைகள் என்று இரண்டு பக்கங்களில் கட்டுரை.  பொதுவாக அந்திமழையில் பெரும்பாலான கட்டுரைகள் இரண்டு பக்கங்களில் முடிந்து விடுகின்றன.

சினிமாவைப் பற்றி கட்டுரைகள் அதிகமாக இருப்பதாகத் தோன்றுகின்றன. 

சினிமா என்ற பிரிவில் இரா கௌதமன் மாபியா ராணி என்ற கட்டுரை எழுதி உள்ளார். கங்குபாய் என்ற பெண் மாபியா ராணியாகத் திகழ்கிறார். வாடிக்கையாளர்களுடன் பிரச்சினை செய்யும் மது என்ற பெண்ணை வெள்ளை நிற உடையில் கருப்பு நிற பெண்ட்லி  காரில் வந்திறங்கும் கங்குபாய் சந்திக்கிறாள்.  விருப்பமில்லாத பெண்களை இந்த தொழிலுக்காகக் கட்டாயப்படுத்தக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர் கங்குபாய்.  மதுவை பாதுகாப்பாக ரத்னகிரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார் கங்குபாய்.  ஹ÷கைன் ஜைதி எழுதிய 'மாஃபியா குயின்ஸ்' ஆப் மும்பை என்ற புத்தத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ள இந்த கங்குபாயின் வாழ்க்கை தற்போது சஞ்சய் லீலா பன்சாலி  இயக்கத்தில் அலியா பட் நடிக்க கங்குபாய் கத்தியவாடி என்ற பெயரில் சினிமாவாக தயாராகி வருகிறது. 

2021 வெல்லப் போவது யார்? என்ற அரசியல் கட்டுரையை திவ்ய பிரபந்த எழுதி உள்ளார்.  நடுநிலை மாறாமல் உண்மைகளை மட்டும் வெளிப்படுத்தும் சிறப்பான கட்டுரை இது. சினிமாவில் பார்த்துப் பார்த்து காட்சிகளைச் செதுக்கும் கமல் பலமாக இடறிய இடம் இது என்று அவர் பரப்புரையில் 300 பில்லி யன் டாலர்கள் என்று உளறியதைக் கிண்டலடிக்கிறார் கட்டுரையாளர். நாலு பக்கங்களில் எழுதப்பட்ட சிறப்பான கட்டுரை இது. கட்டுரையை முடிக்கும்போது ஒரு திருக்குறளோடு முடிக்கிறார்.

தேரான பிறரைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் (குறள் 508)

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது அவர்களது அடுத்த தலைமுறையினரையும் பெரும் துன்பத்தில் தள்ளி விடும்.

காட்சிப்பிழை என்ற தலைப்பில் நான்கு பக்கங்களில் வெளிவந்திருக்கும் அகிலன் கண்ணனின் கதை சுமார் ரகம்.  கதை ஆரம்பிக்கும்போதே முடிவு எப்படி நிகழும் என்று தெரிந்துவிடுகிறது கதையில்.  

50 ஆண்டு இலக்கியச்சிந்தனை அமைப்பின் சாதனையை மு.இராமனாதன் விவரிக்கிறார் பொன்விழா காணும் இலக்கிய அமைப்பு என்ற தலைப்பின் கீழ்.

செய்தி சாரல் என்ற பகுதியில் பல சுவையான செய்திகள். 'படிங்க பாஸ்' என்ற தலைப்பின் கீழ் கூறப்பட்ட செய்தி என்னை யோசிக்க வைத்தது. சுடோகு என்ற சொல் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜப்பானிய எண் விளையாட்டு.  

          சுண்டோகு என்றால் என்ன தெரியுமா? ஏராளமான புத்தகங்களை ஆசைப்பட்டு வாங்கிவிட்டுப் படிக்காமல் குவித்து வைத்திருப்பதற்குப் பெயராம் அது.  எத்தனை பேருக்கு சுண்டோகு பழக்கம் உள்ளது?  இதற்கு நானும் கைகளை உயர்த்துகிறேன்.

புதிய அரசு என்ன செய்ய வேண்டும்;? என்று பல வல்லுநர்கள் கூறிய கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள்.  இந்த இதழில் இது உண்மையிலேயே சிறப்புப் பகுதிதான். 

பத்திரிகையை முடிக்கும்போது தரமான சிஜி என்று திரை வலம் என்ற தலைப்பில் காதம்பரி எழுதி உள்ளார்.  

மொத்தத்தில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் முக்கியத்துவம் தரும் இதழாக இந்த இதழ் திகழ்கிறது.  வாசிக்க வாசிக்க நல்ல அனுபவத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
 

  


Comments