தேவதச்சனின் முழுத் தொகுப்பு அழகியசிங்கர் நான் இப்போது எடுத்துக்கொண்டு எழுதப்போகும் கவிதைப் புத்தகத்தின் பெயர் ‘மர்ம நபர்’ என்ற தேவதச்சனின் முழுத் தொகுப்பு. இது தேவதச்சனின் முழுத் தொகுப்பு. 350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இத் தொகுப்பு ஏப்ரல் 2017ல் வெளிவந்தது. ஆனால் இன்னும் தேவதச்சன் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பார். கவிதைகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு கவிதைகள் எழுதுபவர் தேவதச்சன். பெரும்பாலும் கவிதைகள் படிக்கும்போது எத்தனைக் கவிதைகளை ஒரு புத்தகத்தில் என்னால் ரசிக்க முடிகிறது என்று யோசித்துப் பார்ப்பேன். பலருடைய கவிதைப்புத்தகங்களில் என்னால் பெரும்பாலான கவிதைகளை ரசிக்க முடியவில்லை. கவிதைகள் எழுதும் பலருக்கும் எதற்குக் கவிதை எழுத வேண்டுமென்று தெரிவதில்லை. கவிதை மாத்திரம் அவர்களுக்குத் தானாகவே வந்து விடுவதாக நினைக்கிறார்கள். அதாவது கவிதை அவருடைய பழக்கத்திற்கு ஆளாகாமல் கவிதை செயல்படுவதாக நினைக்கிறேன். ஆனால் தேவதச்சன் உணர்ந்து கவிதை எழுதுகிறார். இத்தனை வரிகள்தான் கவிதைக்கு என்று முன்னதாகவே நினைக்கிறார்...