Skip to main content

துளி - 88 - ஸ்டீல் ரேக்குகளை காலி செய்து கொண்டிருக்கிறேன்


அழகியசிங்கர்



நான் மாலை என் நூலகத்திற்குச் சென்று சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைச் சாக்கு மூட்டையில் இடத்துவங்கினேன். புத்தகக் காட்சிக்கு 7 ஸ்டீல் ரேக்குகள் தயார் செய்ய வேண்டும்.  எப்போதும் என் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எல்லாம் ஸ்டீல் ரேக்குகளில் வைத்திருப்பேன்.  பத்து பன்னிரண்டு ரேக்குகள் இருக்கும்.  என் நூலகத்தில் நான் தயாரித்திருக்கும் புத்தகங்கள் ஒரு பக்கமும் நான் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்கள் இன்னொரு பக்கமும் இருக்கும். 

புத்தகக் காட்சிக்கு ஏழு ரேக்குகள் போதும்.  இந்த ரேக்குகள் புத்தகக் காட்சி முடிந்து வந்தவுடன் உருமாறிப் போய்விடும். தட்டு: பிசகி விடும்.  இரும்பு கால் வளைந்திருக்கும்.  பின் அதைச் சரிசெய்ய வேண்டும். 

மேலும் சாக்கு மூட்டைகளில் புத்தகங்களை எடுத்து வைத்துவிடுவேன்.  அந்தச் சாக்கு மூட்டைகளைப் புத்தகக் காட்சிமுடிந்து பிரித்து ரேக்குகளில் வைக்கும்போது மாதக் கணக்கில் ஆகிவிடும்.  அவ்வளவு லேசில் முடியாது.

ஒவ்வொரு முறையும் புத்தகங்களைத் திருப்பி அடுக்கும்போதும் சரி, சாக்கு மூட்டைகளில் வைக்கும்போதும் சரி எனக்குப் பிடித்துத்தான் செய்கிறேன். 

இன்று மாலை 6 மணிக்கே போஸ்டல் காலனி நூலகத்திற்குப் போய்விட்டேன்.  வருவதற்கு 9 ஆகுமென்று வீட்டில் சொல்லி விட்டு வந்திருந்தேன்.

புத்தகங்களைச் சாக்கில் போடும்போது ஒவ்வொரு புத்தகமாகப் பார்க்கும்போது எதாவது சிந்தனை செய்தபடி இருப்பேன்.  அப்படி ஒரு புத்தகம் கிடைத்து என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரே ஆண்டில் 1,00,000 பிரதிகள் விற்றதாக அந்தப் புத்தக முகப்பட்டையில் வெளியிட்டிருந்தார்கள்.  ஆனந்தவிகடன் வெளியீடாக அந்தப் புத்தகம் வந்திருந்தது.  

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்பதுதான் தலைப்பு.  சுவாமி சுகபோதானந்தா என்ற பெயரில் வந்திருந்தது. 

அது நிஜ பெயரா புனைபெயரா என்று தெரியவில்லை. இந்தப் புத்தகம் 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வந்திருந்தது.  1998 டிசம்பர் மாதத்திற்குள் 1,00,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்து விட்டன்.

நானும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.  நான் வெளியிடும் கவிதைப் புத்தகங்கள் எதுவும் கொஞ்சங்கூட நகர்வதாக இல்லை.  உண்மையில் கவிதைகள் மட்டுமல்ல எல்லாப் புத்தகங்களுமே. 

உடனே நானும் மனசே ரிலாக்ஸ் மாதிரி புத்தகங்கள் எழுத முடியாது என்று தெரியும்.  என் நண்பர் ராஜேஸ் அவர்களிடம் போன் செய்தேன்.  நான் என்ன போன் செய்தாலும் அவரும் சிரித்தபடியே உள் வாங்கிக் கொள்வார்.  அவர் கருத்துக்களையும் சொல்வார்.  

"சார் அந்தப் புத்தகம் 90 இறுதியில் வந்தது...இப்ப அவர் புத்தகம் எடுபடாது..அவருக்கு மாற்றாக ஜக்கி, நித்தியானந்தா எல்லோரும் வந்து விட்டார்கள்.." என்றார்.

"அவர்கள் புத்தகங்கள் ஒரு லட்சம் விற்கட்டும்..நான் கொண்டு வரும் கவிதைப் புத்தகங்கள் 100 பிரதிகள் விற்பதற்கு என்ன வழி," என்றேன்.

"ஒன்றும் செய்ய முடியாது.  ஒரு சமயம் விளம்பரம் செய்தால் விற்கலாம்," என்றார் சிரித்தபடி. 

"இருபது வருடங்களாக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதெல்லாம் நடக்காது. விளம்பரம் செய்தாலும் போகாது," என்றேன்.

நான் 6 ரேக்குகளை காலி செய்து மூட்டையில் புத்தகங்களை அடுக்கி விட்டேன்.  இன்னும் ஒரு ரேக்கில் உள்ள புத்தகங்களை சாக்கில் திணிக்க வேண்டும்.  அந்த ரேக்கில் இருப்பது கவிதைப் புத்தகங்கள்.



Comments