Skip to main content

குருவின் துரோகம்









 எழுத்தாளர்களைப் பாத்திரங்களாக அமைத்துப் புனைகதைகள் எழுதுவதில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை.  எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சாதாரண மனிதர்கள்.  அநேகமாக அவர்கள் எல்லாருக்கும் அவர்களைப் பற்றிப் பிறரிடம் சொல்லும்போதோ எழுதும்போதோ நிஜமல்லாதது மிகவும் இயல்பாக வந்து விடுகிறது.

 மனித இயல்பின் தன்மை அது.  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அன்று மிகவும் செல்வாக்கோடு இருந்த எழுத்தாளர் அவர் பணிபுரிந்த வானொலியில் அவருடைய மேலதிகாரியைக் கரிய பாத்திரமாகக் கதை எழுதியதைப் பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தார்.  அது தவறு என்று நான் சொன்னேன்.  அவர் வானொலியில் இருந்தவரை என் மூச்சு கூட அப்பக்கம் வீச முடியவில்லை.

 கிட்டத்தட்ட என் அபிப்பிராயம்தான் அழகிரிசாமி வைத்திருந்தார்.  ஆனால் நண்பர் நா பார்த்தசாரதிக்குக் கதாநாயகனை எழுத்தாளனாக அமைப்பதில் மிகுந்த விருப்பம்.  நகுலனின் முதலிரு நாவல்கள் எழுத்தாளர்களைப் பற்றியல்ல.  அதன் பிறகு எழுதியதெல்லாம் அவர் நேரடியாக அறிந்த எழுத்தாளர்களைப் பற்றித்தான்.  சில இடங்கள் வேடிக்கையாக இருக்கும்.  ஆனால் பெரும்பாலும் வருத்தத்தைத் தருவதாக இருக்கும்.  பலரைப் பற்றி அவருடைய மதிப்பீடு தவறாக இருக்கும்.

 வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்துக்கொள்வதுற்காக சக எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.  நீண்ட காலமாக இருப்பதே அதை நியாயப்படுத்தாது.  எழுத்துத் துறையின் ஒரு சாபம் குருத்துரோகம்.  ஷெர்வுட் ஆண்டர்சன் என்ற எழுத்தாளர் மனப்பூர்வமாக இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பார்.  சிபாரிசுக் கடிதங்கள் எழுதித் தருவார்.  முதுகில் நிறையக் குத்து வாங்கிக்கொள்வார்.  அப்படிக் குத்தியவர்களில் ஹெமிங்க்வேயும் ஒருவர்.  ஆண்டர்சன் சிபாரிசில் ஒரு பதிப்பாளர் ஹெமிங்க்வேயின் முதல் நாவலைப் பிரசுரிப்பதாகக் கையெழுத்துப் பிரதியை வாங்கி வைத்துக்கொண்டார்.  அதன்பிறகு இன்னும் அதிகசெல்வாக்குடைய பதிப்பாளர் ஒருவர் ஹெமிங்க்வேயுடைய படைப்புகளைப் பிரசுரிப்பதாக ஒத்துக்கொண்டார்.  முதல் நாவலின் கையெழுத்துப் பிரதியை எப்படித் திரும்பப் பெறுவது?  அவசரம் அவசரமாக ஹெமிங்க்வே ஆண்டர்சனைக் கிண்டல் செய்து ஒரு சிறு நாவல் எழுதி அந்த முதல் பதிப்பாளரிடம் கொடுத்தார்.  அவர் மிகுந்த கோபத்துடன் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். 'அப்போது அந்த முதல் நாவலின் கையெழுத்துப் பிரதியையும் திரும்பக் கொடுத்து விடுங்கள்,' என்று ஹெமிங்க்வே சொன்னார்.  இவ்வளவு கபடமாக நடந்துகொண்டபோது அவருக்கு வயது 25 ஆகவில்லை.

 இன்று தமிழ் எழுத்துலகத்தில் சிஷ்யர்களும் குருவாக உலவுபவர்களும் துரோகம் செய்யக்கூடும் என்று நினைக்க வைக்கிறது.  இதை மிகுந்த வருத்தத்துடன் எழுத வேண்டியிருக்கிறது.

 குருத்துரோகம் பற்றி இரு நாவல்களை நினைவு படுத்தலாம் என்று தோன்றியது.  ஒன்று, சாமர்செட் மாம் எழுதிய'கேக்ஸ் அண்ட் யேல்.' இரண்டாவது ஸôல் பெல்லோ எழுதிய'ஹம்போலட்ஸ் கிஃப்ட்.' அந்த நாளில் நோபல் பரிசு அறிவிக்கும்போது ஒரு படைப்பையும் குறிப்பிடுவதுண்டு.  ஸôல் பெல்லோ, 'தி டாங்கிலிங் மான்,'அட்வென்சர்ஸ் ஆஃப் ஆகி மார்ச்,' சீஸ் தி டே,'என மிகச் சிறந்த படைப்புகள் படைத்திருக்கிறார். 'கிஃப்ட்'பரபரப்பும் ஓரளவு சினிமாவில் உள்ளளது போன்ற தீர்வுகளும் உடையது.  ஆனால் அதுதான் நோபல் பரிசுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டது.  மாமை யாரும் ஸ்வீடன் பக்கமே திரும்ப விடவில்லை.  ஆனால் நிறை வாழ்வு, நீண்ட வாழ்வு, நிறை மறைவு.  எனக்குச் சிக்கலாக எழுத முடியும், ஆனால் வாசகன் எனக்கு முக்கியம் என்றிருந்தார். 'கேக்ஸ் அண்ட யேல்'சுவாரஸ்யமாகவே இருக்கும்.  இரு நூல்களும் எளிதில் படிக்கக் கிடைக்கும்.  தமிழ் வாசகர்கள், குறிப்பாகத் தீவிர வாசகர்கள் பிரிவில் தம்மை அடையாளம் கண்டுகொள்பவர்கள், படிக்க வேண்டும்.  இன்றைய தமிழ்ப் புனைகதைப் படைப்புலகம் துல்லியமாக அர்த்தமாகும்.
    *******
 ஒரு நூலுக்கு அட்டை முக்கியம்.  அட்டை அளவுக்கு அட்டை மீதுள்ள வாக்கியம் அல்லது வாக்கியங்களும் முக்கியம்.  அந்த நூலைப் படிக்கத் தூண்டுவதில் இந்த வாக்கியங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.  நூல் வாசகனை எட்ட வேண்டும் என்ற அக்கறை கொண்ட பதிப்பாளர் இந்த அட்டை வாக்கியங்களை எழுத ஒரு நிபுணரிடம் தருவார்.

 தமிழ் நூல்களில் சிலவற்றில் மட்டுமே இந்த அட்டை வாக்கியங்கள் அவற்றுக்குரிய முக்கியத்வத்தை உணர்ந்து எழுதப்படுகின்றன.  இந்த வாக்கியங்களில் பத்திரிகை விமரிசனத்திலிருந்து அல்லது ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் கூறியதிலிருந்து ஓரிரு வரிகள் இருக்கும்.

 இப்படிப்பட்ட வரிகளில் ஜெயகாந்தன் பெயர் பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை.  அவருடைய கட்டுரைகளிலோ உரைகளிலோ சமகாலத்து எழுத்தாளர் எவரைப் பற்றியும் அவர் அபிப்பிராயம் கூறியதாக எனக்கு நினைவு இல்லை.  பாராட்டு என்றில்லாது பாதகமாகவும் அவர் கூறியதில்லை.  ஆனால் அவருடைய முன்னுரைகளில் யாராவது தாக்கப்படுவதை உணர முடியும்.  அந்த முன்னுரைகளே ஏதோ முந்தைய ஜன்மத்தில் எழுதியது என்று அவர் கூறக்கூடும்.  என்வரையில் அது உண்மையும் கூட.

 இதர இந்திய மொழிகள் பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியாது.  ஆனால் ஆங்கிலத்தில் அவருடைய படைப்புகளின் மொழிபெயர்ப்பு விசேஷமாக இருந்ததில்லை. 'சில நேரங்களில் சில மனிதர்கள்'ஆங்கில மொழிபெயர்ப்பை நான் சுமார் முப்பதாண்டுகள் முன்பு படித்திருக்கிறேன். 'இந்தியன் ரிவ்யூ'வெளியிட்ட அந்த மொழிபெயர்ப்பு செய்திருந்த பேராசிரியருடன் சமீபத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தது.  அதை நன்கு திருத்தி அமைத்த பிறகே நூல் வடிவில் அச்சுக்குக் கொடுக்கக் கூறினேன்.
 ஐந்தாண்டுகள் முன்பு அமெரிக்காவில் உள்ள ஆண்டி சுந்தரேசன் என்பவர் மொழிபெயர்த்த சிறுகதைகளைப் படித்தேன்.  நன்றாக இருந்தது.  சமீபத்தில் கே எஸ் சுப்பிரமணியன் மொழிபெயர்த்த'ஒரு மனிதன், ஒரு வீடு'படித்தேன்.. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 கே எஸ்ஸின் மொழிபெயர்ப்பு வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் சில தமிழ்ச் சொற்களை அப்படியே பயன்படுத்தியது.  மொழிபெயர்ப்பு நூல்களைப் படிக்க விரும்புவார்கள்.  ஓரளவு முயற்சி எடுத்துக்கொள்ளத் தயங்க மாட்டார்கள்.  எப்படியும் நூலின் இறுதியில் ஆங்கில இணைச்சொற்கள் தரப்பட்டிருக்கும்.  மூலப் படைப்பில்,'மகனே'என்பது அடிக்கடி வருகிறது.  இந்தியச் சூழலில் குழந்தாய், மகனே என்பதற்கு ஆங்கில இணை இணையாகாது.  கே.எஸ்'மகனே'என்றே ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார்.  நாவலே நல்ல மனம் படைத்த மனிதர்கள் பற்றியது. 'மகனே'என்று அழைப்பது ஆழமான உறவையும் குறிப்பது.  இன்று எவ்வளவு பேர் தம் பிள்ளைகளை,'மகனே'என்று அழைக்கிறார்கள்?

 கே.எஸ் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.  அவருக்கும் எனக்கும் ஆறே வயது வித்தியாசம்.  அதுவே பன்னிரண்டாக இருந்தால,'உன் பணியை நீ மிகவும் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறாய், மகனே!' என்று கூறியிருப்பேன்.
(A Man, A Home and A World - Jayakanthan - Translation from Tamil
by K S Subramanian, Sahatiya Akademi, New Delhi - Price Rs.150) 

Please note this article appeared in Navina Virutcham 70th Issue



      

Comments

துரோகம் என்பது ஒரு ரோகம். அது எப்போது வருமென்று சொல்ல முடியாது. அது மன எதிர்ப்பு சக்தி அற்றவர்களுக்கு வருகிற நோயாக இருக்கலாம். ஆனால் அது தொற்று நோயல்ல.