அழகியசிங்கர்
நான் இரண்டாவது நாவலை எழுதி முடிப்பேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரொம்ப நாட்களாக ஏன் ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருந்தேன். பல நாட்கள் நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதே மறந்து போய்விடும்.
போன ஆண்டு üஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்ý என்ற என் தன் புனைவு நாவலைக் கொண்டு வந்தேன். அதற்கு எதிர்ப்பும் பாராட்டும் ஏற்படாமல் இல்லை. வழக்கம்போல் பலர் கண்டுகொள்ளவே இல்லை.
தமிழ்ச்சூழலில் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான். அந்தத் தன்புனைவு நாவலில் நான்தான் முக்கிய பாத்திரமாக வருவேன். ஒரு கட்டத்தில் தோன்றி இன்னொரு கட்டத்தில் நாவலிலிருந்து விலகிப் போய்விடுவேன். ஒரு கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு இது. ஒரு மத்தியான பொழுதில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். எதிர்பாராதவிதமாய் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். நாவல் என் கணினியிலேயே இருக்கிறது என்று தோன்றியது. அப்படி வெளிவந்த நாவல்தான் அது.
இரண்டாவதாக நான் எழுதிய நாவலை பா. ராகவன்தான் முடுக்கி விட்டார். ஒரு போட்டிக்காகத் தயார் செய்தது. போட்டியின் முடிவு எனக்கு முன்னதாகவே தெரிந்தது. இது முழுவதும் வேற நாவல். இரண்டு இலக்கியக் கர்த்தாக்களின் சண்டை என்று சொல்லலாம். சண்டை என்றால் உண்மையாகப் போய் சண்டை போடுவது இல்லை.
பிறகு குடும்பத்தில் நிகழும் நிகழ்ச்சிகள். 277 பக்கங்கள் கொண்ட நாவல் இது. விலை ரூ.225. இதையும் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன்.அதில் ஒரு பிரதியை இங்குத் தருகிறேன்.
üஒவ்வொரு இதழிலும் நாதன் அவர்களின் கவிதையைப் பிரசுரம் செய்துகொண்டிருந்தேன். இலக்கிய உலகில் நாதன் எல்லோருடைய கவனத்தையும் கவருபவர். சிலர் அவர் எழுத்தை ரசிப்பவர்கள். சிலர் எதிர்ப்பார்கள். 3வது இதழில் வெளிவந்திருந்த நாதன் கவிதையைப் படித்துவிட்டார் ரூபகிரி. உடனே கோபமாக, 'இதெல்லாம் கவிதைன்னு போட்டி ருக்கீங்களே,' என்று எரிந்து விழுந்தார்.
"நீங்களும் கவிதை எழுதிக் கொடுங்கள், பிரசுரம் செய்கிறேன்," என்றேன்.
அவர் அதற்குப் பதில் சொல்லவில்லை. நாதன் கவிதை இதழில் வெளிவந்ததுதான் அவருக்குக் கோபம். அன்று என் கூட பேசாமல் போய்விட்டார். எப்போதும் போல் பேசும் சுபாவம் உள்ளவர் அன்று ஏனோ சரியாகப் பேசவில்லை. நான் நினைத்தேன். அவருடைய படைப்புகளையும் நாம் இதழில் கொண்டு வர வேண்டுமென்று. திரும்பவும் பார்க்கும்போது எதாவது எழுதித் தரும்படி வற்புறுத்துவோம் என்று நினைத்துக் கொண்டேன்.'
Comments