அழகியசிங்கர்
நீல பத்மநாபனின் 60 ஆண்டுக்கால நண்பர் நகுலன். நகுலன் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த தருணத்தில், நீல பத்மநாபன் அவருடைய மாணவராக இருந்திருக்கிறார்.
நகுலனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு நீள் கவிதையாக ‘நகுலம்’ என்ற பெயரில் உருவாகியிருக்கிறது.
பொதுவாக எனக்கு நீள் கவிதையில் உடன்பாடில்லை. அது படிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். உண்மையில் நான் ரசித்த நீள் கவிதைகளை நகுலன் எழுதியிருக்கிறார். அவருடைய அஞ்சலி என்ற நீள் கவிதையையும், மழை,மரம்,காற்று என்ற கவிதையையும் என்னால் நிறையவும் ரசிக்க முடிந்தது.
அதன் பின் இப்போது நீல பத்மநாபனின் இந்த ‘நகுலம்’ என்ற கவிதை.
50 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த நீள் கவிதையை என்னால் ரசிக்க முடிந்தது.
அவற்றின் சில பகுதிகளை உங்களுக்கு அளிக்கிறேன்.
கொந்தளிக்கும் மனதுடன் தூக்கமில்லா
முழு இரவு ரயில் பயணம்…
வீடு திரும்பியதும் மணி – நகுலனின் தம்பியின்
போன் அறிவிப்பு…
அண்ணாவுக்குக் கொஞ்சம் சீரியஸ்..
அம்பலமுக்கு சாந்த்வனம் ஆஸ்பத்ரியில்
அட்மிட் பண்ணியிருக்கோம்….
நீள் கவிதையில் ஆரம்பம் இதுதான். நகுலன் மருத்துவ மனையில் சேர்த்த விபரத்தைக் கவிதை வெளிப்படுத்துகிறது.
அவர் முன்னால் பக்கத்தில் நெருங்கி நின்று
அவர் கைத்தலத்தைப் பற்றியபோது
எப்போதும் துடிப்பாய் இயங்கும்
நகுலனா….
நகுலனைப் பார்க்க நீல பத்மநாபன் வருகிறார் மருத்துவமனைக்கு. முன்பு போல் இல்லை நகுலன். இவர் வந்திருக்கிறார் என்பதே நகுலனுக்குத் தெரியவில்லை.
நீல பத்மநாபன் இப்படி எழுதியிருக்கிறார்.
இவனை இன்னாரென்று அடையாளம் காண
மிரள விழித்துத் துழாவும் அந்தக் கண்கள்
கண்ணாடி ஜாடிக்குள் சிறுமீன்களைப்போல்..
ஒருவேளை…ஒருவேளை..
இவரை இவராகப் பார்ப்பது
இதுதான் கடைசியா….
தொடருகிறது கவிதை. பின் வரும் பகுதிகளில் நகுலன் முதலில் நீல.பத்மநாபனைச் சந்தித்த விபரமெல்லாம் ஒவ்வொன்றாய் வருகிறது.
நகுலன் என்று ஏன் பெயர் வைத்துக்கொண்டார் என்பதை இரண்டாவது அத்தியாயத்தில் நீல பத்மநாபன் எழுதியிருக்கிறார்.
மறுநாள் – வெள்ளி அதிகாலையில்
மணியின் போன் செய்தி
நேற்றிரவு பதினொண்ணரை சுமாருக்கு
அண்ணா போயிட்டார்..
என்று அந்த அத்தியாயத்தை முடிக்கிறார். பத்து அத்தியாயங்களாக இந்த நீள் கவிதை எழுதியிருக்கிறார்.
பின் இந்தக் கவிதை எப்படி நகுலன் அந்தக் காலத்தில் வாழ்ந்து வந்தார் என்பதை விளக்கி கவிதையின் ஓட்டம். இதையெல்லாம் நீல பத்மநாபன் சிறப்பாகவே சொல்கிறார்.
இந்த நடைபாதையில் சைக்கிளை
மிகவும் சிரமப்பட்டு உருட்டிக்கொண்டு
வேர்வையில் குளித்து நடக்கும் நகுலன்
சைக்கிளில் அவர் பயணம் செய்வதைப்
பார்த்துவிட வேண்டுமென்று ஆசைப்பட..
இப்படியெல்லாம் நகுலனை விவரிக்கிறார் கவிதை மூலம். ஒரு நீள் கவிதை எழுத இதை உதாரணமாக நினைக்கிறேன்.
தொடர்ந்து நகுலனுடன் பழகிய விதத்தைக் கவிதையாக வடித்துக் காட்டியிருக்கிறார் நீல பத்மநாபன்.
சுசீலா பெயரைச் சொன்னதும் கையிலிருந்த
“ தம்ளர் வெட வெடயென்று நடுங்கி கீழே விழுந்து
உடைந்த பழியைப் பாவம், சிவன் தலையில்
கட்டியிருக்கீங்க, அது நவீனனுக்குத்தானே பொருந்தும்
இருவரும் அவரவர் சைக்கிளை இவன் வீட்டு முற்றத்தில்
வைத்துவிட்டு வீட்டில் வந்து ஏறும்போது, சிரித்தவாறு
நகுலனிடம் கேட்டுக்கொண்டிருந்தார் சுப்பையா…
கவிதையில் இவன் என்று குறிப்பிடுவது நீல பத்மநாபனை. சந்திப்பது இலக்கிய விஷயங்களைப் பேசுவது இதுதான் எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. நீல பத்மநாபனின் இந்த நீண்ட கவிதை நகுலனுடன் அவர் ஆழமாகத் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது.
இந்தக் கவிதையை முடிக்கும்போது இப்படி நகுலனைப் பற்றி எழுதியிருக்கிறார்.
நவீன இலக்கியத்தில் செயல்பட்டவர்
ஒருசில நெருக்கமான உறவினர்கள்
அண்டை வாசிகள்….மாணவர்கள்….நண்பர்கள்
கைவிரலில் எண்ணிவிடலாம்…
2007-ம் ஆண்டு…
நகுலனின் இறுதி யாத்திரை, ஆம்புலன்ஸில்
பக்கத்திலிருந்த கரமனை மயானம் நோக்கி
என்று உருக்கமாக எழுதியிருக்கிறார் நீல பத்மநாபன். நகுலன் என்ற சகாப்தத்தைப் பற்றி நகுலம் என்ற பெயரிட்டு நீண்ட கவிதையைக் கொடுத்திருக்கிறார்.
நீல பத்மநாபனின் இந்தக் கவிதை முயற்சியைப் பாராட்ட வேண்டும். ஆரம்பத்திலிருந்து நீல பத்மநாபன் கவிதை எழுதியிருக்கிறார். அவருடைய கவிதைகளைத் தொகுத்து ‘எழுத்து’ ஆசிரியர் சி சு செல்லப்பா ‘நீல பத்மநாபன் கவிதைகள்’ என்று கொண்டு வந்திருக்கிறார். நீல பத்மநாபன் கவிதைகளில் சமூகக் கோபம் இருக்கும். ஆனால் இந்த நீள் கவிதையில் அவரை விட சக எழுத்தாளரின் மீது ஒரு அக்கரை வெளிப்படுகிறது.
தரமான தமிழ் இலக்கியத்தில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் இலக்கியவாதியின் அடிபதறாத அனுபவ முத்திரை இந்த நீள் கவிதை. இது சாதாரண வாசகர்களுக்கு மட்டுமல்ல, இலக்கிய ஆய்வு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் அபூர்வமான படையல் என்று புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
152 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் நகுலனைப் பற்றி சில கட்டுரைகளும் இருக்கின்றன. நீல பத்மநாபன் நகுலனைப் பேட்டி எடுத்திருப்பதும் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.. மலையாள மொழியில் நகுலன் பற்றி இரண்டு கட்டுரைகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
நீல பத்மநாபன் முதன் முறையாக நீண்ட கவிதையை எழுதியிருக்கிறார். இது ஒரு வெற்றிகரமான முயற்சி என்று தோன்றுகிறது.
விருட்சம் வெளியீடாக வந்துள்ள இப் புத்தகத்தின் விலை : ரூ.150.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 02.05.2021 அன்று வெளிவந்தது)
Comments