Skip to main content

எதையாவது சொல்லட்டுமா..........50



ஜூலை 29,30,31, ஆகஸ்ட் 1 என்று 4 நாட்கள் வருகிற மாதிரி அரவிந்த் (என் பையன் பெயர்) லீவு எடுத்திருந்தான்.  வாஷிங்டன், நியுயார்க், நயகரா அருவி என்று மூன்று இடங்களுக்கு அழைத்துப்போக திட்டமிட்டிருந்தான். நான் யோசித்தபோது இந்த முறை இடத்தைச் சுற்றிவிட்டு வருவது கொஞ்சம் சோதனையைக் கொடுக்கும் என்று தோன்றியது.  வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் அரவிந்த் எங்களை விட பரபரப்பாக இருந்தான். வாஷிங்டன் செல்வதற்கு ப்ளோரிடா அருகிலுள்ள ஒரு ஏர்போர்டிலிருந்து செல்வதாக திட்டமிட்டிருந்தோம்.  ஒரு வாரம் முன்பே அரவிந்த் நெட் மூலம் டிக்கட் எடுத்திருந்தான். விமானப் பயணம் இரவு 8.30 மணிக்கு.  நாங்கள் மாலை 5 மணிக்கே கிளம்பிவிட்டோ ம்.  அரவிந்த் எடுத்த வாடகைக் கார் மூலம் ஏர்போர்ட் சென்று அங்கு வாடகைக் காரைத் திருப்பிக் கொடுத்தான்.  இந்த ஊரில் கார் இல்லாமல் எங்கும் செல்லமுடியாது என்பதால் காரை வாடகைக்கு எடுத்திருந்தான்.  வாடகைக்கு எடுக்கும் கார்கள்கூட ஏர்போர்டில் இருந்தது.   வாடகைக்குக் கார் கொடுக்க ஏகப்பட்ட கார் கம்பெனிகள் இருக்கின்றன.  அது பெரிய நெட்வொர்க். 2  வழக்கம்போல் நாங்கள் எங்கு சென்றாலும் எதாவது தாமதம் இல்லாமல் இருக்காது.  இங்கும் தாமதம்.  விமானப் பயணம் ஒரு மணி நேரம் தாமதம்.  இதனால் நாங்கள் வாஷிங்டன் போய்ச் சேரும் நேரம் இரவு 12 ஆகிவிடும்.  12 மணிக்குமேல் ஏற்கனவே பதிவு செய்த ஓட்டலுக்குச் செல்ல வேண்டும்.  விமானத்தில் 2 மணிநேரம் பயணம் என்பது சென்னையிலிருந்து டில்லி செல்லும் தூரம்.  கொஞ்சம் சிறிய விமானமாக இருந்தது. 
வாஷிங்டனில் இறங்கி, கார் பிடித்து விடுதிக்குச் செல்லும்போது மணி 1 ஆகிவிட்டது.  கொஞ்ச தூரம்போய்த்தான் இடம் பிடிக்க வேண்டியிருந்தது.  அங்குதான் வாடகை குறைச்சல்.  காலையில் 7.45 மணிக்கெல்லாம் கிளம்பித் தயாராக இருந்தோம்.  எங்களைப்போன்ற பயணிகள் கிளம்ப அதுதான் சரியான நேரம். விடுதியில் அந்த நேரத்தில்தான் shuttle ஏற்பாடு செய்தார்கள்.  ஒரு Metro ரயில் பிடித்து, அதில் பயணம் செய்தோம்.  மெட்ரோ ரயில் பார்க்க கம்பீரமாக இருந்தது.  அது மட்டுமல்ல கூட்டமே அதிகமில்லை.  இதுமாதிரியான மெட்ரோ ரயில் சென்னை போன்ற மாநகரத்திற்கு எப்போது வரும் என்று தெரியவல்லை.
வாஷிங்டனின் சுற்றும்போது, சைவச் சாப்பாடு சாப்பிடுவது பெரிய பிரச்சினையாக இருந்தது. இங்கு வந்தபோது எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பதாகப் படுகிறது. மேலும் இந்த நாட்டைச் சுற்றிப் பார்க்கும்போது பல நாட்டு மக்களும் வருகிறார்கள். மொழி, நிறம் எல்லாம் வேறுபட்டதாக இருந்தாலும், எல்லோரும் ஒரே வித குண அதிசயங்களாக எனக்குத் தெரிந்தார்கள்.  அமெரிக்கர்கள் பார்க்க சற்று ஆகரிதிகளாக இருந்தார்கள்.
நாங்கள் முதன் முதலாக வாஷிங்டனில் பார்த்த இடம் National Museum of Natural History என்ற இடம். நாங்கள் சுமந்து வந்த பைகளை அந்தக் கட்டிடத்தில் ஓரிடத்தில் பத்திரமாக வைத்து பூட்டிவிட்டு அப்புறம் சுற்றத் தொடங்கினோம்.  பிரம்மாண்டமான கட்டிடத்தில் தலைச் சுற்றும்படி பல இடங்கள். பல நாடுகளைச் சேர்ந்த கலாச்சாரங்களை தனித்தனியாக அடையாளம் காட்டியிருந்தார்கள்.  அதை நேர்த்தியான முறையில் ஒழுங்கு செய்தவிதம் ஆச்சரியமாக இருந்தது.  நாங்கள் அங்கயே பாதிநாளைக் கடத்திவிட்டோ ம்.  அப்படியும் முழுக்க முழுக்கப் பார்க்க முடியவில்லை.  பின் வெள்ளை மாளிகையைச் சுற்றத் தொடங்கினோம்.  நாங்கள் சென்றபோது அமெரிக்கா பாராளுமன்றத்தில் debt crisis ஓடிக்கொண்டிருந்தது.  கடுமையான வெயில்.  என்னால் தாங்க முடியவில்லை.  வெள்ளை மாளிகையின் முன்னால் பல குழுக்கள் அணு ஒழிப்புப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதுவும் வேடிக்கையாக நடத்துவதுபோல் தோன்றியது.  அதை போலீசே தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.  வெயில் தாங்க முடியாமல் எனக்கு தட்டாமாலைச் சுற்றுவதுபோல் சுற்றத் தொடங்கியது.  நான் ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டேன்.  அரவிந்த் பதைத்துவிட்டான்.  வாஷிங்டன் முழுவதும் நினைவு மண்டபகங்கள்.  National Galler of Art என்ற இடத்திற்குச் சென்றபோது, மாலை நுழைந்துவிட்டது.  நேரம் இல்லாமல் எல்லா கலை நுட்பங்களையும் அவசரம் அவசரமாகப் பார்க்க வேண்டியிருந்தது.  இரவு 8.30 மணிக்கு நியுயார்க் செல்வதற்கு ரயிலைப் பிடித்தோம்.
                                                                                                                                                                   @@@@@@@@

நான் எடுத்து வந்த இன்னொரு புத்தகம் Carlos Castenadaவின் The Active Side of Infinity என்ற புத்தகம். காஸ்டினாடாவின் முதல் புத்தகம் வெளிவந்தபோது 10 மில்லியன் பிரதிகள் விற்றதாம்.  பெரிய புகழ் அடைந்தவர், யார் கண்ணிற்கும் படாமல் மறைமுக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.  அவருடைய மரணமும் உடனடியாக யாருக்கும் தெரியவில்லை.  1 மாதம் கழித்துதான் காஸ்டினாடா இறந்து விட்டார் என்ற செய்தி டைம் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.  அப்போது காஸ்டினாடாவுடன் இருந்த 5 பெண்களும் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள். The Active Side of Infinity புத்தகம் வெளிவந்தபோது காஸ்டினடா உயிரோடு இல்லை.  முதன் முறையாக அப்புத்தகம் படித்தபோது ரமணரின் உபதேசங்கள் சாரம் இருந்ததுபோல் பட்டது.  இருந்தாலும் காஸ்டினாடாவின் புத்தகம் ஒரு நாவல் படிப்பதுபோல் பரபரப்பாக இருக்கும்.

Comments

நல்ல பிரயாண அனுபவம்..
Vassan said…
நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. நான் சீர்காழிக்காரன். 29 வருடங்களாக அமேரிக்காவில்; இதுதான் தாயகம். நீங்கள் சீர்காழியில் வேலை பார்க்கிறவரா..?

மேற்கு பக்கம் வரும் திட்டமிருந்தால் எங்கள் ஊர் பக்கம் - தெற்காசியர்கள் வெகு குறைவு இங்கே, தெரியப்படுத்தவும். சரிவந்தால் எங்கள் வீட்டிற்கு உங்களை உபசரிக்க ஆவல். vaasus அட் ஜீ மெய்ல் . கோம்
பயணத் திட்டமும் பரபரப்புடன் அதை செயல்படுத்துவதும் நம்முடைய பயண பரவசத்தை சிறிது பாதிக்கத்தான் செய்கின்றன. இன்னொரு தடவை செல்லலாம். இனியும் நிதானமாய் காணலாம். உங்கள் பயண அனுபவங்களை இன்னும் சொல்லுங்கள்.
Anonymous said…
வணக்கம்.

http://tamilonline.com/thendral/Auth.aspx?id=129&cid=2&aid=7310&m=c&template=n

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்தாளர் நீங்கள்தான் அல்லவா? மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தென்றலில் உங்களைப் பற்றியக் கட்டுரை படித்தேன். மிக மகிழ்ச்சியாக இருந்தது. அந்த இணைப்பைத் தந்த ரமணன் அவர்களுக்கு நன்றி.