அழகியசிங்கர்
சென்னை புத்தகக் காட்சியின்போது எனக்கு எப்போதும் ஞாபகம் வருவது அப்பா. அவர் இறந்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றுதான் அவர் தவசம்.
2017ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சி துவங்குகிற நாள் ஐந்தாம் தேதி. அன்றுதான் அப்பா இறந்து விட்டார். அதனால் என்னால் ஒவ்வொரு முறை புத்தகக் காட்சி வரும்போதும் மறக்க முடியாத நாளாக இருக்கும்.
அவர் இறந்து போகிற அன்று நான் பதட்டமாக இருந்தேன். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை அப்பா இறந்தார். அன்றைய தினம் நாட்குறிப்பில் எழுதியிருந்ததை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
"இன்று முழுவதும் அப்பா சாப்பிடக் கூடப் படுத்தினார். கண்களை விழிக்கவில்லை. வாயைச் சரியாய் திறக்கவில்லை. எப்போதும்போல் அப்பாவிற்குக் கஞ்சி கொடுக்கச் சென்றேன். வாயைத் திறக்க முடியவில்லை. அப்பா வேறு மாதிரி இருந்தார். எந்தவிதமான ரெஸ்பான்ஸ÷ம் இல்லை. அப்பா கொஞ்சம் கொஞ்சம் மரணத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். நான் பதட்டமானேன். மைதிலியைக் கூப்பிட்டேன். பின் பக்கத்தில் உள்ள சுரேஷ்ஷைக் கூப்பிட்டோம். ஆம். அப்பா 9.05க்கு இறந்து விட்டார். எனக்கு அதிர்ச்சி. நண்பர் மருத்துவர் பாஸ்கரன் வந்திருந்து கையெழுத்துப் போட்டார். அப்பா மரணமடைந்ததை உறுதிப் படுத்தினார். அவருக்கும் அப்பா நண்பர்.
ரமணனிடம் (என் சகோதரன்) சொன்னேன். அவன் வருவதற்குள் அப்பா இறந்து விட்டார். பவானியும் ரமணனும் இங்கே தங்கினார்கள். எல்லோருக்கும் போன் செய்து சொன்னேன். வித்யா அப்பா ஸ்ரீனிவாசனும், அவர் மனைவியும் பலவிதங்களில் உதவி செய்தார்கள். ராத்திரி முழுவதும் நான் தூங்கவில்லை."
Comments