கடந்த 7 ஆண்டுகளாக நான் சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்குப் போயும் வந்தும் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் பஸ் பயணத்தைத் தவிர்க்க முடியவில்லை. இங்கே உள்ள Semi Deluxe பஸ் மூலம் சென்னையிலிருந்து இரவு 11 மணிக்குக் கிளம்பினால், காலையில் போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால் பஸ் பயணம் இரவு முழுவதும் அளவுகடந்த வேதனையாக இருக்கும். பெரும்பாலும், யூரின் போகிற பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தெரியாது. ஆண்களுக்கே இப்படி என்றால், பெண்கள் நிலையை நினைத்துப் பாருங்கள்.
அரவிந்த் நியுயார்க்கிலிருந்து நயக்கரா நீர்வீழ்ச்சிக்கு இப்படித்தான் ஒரு பஸ் ஏற்பாடு செய்திருந்தான். எனக்கு சென்னை ஞாபகம் வந்தது. என்னுடைய அதிருப்தியை அவனிடம் தெரிவித்துக்கொண்டேன். இரவு 10.30 மணிக்குப் பயணம். முன்னதாகவே வந்திருந்து பஸ் செல்லும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஒரே கூட்டம். எல்லோரும் வரிசையில் நின்றிருந்தார்கள். கனடா நாட்டிற்குச் செல்பவர்கள் எல்லோரும் நின்றிருந்தார்கள். வரிசை வரிசையாக பஸ்கள் கிளம்பிக்கொண்டிருந்தன.
நாங்கள் ஏற வேண்டிய பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். பொதுவாக எல்லாப் பஸ்களும் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்டிருக்கும். பஸ் மூலையில் ஒரு ஓய்வு அறை இருந்தது. ஓய்வு அறை என்பது பாத்ரூமைத்தான் குறிக்கப்படுகிறது. யூரின் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, பஸ் உள்ளேயே இருந்த ஓய்வு அறை இருந்தது ஆச்சரியமாக இருந்தது. பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டாமென்று நிம்மதியாக இருந்தது. ஒரு கருப்பு இன பெண்மணி 2 வயதுப் பையனை மட்டும் அழைத்து வராமல், ஒரு குட்டி நாயையும் ஒரு பையில் போட்டு அழைத்து வந்திருந்தாள். வண்டி புறப்பட்டு கொஞ்ச நேரம் கழித்துதான் அவள் எதையோ தேடிக்கொண்டிருக்கும் போதுதான் அவள் நாய் கொண்டு வந்திருக்கிறாள் என்பது தெரிந்தது. வண்டி படு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
அரவிந்த் மூலம் எனக்கு பஸ், ரயில், விமானம் என்று எல்லாவிதங்களிலும் பயணம் மேற்கொள்ள முடிந்தது. நயக்கரா நீர்வீழ்ச்சியை நாங்கள் காலையில்தான் போய் அடைந்தோம். அங்கிருந்து தங்கும் இடத்திற்குச் சென்றோம். எல்லாவற்றையும் அரவிந்த் நெட் மூலம் ஏற்பாடு செய்திருந்தான்.
பின் ஒரு பயண வண்டியை ஏற்பாடு செய்து, நயக்கரா நீர் வீழ்ச்சியைச் சுற்றிப் பார்த்தோம். கனடா நாட்டையும், அமெரிக்கா நாட்டையும் இணைக்கிற பாலம் ஒன்று இருக்கிறது. நடந்தே பலர், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று விடுகின்றனர். கனடா நாட்டிலிருந்து நீர் வீழ்ச்சியை ரோப் கார் மூலம் கடந்து சென்று பார்க்கிறார்கள். நீர் வீழ்ச்சியில் குளித்ததோடு மட்டுமல்லாமல், போட் மூலம் ராட்சச அருவியைக் கண்டு களித்தோம். நான் குற்றால அருவி போயிருக்கிறேன். அதைவிட பல மடங்கு பரவலான நீர் வீழ்ச்சி இது. நயக்கரா நீர் வீழ்ச்சியைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை. ரொம்பவும் அமைதியான இடம் நயக்கரா என்ற அந்த இடம். திரும்பவும் நாங்கள் விமானம் மூலம் அங்கிருந்து ப்ளோரிடா வந்து சேர்ந்தோம்.
Comments