Skip to main content

இந்திரா பார்த்தசாரதியைச் சந்தித்தேன்

அழகியசிங்கர்





போன சனிக்கிழமை இலக்கியச் சிந்தனை, குவிகம் கூட்டத்திற்கு ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அம்புஜம்பாள் தெருவிற்குச் சென்றேன்.  நான் ஐந்தரை மணிக்கே அங்குச் சென்றுவிட்டேன்.  இந்திரா பார்த்தசாரதியைப் பார்க்க வேண்டுமென்றுதான்.  

சமீபத்தில் கடுமையான அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி.  நான் அவர் வீட்டின் முன் நுழைவதற்கு வண்டியை வைத்துவிட்டுத் திரும்பினேன்.  என்னை கல்கி  பொறுப்பாசிரியர்  (அவர் மனைவியுடன் வந்திருந்தார்) ரமணன் கூப்பிட்டார்.  

"கூட்டம் ஐந்து மணிக்கென்று போட்டிருக்கிறார்கள்.  யாரும் வரவில்லையே?"

"இல்லை ஆறுமணிக்குத்தான் கூட்டம்.  தவறுதலாகக் குறிப்பிட்டிருப்பார்கள்.  நான் இந்திரா பார்த்தசாரதியைப் பார்க்கப் போகிறேன்," என்றேன்.

இ.பாவைப் பார்க்க கல்கி ஆசிரியரும் என்னுடன் சேர்ந்து கொண்டார்.  இ.பா வீட்டு வாசலில் காலிங்பெல்லை அழுத்தியவுடன், இ.பாவே கதவைத் திறந்தார்.  கொஞ்சம் பலவீனமாகப் பார்க்கத் தென்பட்டாலும், ஆரோக்கியமாகவே இருக்கிறார்.  அவருக்கு 90 வயது.  அந்த வயதிலும் கடுமையான அறுவைச் சிகிச்சையை எதிர்கொண்டிருக்கிறார். 

அன்றுதான் கல்கி பத்திரிகைக் கடைகளில் வெளிவந்திருந்து. அதில் üஈஸ்வர அல்லா தேரே நாம்ý என்ற இந்திரா பார்த்தசாரதியின் கதை.  ஒரு பக்கம்தான் கதை.  அதைச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார் கல்கி ஆசிரியர். உடனே கடையில் கல்கி பத்திரிகையை வாங்கவேண்டுமென்று தோன்றியது. 

கூட்டம் முடிந்து திரும்பும்போது நான் வீட்டிற்குப் போகிற வழியிலேயே கல்கி பத்திரிகையை வாங்கினேன்.  கல்கி வித்தியாசமான தோற்றத்திலிருந்தது.  இ.பா கதை கன கச்சிதமான வடிவத்தில் ஒரு பக்கத்திலிருந்தது. இந்த வயதிலும் உடம்பு முடியாதத் தருணத்திலும் கதை எழுதி கல்கிக்கு அனுப்பியிருந்தார்.  எனக்கு என்னமோ கல்கி வாசகருக்கு இந்தக் கதை புரியுமோ என்று தோன்றியது.

கல்கியின் லே அவுட் பெரிய வடிவத்தில் மாறி இருந்தது.    68 பக்கத்தில். இரண்டு அல்லது மூன்று கதைகள்.  மூன்று தொடர்கள். தொடர்களும் இரண்டு மூன்று பக்கங்களில் அடங்கி விடுகின்றன.   வழக்கம் போல கல்கியின் அலை ஓசை.  முன்பெல்லாம் கல்கியில் தொடர் நாவல்கள் வரும்.  எனக்குத் தெரிந்து பி ரெங்சநாயகியின் தொடரை வாசித்திருக்கிறேன்.  ஜெகசிற்பியின் கிளிஞ்சல் கோபுரம். எப்போதும் கல்கியில் திரைப்பட நாயகிகளின் அட்டைப் படங்கள் வருவதில்லை.  பொறுப்பாசிரியர் ரமணனின் முயற்சியில் கல்கி சிறப்பாக இருக்கிறது. 

Comments