Skip to main content

புத்தகக் காட்சி நினைவுகள் 2


அழகியசிங்கர்



புத்தகக் காட்சி ஜனவரி மாதம் நடப்பதுதான் சரி.  வங்கியில் பணிபுரியும் போது பொங்கல் திருவிழாவை ஒட்டி பணம் முன்னதாகக் கொடுப்பார்கள்.  பின் ஓராண்டிற்கான மருத்துவ சலுகைக்கான தொகையும் பெற முடியும். இந்தத் தொகையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் எதாவது புத்தகம் கொண்டு வருவதும்,  நடக்கும் புத்தகக்காட்சிக்கு வாடகை தருவதுமாக இருப்பேன்.

ஓராண்டில் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள்தான் கொண்டு வர முடியும்.  பல ஆண்டுகள் நான் இப்படித்தான் புத்தகங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தேன்.  விருட்சம் இதழையும் நான்கு இதழ்கள் கொண்டு வந்து விடுவேன். சிலசமயம் 3 இதழ்களாகப் போய்விடும். 

நான் முதலில் கொண்டு வந்தது கவிதைப் புத்தகம்.  10 ஆண்டுகள் மேல் ஆயிற்று அதை விற்பதற்குள்.  பெரும்பாலும் இலவசமாகக் கொடுத்தேன்.  என்னுடைய கவிதைத் தொகுதி இல்லை. சில எழுத்தாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து புத்தகங்களைக் கொண்டு வருவேன்.  என் கவிதைப் புத்தகங்கள் நன்றாக விற்று உள்ளன.  'தொலையாத தூர' மாகட்டும், 'யாருடனும் இல்லை' ஆகட்டும்.

என் புத்தகங்கள் கவிதைப் புத்தகங்களாக இருப்பதால் நூலக உத்தரவு வாங்குவதற்கு கிடைக்கவில்லை.  இப்போது இன்னும் மோசம்.

நகுலன் அவர் புத்தகத்தைக் கொண்டு வரும்போது 30 பிரதிகளுக்கு மேல் கொண்டு வராதீர்கள் என்பார்.  அவர் சொல்வது இன்று வரை உண்மை. அதுவும் கவிதைப் புத்தகத்திற்கு அது பொருந்தும்.  அவருடைய இரு நீண்ட கவிதைகள் கொண்டு வந்தேன்.  ஒரு பல்கலைக்கழகத்தில் எம் ஏ மாணவர்களுக்கு பாடப் புத்தகம்.  என்ன சோகம் என்றால் அந்தப் புத்தகத்தைப் படிக்க இரண்டே இரண்டு மாணவர்கள்தாம்.

ஒவ்வொரு முறையும் புத்தகக் காட்சி வரும்போதும் என் பொழுது உற்சாகமாக இருக்கும்.  மற்ற பதிப்பாளர்கள் புத்தகங்களை நான் விற்பேன். யாராவது என்னிடம் விற்கக் கொடுத்தால் விற்றுக் கொடுப்பேன்.

நான் ஒவ்வொரு ஆண்டும் எனக்குக் கிடைக்கும் தொகையில் புத்தகங்களைக் கொண்டு வருவேன்.  ஆனால் ஒரு போதும் என் மனைவியிடமோ என் தந்தையாரிடமோ (அவர் பெயரில்தான் பதிப்பகத்தை நடத்தினேன்) அல்லது என் நெருங்கிய (அப்படி யாராவது உண்டா) நண்பர்களிடமோ ஒரு பைசா கேட்டதில்லை. 

வருடத்திற்கு 15 நாட்கள் எனக்கு உற்சாகமாகப் பொழுதாக இருக்கும்.  பல எழுத்தாளர்களைச் சந்திப்பேன்.  அவர்களுடன் பேசிப் பொழுது போக்குவேன்.  புத்தகக் காட்சி முடிந்தவுடன் புத்தக மூட்டைகளுடன் திரும்பவும் என் இடத்திற்கு வரும்போது எதையோ பறி கொடுத்தது போலிருக்கும் கொஞ்ச நாட்களுக்கு...



Comments