Skip to main content

க.நா,சுவின் சிறுகதைகள்

அழகியசிங்கர்



க.நா.சுவின் படைப்புகள் என்ற பெயரில் போன ஆண்டு 4 புத்தகங்களையும் இந்த ஆண்டு 2 புத்தகங்களையும் கொண்டு வந்துள்ளேன்.  படைப்புகள் பகுதியில் 7, 8 சிறுகதைகள்.  இந்த இரு தொகுதிகளில் 28 கதைகள் கொண்டு வந்துள்ளேன்.  இப் புத்தகத் தயாரிப்பில் எனக்கு உறுதுணையாக இருப்பவர் கிருபானந்தன்.  அவர் முயற்சி இல்லாவிட்டால் இந்தத் தொகுப்புகள் சாத்தியமாக இருக்காது.

ஆனால் இன்னும் கூட க.நா.சு கதைகள் இருக்குமென்று தோன்றுகிறது.  மூன்றாவதாக ஒரு தொகுப்பில் அதில் விட்டுப்போன கதைகளையும் சேர்க்க உள்ளேன்.

க.நா.சு  சகல கலா வல்லவர்.  கிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், மொழி பெயர்ப்பு படைப்புகள் என்று அசுரத்தனமாக எழுதிக் குவித்தவர். 

புதுக்கவிதைக்கு புது வடிவம் அளித்தவர்.  சோதனை ரீதியாகப் பல முயற்சிகளைச் செய்துள்ளார்.  க.நா.சு படைப்புகள் என்ற பெயரில் நாங்கள் 6 புத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

இதற்கு முன்னால் என் முயற்சியில் அவதூதர் என்ற நாவலையும் ஆட்கொல்லி என்ற நாவலையும் கொண்டு வந்துள்ளேன்.  மிகக் குறைவான விலையில் இப் புத்தகங்களைத் தயாரித்துள்ளேன்.  மேலும் குறைவான பிரதிகளை அச்சடித்துள்ளேன்.  

அதேபோல் க.நா.சு வின் அத்தனைப் புத்தகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வரத் திட்டம் தீட்டி உள்ளேன். எனக்கு இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.  üநீங்கள் ஏன் இலக்கியக் கூட்டங்கள் நடத்தக் கூடாது,ý என்று என்னைப் பார்த்து க.நா.சு சொன்னது.

ஒருமுறை க.நா.சு மயிலாப்பூரில் குடியிருந்தார்.  ஞானக்கூத்தன், நகுலன், காசியபன், வைத்தியநாதன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த் என்று பெரிய கூட்டமே அவரைப் போய்ப் பார்த்தோம்.  மயிலாப்பூரில் உள்ள ராயர் ஓட்டலில் போய் டிபன் சாப்பிட்டோம்  

க.நா.சுவிடம் அன்று என்ன பேசினோம் என்று சிறிது கூட என் ஞாபகத்தில் இல்லை.

விருட்சம் 3வது இதழ் தயாரித்துக்கொண்டிருந்தேன்.  க.நா.சுவிடம் ஒரு கட்டுரை கேட்டேன்.  உடனே கொடுத்தார்.  புதுக்கவிதையின் எல்லை என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை இருந்தது.  அந்தத் தருணத்தில் அந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்ய வில்லை.  சமீபத்தில்தான் பிரசுரம் செய்தேன்.  கவிதையின் எளிய வடிவத்தை கநாசுவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். 


Comments