Skip to main content

தாவோ தே ஜிங் - 1 (சாரமும் விசாரமும் : மொழி பெயர்ப்பு சந்தியா நடராஜன்)

11.07.2020




அழகியசிங்கர் 




வழக்கம்போல சூமில் நாங்கள் மூவரும் சந்தித்தோம்.  

மோகினி, ஜெகன் : காலை வணக்கம்

அழகியசிங்கர் : வணக்கம்.

ஜெகன் : இந்தக் கொரோனா காலத்தில் நாம் சந்திக்க முடியாது போலிருக்கே?

அழகியசிங்கர் : சந்திக்க முடியாது.

மோகினி : சூமில் கவிதை வாசிப்பு நடத்துகிறீர்களா?

அழகியசிங்கர் : ஆமாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று 7 மணிக்கு.

ஜெகன் : தாவோ தே ஜிங் புத்தகம்தானே பேசப் போகிறோம்.

அழகியசிங்கர் : ஆமாம். எனக்கு அந்தப் பெயரை உச்சரிக்கச் சரியா வரவில்லை.

மோகினி : இந்தப் புத்தகத்திற்கு ஆத்மாநாம் விருது மொழிபெயர்ப்பு நூலிற்காகக் கிடைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அழகியசிங்கர் ; வரவேற்கிறேன்.

மோகினி : நம்முடைய வழக்கப்படி மூவரும் புத்தகத்தைப் படித்துவிட்டுப் பேச வேண்டும்.  நானும் ஜெகனும் படித்துவிட்டோம்.

அழகியசிங்கர் :. மூவரும் படித்தால்தான் ஒரு புத்தகத்தைப் பற்றிச் சரியான புரிதலுக்கு வருவோம்.

ஜெகன் : ஆமாம்.

மோகினி : எனக்கு இந்தப் புத்தகம் படிக்கும்போதே ஜே.கிருஷ்ணமூர்த்தி ஞாபகம் வருகிறது.

அழகியசிங்கர் : தாவோ, ஜே கிருஷ்ணமூர்த்திக்கு முன்பே எல்லாவற்றையும் கூறிவிட்டார்.  இன்னும் கேட்டால் ஜே.கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்ல இன்னும் பலர் தாவோ சொன்னதையே சொல்வதுபோல் வருகிறது.

ஜெகன் : சரி, புத்தகத்தைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்.

அழகியசிங்கர்.  நான் ஏற்கனவே சி மணி தாவோவை மொழிபெயர்த்த புத்தகத்தையும் வைத்திருக்கிறேன்.  நடராஜன் புத்தகத்தையும் வைத்திருக்கிறேன்.  உண்மையில் எனக்கு தாவோ புத்தகம் படிக்க வேண்டுமென்ற உணர்வை உண்டாக்கியது நடராஜனின் புத்தகம்தான்.

மோகினி : எல்லா விதங்களிலும் நடராஜனின் புத்தகம் சிறப்பானது.

ஜெகன் : எப்படி?

மோகினி : அவர் தாவோவின் 81 பாடல்களை மட்டும் மொழிபெயர்க்கவில்லை.  கூடவே 81 பாடல்களுக்கும் இன்னும் அர்த்தம் கூட்டுகிற மாதிரி அவற்றை இன்னும் விவரிக்கிறார்.

அழகியசிங்கர் : புத்தகத்தின் உள்ளே சாரமும் விசாரமும் என்று எழுதியிருக்கிறார்.  உண்மையில் சாரமும் விசாரமும்தான். அனுபவ ஞானம் அறிமுகமான கதை என்ற தலைப்பில் ஒன்றை எழுதியிருக்கிறார். 

பட்டினத்தாரும் வள்ளலாரும் பாமரத்திரளுக்கு மானுட வாழ்வு யாதென காட்டினர்.  தாயுமானவர் மௌன குருவின் மேன்மை பேசினார்.  நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்தி நெறியில் பாதை போட்டனர்.  ஐயாயிரமாண்டு தமிழர் செல்லமாய் வள்ளுவன் தந்த பொதுமறை உண்டு  என்கிறார்.

இதெல்லாம் இருக்க தாவோயிசம் எதற்கு என்ற கேள்வியை  எழுப்புகிறார். 

சீன தேசத்தில் நீர் எருமையில் சுற்றித் திரிந்த லாவோ ட்சு என்கிற ஞானியை நாம் ஒதுக்கிவிட முடியாது என்கிறார் நடராஜன்.  81 பாடல்களின் தொகுப்பே இந்தப் புத்தகம் என்கிறார்.  உலகம் முழுவதும் எண்ணற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நூல் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையான நூலாக அறியப்படுகிறது என்கிறார்.

ஜெகன் : இந்த நூலை கடகடவென்று ஒரு கதைப் புத்தகம் மாதிரி படித்து விட முடியாது.

அழகியசிங்கர் :.  ஆமாம். அப்படிப் படித்து விட முடியாது.  பல நாட்கள் இந்தப் புத்தகம் என் மேசையின் மீதே இருக்கும்.  ஆனால் எடுத்து உடனே வாசிக்க முடியாது.

மோகினி : அவ்வளவு கடினமா?

அழகியசிங்கர் : இல்லை. இல்லை.  ஒரு நாவலையோ ஒரு சிறுகதையையோ ஏன் கவிதையையோ நம்மால் வேகமாகப் படித்து விட முடியும்.  ஆனால் இதுமாதிரி புத்தகத்தை அவ்வளவு சுலபமாகப் படித்து விட முடியாது.  ஒவ்வொரு பாடலாகப் படிக்கும்போது அதில் என்ன சொல்ல வருகிறார் என்று யோசிக்க வேண்டும்.  இப்படி முழுவதும் யோசித்து யோசித்துப் படித்தால் இந்தப் புத்தகம் அற்புதமான அனுபவத்தைத் தரும்.

ஜெகன் : அதாவது இந்தப் புத்தகம் படிப்பவரைக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும்.

அழகியசிங்கர் : உதாரணத்திற்கு ஆலன் வாட்ஸ் என்பவர் சொன்ன சீனக்கதையைக் குறிப்பிடுகிறார். 
 அந்தக் கதையை இங்குச் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

சீன தேசத்துக் கிரமம் ஒன்றில் ஒரு விவசாயி ஒரு அழகிய வெள்ளைக் குதிரை வைத்திருக்கிறான். அந்தக் குதிரை ஒருநாள் காணவில்லை.  கிராமம் முழுவதும் தேடிப்பார்க்கிறான்.  எங்கும் காணவில்லை. 

இந்தச் செய்தியைக்  கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தவர்கள் விவசாயிடம் வந்து, 'ஆசையாய் வளர்த்த குதிரை இப்படி ஓடிப்போயிற்றே,' என்று வருத்தத்தைத் தெரிவிக்கிறார்கள்.

விவசாயி அதைக் கேட்டு, 'ஆமாம். அப்படி இருக்கலாம்,' என்கிறான்.

உண்மையில் வேற யாராவது இருந்தால் ஒப்பாரி வைத்திருப்பார்கள்.  மணிக்கணக்கில் பேசி துக்கம் விசாரிக்க வந்தவர்களை ஓட ஓட விரட்டிவிடுவார்கள்.  இந்த விவசாயி விதிவிலக்கு.

மறுநாள் காணாமல் போன குதிரை திரும்பி வந்து விடுகிறது.  அந்தக் குதிரையுடன் இன்னும் ஏழு குதிரைகள் சேர்ந்து வந்திருந்தன. 

விவசாயிக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைக் கேள்விப்பட்டு பக்கத்தில் இருப்பவர்கள், என்ன அதிர்ஷ்ட காலம் என்றார்கள்.

விவசாயி திரும்பவும், ஆமாம். அப்படி இருக்கலாம், என்கிறான்.

வேற யாராவது இருந்தால் குதிரையைப் பற்றி பெருமை அடித்துக் கெர்ணடிருப்பார்கள்.  

ஒரு நாள் விவசாயின் மகன் வெள்ளைக் குதிரை மீதேறி ஊரைச் சுற்றிச் சவாரி வந்தான்.  ஒரு நொடிப் பொழுதில் நான்குக் கால்களில் பாய்ச்சலில் வந்த குதிரை விவசாயி மகனைக் கீழே தள்ளிவிட்டது.  அவன் கால் முறிந்து போயிற்று.

உடனே பக்கத்திலிருப்பவர்கள் வந்து விவசாயிடம் துக்கம் விசாரித்து விட்டுப் போனார்கள்.

திரும்பவும் விவசாயி, 'ஆமாம்.  அப்படி இருக்கலாம்,' என்கிறான்.

மறுநாள் விடிந்தது.  கிராமம் முழுவதும் ஒரே பரபரப்பு.  ராணுவத்திற்கு ஆள் சேர்க்க ராஜாவின் அதிகாரிகள் வீடு வீடாய் வந்து, இளைஞர்களைக் குறி வைக்கிறார்கள்.  விவசாயின் மகனைப் பார்க்கும்போது அவன் காலை ஒடித்துக்கொண்டிருக்கிறான் என்று அவனை விட்டு விடுகிறார்கள்.

திரும்பவும் பக்கத்திலிருப்பவர்கள்விவசாயிடம்,  'உன் மகன் உயிர் போகாமல் தப்பித்து விட்டான்.  உனக்கு நல்ல காலம்தானே,' என்று வியக்கிறார்கள்.

விவசாயி திரும்பவும், 'ஆமாம். அப்படி இருக்கலாம்,' என்கிறான்.

சலனமில்லாமல் செயல்படும் இந்த சீன விவசாயின் மனநிலையை இந்த உலகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் லாவோட்சு.

ஜெகன் : இந்தக் கதையைப் படித்து விட்டு மேலும் படிக்க வேறு பக்கங்களைத் திருப்பக் கூடாது.”

மோகினி : கொஞ்ச நேரம் வரை இந்தக் கதை மூலம் கிடைக்கும் செய்தியை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஜெகன் : எதற்கும் சலனப்படாத மனநிலையை அவர் இந்தக் கதையில் மூலம் குறிப்பிடுகிறார்.

அழகியசிங்கர் : நான் என் சொல்ல வருகிறேனென்றால் இந்தக் கதையுடன் இந்தக் கதை நம்மைப் போக விடாமல் தடுத்து நிறுத்தி விடுகிறது. 

ஜெகன் : உண்மைதான் இந்த ஒரு கதையை வைத்துக்கொண்டு சலனமில்லாத செயல்படும் மனநிலையைக் குறித்து யோசித்துக் கொண்டே இருக்கலாம்.
                                                                                                                                    (இன்னும் வரும்)

Comments