Skip to main content

கோவை ஞானியை முதலில் எங்குப் பார்த்தேன்?

அழகியசிங்கர்





 
திருவல்லிக்கேணியில் பாரதி சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தேன் ஒருநாள்.  அப்போதுதான் கோவை ஞானியைப் பார்த்தேன்.  என் கூட வந்திருந்தவர் அறிமுகப்படுத்தினார்.

நான் பார்த்த அன்று அவர் பார்வையை இழந்திருந்தார் என்பதை அறிந்தேன்.  அதற்குக் காரணம் சர்க்கரை நோயின் கடுமை என்று குறிப்பிட்டார்..  அதன் பின் நான் எப்போதும் கோவை சென்றாலும் கோவை ஞானியைப் போய்ப் பார்ப்பேன்.  அவர் நிகழ் என்ற பத்திரிகையும், தமிழ் நேயம் என்ற பத்திரிகையும் அனுப்புவார்.  நான் விருட்சம் அவருக்கு அனுப்புவேன்.

அவர் வீட்டில்தான் அவரைச் சந்திப்பது வழக்கம். அவருடன் யாராவது இளைஞர் ஒருவர் உதவியாளனாக இருப்பார்.  அவர்தான் அவருக்குக் கொடுக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள் படித்துச் சொல்வார்.  

வயது முதிர்ந்த நிலையிலும் அவர் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவர் விடாமல் அதிகம் விற்பனை ஆக முடியாத பத்திரிகைகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வந்தது எனக்குத் திகைப்பாக இருக்கும்.

சமீபத்தில் அவர் பிறந்த நாள் அன்று அவரைப் பற்றி தமிழ் ஹிந்துவில் பலர் கட்டுரைகள் எழுதி இருந்தார்கள். அவருக்குச் சரியான கௌரவம் தமிழ் ஹிந்து நாளிதழ் தந்திருப்பதாக நினைத்தேன்.

இன்று மதியம் நான் தூங்கி எழுந்தபோது அவர் மரணம் அடைந்த செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன்.  வருந்துகிறேன்.


Comments