Skip to main content

எதையாவது சொல்லட்டுமா..........51





ராம்மோஹன் என்ற பெயர் கொண்ட ஸ்டெல்லாபுரூஸின் பிறந்த தினம் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி.  அவர் இப்போது இருந்திருந்தால், எழுபது வயதுக்கு மேலிருக்கும். ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அவரைப் பற்றிய அந்த எண்ணம்தான் என் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.   மரணம் என்பது இன்னொரு நிலை.  அந்த நிலையை தானாகவே தேடிக் கொண்டுவிட்டார் ஸ்டெல்லாபுரூஸ். மனைவியை இழந்தத் துக்கத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  உண்மையில் மனைவியை இழந்துவிடுவோம் என்று உணர்ந்து தன்னை தயார் செய்து கொண்டிருந்தார்.  நோயிலிருந்து தப்பிக்க முடியாமல் மனைவி இறந்தவுடன், அவர் முன்னால் அவரே வைத்திருந்த பிம்பங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தன.  தன்னைப் பற்றிய மிகைப் படுத்திய பிம்பம்தான் அவரைத் தற்கொலையில் தூண்டி விட்டது.

ஸ்டெல்லாபுரூஸ் வீட்டிற்குப் போகும்போது, அவர், அவருடைய மனைவி ஹேமா, ஹேமாவின் தங்கை பிரேமா என்று மூவரும் என்னை வரவேற்பார்கள்.  கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்ககத்தில் அவர் வசித்து வந்தார்கள்.  ராம்மோஹன் புத்தகங்களை எல்லாம் ஒரு கண்ணாடி அலமாரியில் அடுக்கி வைத்திருப்பார்.  ஒவ்வொரு புத்தகத்திலும் அவர் கையெழுத்து இல்லாமல் இருக்காது.  புத்தகம் படிப்பது, இசை கேட்பது இதுதான் அவர் வாழ்க்கை முறை.  மூவரும் கலகலவென்று பேசுவார்கள்.  ஹேமா உடனே போய் காப்பிப் போட்டு கொண்டு வருவார்.  விருதுநகரிலிருந்து கொண்டு வந்த முறுக்கு எல்லாம் கொடுப்பார்கள்.  வீட்டை விட்டு பெரும்பாலும் அவர்கள் எங்கும் போக மாட்டார்கள்.  ராம் மோஹனுக்கு இரவு ஸநேரத்தில் கண் பார்வை சற்று சரியாக இல்லை என்பதால், யார் துணையும் இல்லாமல் நகர மாட்டார்கள். 

ஆனந்தவிகடன் பத்திரிகை ஸ்டெல்லாபுரூஸுற்கு ஒரு முக்கியமான இடத்தைக் கொடுத்திருந்தது.  அவருடைய முதல் நாவல் பிரசுரமானபோது, அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். கொஞ்சம் சாமர்த்தியம் இருந்திருந்தால், அவர் இன்னொரு பாலகுமாரனாகவோ, சுஜாதாகவோ மாறி இருக்கக் கூடியவர். அவர் மனதுடன் அதிகமாகப் பேசிக்கொண்டிருப்பவர். எழுத்து என்பது ஒரு டிரிக். சாமர்த்தியம். அதைப் பயன்படுத்திக்கொண்டு புகழ் பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை. அவர் தொடர் நாவல்களைப் படித்து பலர் அவரிடம் அவர்களுடைய துன்பங்களை எழுதிக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.  நேரே அவரைச் சந்திக்க வருவார்கள்.  அப்படி ஒரு சந்திப்பின்போது, ஹேமா அவருடைய மனைவியாக மாறினார்.  விருதுநகரில் உள்ள அவருடைய குடும்பத்தை விட்டு தனியாக வந்தவர், திருமணமே செய்துகொள்ளாமல் பல ஆண்டுகள் இருந்தவர் ஹேமாவைத் திருமணம் செய்து கொண்டார்.

ராம்மோஹன் காளி-தாஸ் என்ற  பெயரில் கவிதைகள் எழுதுபவர்.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவள்ளுவர் சிலை பக்கத்தில் உள்ள கடற்கரையில் எழுத்தாள நண்பர்கள் சந்தித்துக்கொள்வோம்.  ஏன் சிலசமயம் காந்தி சிலை பக்கத்தில்கூட சந்திப்போம்.  ஒரு முறை ஸ்டெல்லா புரூஸ் ஹேமாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.  ''இவர்தான் என் மனைவி,'' என்றார்.  எங்களுக்கு திகைப்பாக இருந்தது.  பின் ராம்மோஹன் மனைவிதான் எல்லாம் என்று இருந்துவிட்டார். இவர் இப்படி என்றால், என்னுடைய இன்னொரு இலக்கிய நண்பர் பிரமிள் குடும்பமே இல்லாமல் தனி மனிதனாக வாழ்ந்து கொண்டிருந்தார்.  

ராம் மோஹன் அவர் குடும்பம் மூலம் கிடைத்தத் தொகையில் வரும் வட்டியில்தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்.  யாரிடமும் அவர் கடன் கேட்க மாட்டார்.  அவர் தேவைகள் மிகக் குறைவு.  ஆனாலும், கூடிவரும் விலைவாசியில், அவர் எப்படி சமாளித்தார் என்பது தெரியவில்லை. ஹேமாவின் மனைவி பிரேமா இருதய நோயாளி.  ஹேமாவிற்கு முன்னால் அவர் இறந்தது ஹேமாவிற்குப் பெரிய அதிச்சி. அதேபோல், ஹேமாவின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டபோது, ராம் மோஹன் தடுமாறி விட்டார்.  சாதாரண நிலையில் உள்ள குடும்பத்தில் நிலை தடுமாற்றத்தைக் கொடுக்கக்கூடிய வியாதி இது.  மனைவியும் இறந்துவிட்டார்.  ராம்மோஹன் அதிலிருந்து தப்ப முடியாமல், மாட்டிக்கொண்டு விட்டார்.

ஆன்மிக பலம் மூலம் எல்லாவற்றையும் சரிசெய்து விட முடியும் என்று தவறாக நினைத்துவிட்டார்.  அதுவே அவருடைய தற்கொலைக்கு வித்திட்டது.  மனைவி இறந்தவுடன் அவர் குடும்பத்தில் உள்ள பொருட்களை இலவசமாக அவரைச் சுற்றி உள்ள நண்பர்களுக்குக்கொடுக்க ஆரம்பித்தார்.  இதெல்லாம் அவருடைய குழப்பம் ஏற்படும் தருணம்.  மனைவியின் நகைகளை திருப்பதி உண்டியில் போடும்படி ஒரு நண்பரிடம் கொடுத்து விட்டார்.  ஹேமாவின் சகோதரர் அடுக்ககத்தில்தான் அவர் இருந்ததால், அவர் அந்த இடத்தை விட்டுப் போகும்படி நெருக்கடி ஏற்பட்டது.  இதெல்லாம் சேர்ந்து ராம்மோஹனின் தற்கொலைக்கு வித்திட்டது. 

ஆரம்பத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதை எழுதினாலும், தொடர்ந்து அவரால் அந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.  சில சினிமாப் படங்களிலும் அவருக்கு ஆதரவு கிட்டினாலும், அதிலும் அவரால் முழு நேர எழுத்தளராகப் பணிபுரிய முடியவில்லை.  எப்போதோ அவர் குடும்பத்தில் உள்ளவர்களைப் பகைத்துக் கொண்டு விட்டதால், அவரால் அங்கு போயும் அவரால் ஒன்ற முடியவில்லை.  தற்கொலைதான் ஒரே வழி என்ற அவர் நிலையை ஜீரணிக்க முடியவில்லை.


''காலம்''


யாரோ காலமானார் என்ற செய்தி
என் எதிரில்
நட்சத்திரமாகத் தொங்குகிறது
காலமென முதலில் உணர்ந்தவன்
கபாலச் சூடு பொரியும்
ஆண்மை நிறைந்தவனாக இருந்திருப்பான்
சில சமயத்தில் தோன்றுகிறது
காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல
ஆனால் பற்ற முடியாமல்
நழுவிப் போகிறது.
எங்கேயோ காத்திருக்கிறது
காதலுடன் மெளனம் சாதிக்கிறது
காலம் காலமாகக்
கடல் ஒலிக்கிறது வெற்று
வெளியில் மேசம் சஞ்சரிக்கிறது கனத்த
காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து
விட்டார்கள். எவ்வளவோ காலம்
கடந்தும் அறிந்துகொள்ள என்னவென்று
அது - முளைக்கவே இல்லை. ஆனால்
விலகாத கிரஹணமாக என்
எதிரில் தொங்கிக்கொண்டே தானிருக்கிறது
யாரோ காலமான செய்தி
நானும் ஒரு காலத்தில்
காலமாகி விடுவேனோ என்பதில்
மட்டும் முளைத்து விடுகிற
பயம்
சொட்டுச் சொட்டாய் உதிரக்
காத்திருக்கிறது - காலம் வராமல்....

Comments

ஒரு இரு கதைகளிலேயே வாசகர்களுக்கு நெருக்கமானவர் ஸ்டெல்லா புருஸ்.. அவரது முடிவு மிகவும் உருக்கமானது...
ஸ்டெல்லாபுரூஸ் அவர்களின் பிறந்த தினத்தன்று அவரைப் பற்றி நினைவு கூர்ந்திருப்பது நன்று.
ஒவ்வொரு வருடமும் மறக்காமல் உங்கள் நண்பரின் நினைவு நாளில் அவரைப் பற்றி அவரின் படைப்புக்களைப் பற்றி வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறீர்கள். மிக்க நன்றி.
நல்லதொரு நினைவுகூரல்..
ஷைலஜா said…
ஸ்டெல்லா ப்ரூஸ் ரசிகை நான்..வாழும்காலத்தில் அவரை சந்தித்து அவரது கதைகள்பற்றி பேச இருந்தேன் முடியாமல்போய்விட்டது.அவரைப்பற்றி தக்க தருணத்தில் எழுதி இருக்கிறீர்கள்