Skip to main content

துளி - 94- புத்தகக் காட்சி நினைவுகள் 4


அழகியசிங்கர்





ஒரு போன் வந்தது.  புத்தகக் காட்சி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்டு.  என் பதில். என் கடை முன்னால் இந்தப் பக்கமாகவும் அந்தப் பக்கமாகவும் எல்லோரும் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றேன்.  ஒரு விதத்தில் இது சரிதான்.  எல்லோரும்  என் கடைக்குள் வந்தால் தடுமாறிப்போய்விடுவேன்.  அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது.  

ஒரு புத்தகக் காட்சியை நடத்துவது சிரமம்.  அதை விடச் சிரமம் புத்தகக் கடையில் புத்தகங்களை விற்பது.   கடைக்குள் வருபவர்களை இந்தப் புத்தகம் வாங்க வேண்டுமென்று கட்டளை இட முடியாது. கட்டாயப் படுத்தவும் முடியாது.

விருட்சம் அரங்கிற்கு ஒருமுறை உதவி செய்யப் புத்தகம் வெளியிடுபவரே வந்தார். அவர் இளைஞர். மிகக் குறைவாகவே புத்தகங்களைக் கொண்டு வந்திருந்தார்.  அவர் புத்தகங்கள் குறித்து அவருக்குப் பெருமை அதிகம்.  ஆனால் அவரால் தனியாக அரங்கம் எடுத்துப் புத்தகம் விற்க முடியாது.   என் கடையைப் பார்த்துக்கொள்ளும் பணிக்காகத் தினமும் அவருக்கு ஒரு தொகையைக் கொடுப்பேன்.  அப்படிப் பார்த்துக்கொண்டிருந்தவர் திடீரென்று அவருடைய புத்தகங்களைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார். 

என் கடையில் அவர் புத்தகங்களையும் வைத்துக்கொள்ள அனுமதி அளித்திருந்தேன்.  அதோடு நில்லாமல் அவர் வெளியிட்ட புத்தகங்களையும் கையில் வைத்துக்கொண்டு வருபவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் வாங்குங்கள் என்று கூறி அவர் புத்தகங்களை வருபவர்களிடம் விற்றுக்கொண்டிருந்தார்.

இதுமாதிரி பிரச்சாரம் செய்யாதீர்கள்.  வருபவர்கள் அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக்கொள்ளட்டும் என்று அவரிடம் கடுமையாக சொல்லும்படி ஆகிவிட்டது.  அடுத்த ஆண்டிலிருந்து அவர் வரவில்லை.  நானும் கூப்பிடவில்லை. 

இது ஒரு பாடம்.  கடையில் உதவி செய்ய வருபவர் அவரே புத்தகம் போடுபவர்களாக இருந்தால் இதுமாதிரியான ஆபத்து இருக்கத்தான் செய்கிறது.

என்னடா இது ஒருவன் ஆயிரக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து புத்தகங்களை விற்கத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறானே அவன் கடையிலேயே போய் நம்ம புத்தகங்களை மட்டும் வாங்க பிரச்சாரம் செய்கிறோமே என்று தோன்றவில்லை. 

பல கடைகளில் எளிய மனிதார்கள் புத்தக ஆசையில் புத்தகங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.   அதனால் பெரும்பாலும் குடும்பமே புத்தகம் விற்க வந்து விடும்.  எத்தனையோ கடைகளில் மனûவியும் கணவனும் புத்தகங்களை விற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் பதிப்பாளராகவும் புத்தக விற்பனையாளராகவும் இருப்பார்கள்.

ஒரு சிலர்தான் கடைகளில் ஆட்களை நியமித்துப் பெரிய அளவில் புத்தகங்களை விற்றுக் கொண்டிருப்பார்கள்.  அவர்களெல்லாம் பெரிய பதிப்பாளர்கள்.  ஆனால் ஒரு புத்தகத்தை விற்பது அவ்வளவு சுலபமாக எனக்குத் தோன்றவில்லை.

Comments