தேவதச்சனின் முழுத் தொகுப்பு
அழகியசிங்கர்
நான் இப்போது எடுத்துக்கொண்டு எழுதப்போகும் கவிதைப் புத்தகத்தின் பெயர் ‘மர்ம நபர்’ என்ற தேவதச்சனின் முழுத் தொகுப்பு.
இது தேவதச்சனின் முழுத் தொகுப்பு. 350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இத் தொகுப்பு ஏப்ரல் 2017ல் வெளிவந்தது. ஆனால் இன்னும் தேவதச்சன் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பார்.
கவிதைகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு கவிதைகள் எழுதுபவர் தேவதச்சன்.
பெரும்பாலும் கவிதைகள் படிக்கும்போது எத்தனைக் கவிதைகளை ஒரு புத்தகத்தில் என்னால் ரசிக்க முடிகிறது என்று யோசித்துப் பார்ப்பேன்.
பலருடைய கவிதைப்புத்தகங்களில் என்னால் பெரும்பாலான கவிதைகளை ரசிக்க முடியவில்லை.
கவிதைகள் எழுதும் பலருக்கும் எதற்குக் கவிதை எழுத வேண்டுமென்று தெரிவதில்லை. கவிதை மாத்திரம் அவர்களுக்குத் தானாகவே வந்து விடுவதாக நினைக்கிறார்கள்.
அதாவது கவிதை அவருடைய பழக்கத்திற்கு ஆளாகாமல் கவிதை செயல்படுவதாக நினைக்கிறேன்.
ஆனால் தேவதச்சன் உணர்ந்து கவிதை எழுதுகிறார். இத்தனை வரிகள்தான் கவிதைக்கு என்று முன்னதாகவே நினைக்கிறார். அல்லது அவருடைய கவிதைகள் குறிப்பிட்ட வரிகளுக்குப் பின்னால் போகவிடுவதில்லை.
மேலும் அவர் கவிதைகளைப் படிக்கும்போது ஒவ்வொரு முறையும் ஒரு கவிதையைப் படித்துவிட்டுக் கடக்கும்போது திரும்பவும் கடந்து போன கவிதைக்கே மனம் திரும்பப் போய் விடுகிறது ஏன் படிக்கிறோம் என்ற அலுப்பே ஏற்படுவதில்லை.
அவர் கவிதைகள் உள்முகத் தேடல்கவிதைகள். இன்று பல வகைமைகளில் கவிதைகள் எடுத்துக்கொண்டு வரலாம். எல்லா வகைமைகளிலும் கவிதைகளைப் படிக்கப் படிக்க அலுத்துப் போக நேரிடும்.
ஆனால் தேவதச்சன் கவிதைகள் அலுப்பதில்லை. ஏனென்றால் அவருடைய கவிதைகள் உள்முகத் தேடல் கவிதைகள்.
கவிதைகள் எழுதுபவர்கள் எல்லோரும் அவர்களை அறியாமலேயே உள்முகத் தேடல் கவிதைகள் எழுதியிருப்பார்கள். சில கவிதைகள் தவிர சாதாரணமாகப் பல கவிதைகள் எழுதியிருப்பார்கள்.
ஒரு கவிதைப் புத்தகம் முழுவதும் பெரும்பாலும் உள்முகத் தேடல் கவிதைகள் எழுதியிருப்பவர் தேவதச்சன்.
பெரும்பாலோர் கவிதைகள் என்ற பெயரில் கருத்துக்களைக் கொட்டியிருப்பார்கள். சிலர் காதல் வசப்பட்டு காதல் கவிதைகளாக எழுதி இருப்பார்கள்.
அப்படி எழுதுபவர்கள் கூட உள்முகத் தேடல் கவிதைகளை அவர்களை அறியாமல் எழுதியிருப்பார்கள்.
பிரமிளின் ஒரு கவிதையை எடுத்துக்கொள்ளுங்கள்.
வண்ணத்துப்பூச்சியும் கடலும்
சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன் குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி.
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல்நோக்கிப் பறந்து
நள்ளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது
பிரமிளின் இந்தப் பிரபலமான கவிதை ஒரு உள்முகத் தேடல் கவிதை. 1980ஆண்டு எழுதி உள்ளார். எந்தத் தருணத்திலும் எப்போதும் இந்தக் கவிதையை ஒருவர் படித்துக்கொண்டிருக்கலாம். கொஞ்சங்கூட அலுக்காது.
இதில் கவிதை கூறும் ரகசியம் என்ன என்பதைக் குறித்து ஒருவர் ஆச்சரியப்படாமலிருக்க முடியாது. தேர்ந்த வாசகர் இந்தக் கவிதையைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பதோடல்லாம் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டாடவும் செய்வார்.
‘ஆலிலையும் நெற்கதிரும்‘ என்ற சச்சிதானந்தன் என்பவரின் கவிதைத் தொகுப்பை சிற்பி மொழிபெயர்த்துள்ளார்.
அந்தத் தொகுப்பைப் பார்த்துக்கொண்டு வரும்போது ஒரு உள்முகத் தேடல் கவிதைத் தென்பட்டது. பொதுவாக எல்லாக் கவிதைகளும் சிறப்பாக எழுதப் பட்டிருந்தன. ஒரு கவிதை மட்டும் விசேஷக் கவனமாக என் மனதில் பட்டது. மறக்கப்பட்ட குடை என்ற தலைப்பில் அக் கவிதை எழுதப்பட்டிருந்தது.
மறக்கப்பட்ட குடை
மறக்கப்பட்ட குடை
மழையை நினைத்துப் பார்த்தது
இடியோசை கேட்டுத் தோகை விரித்தது
மலைக் காக்கைபோல
குன்றுகளின் மேல் பறந்து வந்து இறங்கியது
எருமைபோல
வயல் வரப்பில் ஆடி நடந்தது “
இப்போது சிறகு விரிக்க முடியாமல்
மூலையில் இருக்கையில்
எட்டுக்கால் பூச்சி
நரைத்த உடலில்
வலை நெய்ய, மரத்துப் போகிறது
மேகங்கள் மூடிய ஒரு நாளில்
ஒரு கை அதை விரிக்கும்.
மழையின் நடனத்தில்
கருத்த இளமை திரும்பிவரும்,
குடைகளின் திருவிழாவில்
நெற்றிப் பட்டம் கட்டிக் கொண்டு.
இக் கவிதையைப் படிக்கும்போது என்ன தோன்றுகிறது? இது ஒரு உள்முகத் தேடல் கவிதையாகத் தோன்றவில்லையா? மறக்கப்பட்ட குடை என்னன்வோ யோசனைப் பண்ண வைக்கிறது.
ஒரு உள்முகத் தேடல் கவிதை வாசகனைக் கவர்ந்தால் போதும். முழு அர்த்தமும் தெரிய வேண்டும் என்பதில்லை.
கவிஞன் தன்னை அறியாமல் எழுதுகிற கவிதைதான் அது.
இன்னொரு கவிதை. ஞானக்கூத்தன் எழுதியது.
பட்டாம்பூச்சி என்ற கவிதை
மஞ்சள் நிறமுடைய பட்டாம் பூச்சி
தோட்டத்தில் நுழைந்தது
சமையலறையில் நுழையும் மாட்டுப்பெண் போல
வெண்டை பூத்திருந்தது
கத்திரி பூத்திருந்தது
அவரை பூத்திருந்தது
கட்டிவிடப்பட்ட கயிறுடன்
புடலை தொங்கிக் கொண்டிருந்தது
பட்டாம் பூச்சி ஒவ்வொரு பூவின் மேலும்
பறந்தது, உட்கார்ந்தது.
அடுத்த பூவை நாடிற்று
உதவி செய்யவா என்றேன்
சிறகை வேகமாய் வீசி பறந்து போயிற்று
உள்முகத் தேடல் கவிதைக்கு மேலே குறிப்பிடப்பட்ட ஞானக்கூத்தனின் கவிதையும் உதாரணம்.
இப்படிப் பலருடைய கவிதைகளை உற்று நோக்கினால் உள்முகத் தேடல் தென்படாமல் இருக்காது.
இந்த உள்முகத் தேடல் கவிதை அபூர்வமாகத்தான் பெரும்பாலான கவிஞர்களிடம் தென்படும்.
இதில் தேவ தச்சன் விதிவிலக்கு.
அவருடைய ஒவ்வொரு கவிதையும் அபூர்வமான தன்மை உடையதாக இருக்கிறது.
முழு மரம்
குழந்தை நெளிந்துகொண்டிருக்கிறான். அம்மா
இன்னொரு கையில் தொலைபேசியில்
பேசியபடி இருக்கிறாள்.
தொலைபேசியையும் கீழே
வைக்க முடியவில்ல்லை
குழந்தை நெளிந்தபடி
வழுக்கத் தொடங்குகிறான்.
ஒரு இலை
“ நெளிந்து
உதிரும்போது
முழு மரமும்
சாய்ந்து விழுகிறது.
எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் ஒரு உஉள்முகத் தேடல் கவிதையை எழுதியிருக்கிறார் தேவதச்சன். வாசகரை ஊகிக்க வைக்கிறார். அல்லது திகைக்க வைக்கிறார். நான் படித்த மர்ம நபர் என்ற புத்தகத்தில் ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போது ஒருவித பரவச உணர்ச்சி .ஏற்படுகிறது இன்னும் அவருடைய கவிதைகளைப் பார்க்கலாம்.
(இன்னும் வரும்)
Comments