Skip to main content

துளி - 93- புத்தகக் காட்சி நினைவுகள் 3


அழகியசிங்கர்




பொதுவாகப் புத்தகக் காட்சி உரிய நேரத்திற்கு நான் வர முடியாது.  நேற்று கூட்டம் 12 மணிக்குக் கூட்டம் ஆரம்பிக்கிறது என்று போனேன்.  பிறகுதான் தெரிந்தது பதினொரு மணிக்கே.

புத்தகக் காட்சியில்தான் பல நண்பர்களைப் பார்த்து உரையாடமுடியும்.  புத்தகக் காட்சியில் பரிதாபத்துக்குரியவர்கள் கவிஞர்கள்.  

என்ன தலைகீழாக நடந்தாலும் கவிதைப் புத்தகம் விற்பது என்பது நடக்காது.  பலர் கவிதைப் புத்தகங்களை விசிட்டிங் கார்டு போல கொடுத்துவிடலாமென்று கேவலப் படுத்துவார்கள்.  அதுமாதிரியெல்லாம் கொடுக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றும்.

கவிதைப் புத்தகம் கொண்டு வருபவர்களை நான் எச்சரிக்கை செய்வது வழக்கம்.  இப்போது உள்ள சூழலில் கவிதைப் புத்தகத்தைக் குறைவாக அச்சிட்டு வைத்து கொள்ளலாமென்று தோன்றுகிறது.

நான் ஞானக்கூத்தனின் இம்பர் உலகம் (அவர் சொல்லி) கவிதைத் தொகுதி கொண்டு வந்தபோது 50 பிரதிகள்தான் விற்க முடிந்தது.  நானும் அதிகமாக அடிக்க வில்லை.  அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு 100 பிரதிகள்தான் அடித்திருந்தேன். 100 கவிஞார்களின் கவிதைகளைத் தொகுத்து மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்று தொகுதி கொண்டு வந்தேன்.  அளவோடுதான். 

ஒரு புத்தகம் 100 பிரதிகள் விற்றால் குதிக்க வேண்டும்போல் தோன்றும். அதுவும் கவிதைப் புத்தகங்கள் விற்றால் ஒரே உற்சாகமாகிவிடுவேன். எனக்குத்தான் இதுமாதிரி நடக்கிறது.  மற்ற பதிப்பாளர்களுக்கு அது மாதிரி இல்லை என்று நினைக்கிறேன்.

என் நண்பர் மையம் ராஜகோபல் கவிதைப் புத்தகங்கள் கொண்டு வர விரும்பினார்.  அவரிடம் எச்சரித்தேன்.  எத்தனைப் புத்தகங்கள் கொண்டு வரப் போகிறீர்கள்.  அவர் நூறைத் தாண்டிய ஒரு எண்ணிகையைக் கூறினார்.  300 அல்லது 500.  நான் அலறினேன். ஏன் அப்படி செய்கிறீர்கள்.  50 போதும் என்றேன்.  அவருக்கு நிறையா நண்பர்கள் என்றார்.  அப்படியென்றால் 100 அடியுங்கள். அவர் என் பேச்சைக் கேட்கவில்லை.

என்னிடம் விற்பதற்கு அந்தப் புத்தகம் கொடுத்தார்.  அந்தக் கவிதைப் புத்தகம் தலைப்புப் பார்த்தவுடன் இதுமாதிரி தலைப்பில் ஒரு கவிதைப் புத்தகம் எழுதினால் எப்படி விற்குமென்றுதான் தோன்றியது.  இது எடுபடாது என்றேன் ராஜகோபாலனிடம். 

ஆனால் அவருக்கு நிறையா நண்பர்கள் இருக்கிறார்கள் என்றார் ராஜகோபால் திரும்பவும்.  எனக்குச் சந்தேகமாக இருக்கிறது என்றேன்.   கஞ்சா என்ற தலைப்பில் ஒரு நீண்ட கவிதையை 64 பக்கங்களுக்கு எழுதி உள்ளார்.  எப்படி சொல்வது என்று தெரியவில்லை அவருடைய கவிதை வரிகளில் தமிழ் விளையாடுகிறது. வண்ணமலைக்குன்றின் மேல் அல்லிக்குளம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.  இனிமேல்தான் மனம் ஊன்றி கவிதையை வாசிக்க வேண்டும். கவிதைப் புத்தகம் எந்த ஆண்டு வந்தது என்பதை ராஜகோபாலன் குறிப்பிடவில்லை. 

பழனிவேள்  இப்போது உயிருடன் இல்லை.  என்னுடைய புத்தக அரங்குக்கு வந்திருந்து சில நிமிடங்கள் உரையாடியிருக்கிறார். அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறேன்.  அதை கணினியில் தேடிக்கொண்டிருக்கிறேன்.    என் புத்தக அரங்கில் வருபவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது என் வழக்கம்.  பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருப்பவரைப் போல் தோற்றம் தருவார்.  ஆனால் பழகுவதற்கு நல்ல மனிதர்.

இந்த முறை புத்தகக் காட்சிக்குப் போகும்போது அவருடைய கவிதைத் தொகுப்பு கிடைத்தது.  விற்கலாமென்று 3 பிரதிகள் மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன். விற்பனைக்கு வந்த எல்லாக் கவிதைத் தொகுதிகளையும் ஒரு தட்டில் குவித்து வைத்திருக்கிறேன். அவருடைய தொகுதியையும் சேர்த்து வைத்திருக்கிறேன்.  20 சதவீதம் குறைத்துக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன்.  ஆனால் யாரும் அந்தத் தட்டை தொடக்கூட இல்லை. 


Comments

Popular posts from this blog