அழகியசிங்கர்
நாம் எல்லோரும் பல அவதாரங்கள் எடுத்துக்கொள்கிறோம். சிலர் அதில் வெற்றியும் பெறுகிறார்கள். சிலர் தோல்வியும் அடைகிறார்கள். புத்தக விற்பனையாளனாக இருந்தால் புத்தக விற்பனையாளனாக மட்டும் இருக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தையும் எப்படி விற்க வேண்டுமென்றுதான் யோசிக்க வேண்டும்.
விற்பனையாளனாக மட்டும் இல்லாமல் பதிப்பாளராகவும் இருந்தால் எப்படிப் புத்தகத்தைப் படித்து விற்க முடியும் என்று யோசிக்க வேண்டும். விற்பனை சந்தையில் எதுமாதிரிôன புத்தகங்கள் போகின்றன. எப்படித் தயாரித்து விற்க வேண்டுமென்று யோசிக்க வேண்டும்.
ஒருவன் புத்தக விற்பனையாளனாகவும் பதிப்பாளனாகவும் இருக்கலாம். மோசமில்லை. இன்னொரு அவதாரம் எடுப்பது மோசமானது. அதாவது எழுதுபவனாக இருப்பது. எல்லாம் ஒரே அவதாரமாக இருப்பது.
நண்பருடன் பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருப்பேன். எதாவது பேசிக்கொண்டிருக்கும் போது நானும்தான் எழுதியிருக்கிறேன் என்று கூறிவிடுவேன். என்னது நான் என்று சொல்கிறீர்கள் அந்த நானை விட முடியாதா என்பார். சரி அழகியசிங்கர் எழுதியிருக்கிறான் என்று மாற்றிக் கூறுவேன். சிரிப்பார் அவர்.
நான் புத்தக விற்பனையாளனாக மட்டும் இருந்தால் புத்தகக் காட்சி சாலையில் விற்பனை ஆகும் புத்தகங்களை மட்டும் வைத்துக்கொண்டு விற்று விடுவேன். விற்கவில்லை என்று சில புத்தகங்கள் இருந்தால் விற்க முயற்சி செய்வான்.
பதிப்பாளனாகவும் விற்பனையாளனாகவும் இருந்தால் ஒரு ஆபத்து இருக்கிறது. தெரியாமல் கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வந்து விற்க முடியாமல் அவதிப் படுவான். அதனால்தான் சில பதிப்பகங்கள் கவிதைப் புத்தகங்களை அச்சிடுவதில்லை.
விற்பவன், பதிப்பாளன், எழுதுபவன் எல்லோரும் ஒரே நபராக இருந்தால் ஆபத்து. அதுவும் எழுதுபவன் கவிதை எழுதுபவனாக் இருந்தால், கூடுதல் ஆபத்து.
என் புத்தகக் கடையில் நான் அமரந்திருந்தேன். என் நண்பரும் கவிஞரும் கடைக்கு வந்திருந்தார். எதிரில் என் கவிதைப் புத்தகம் தெரிந்தது. அட்டைப் படம் நன்றாக வந்திருக்கிறது என்றார் என் கவிதைப் புத்தகத்தைப் பார்த்து. அந்தப் புத்தகத்தில் என் புகைப்படத்தை ஓவியமாக மாற்றி அச்சடித்திருந்தேன். அழகியசிங்கர் கவிதைகள் என்று தலைப்பில் ஆரம்பத்தில் எழுதிய கவிதைகள் (1977ரலிருந்து) 2017வரை அச்சிட்டிருந்தேன். அவரிடம், என்ன செய்வது? அந்தப் புத்தகம் பார்வைக்கு அங்கயே இருக்கிறது என்றேன்.
இதுதான் பிரச்சினை ஒருவன் எழுதுபவனாகவும், (அதுவும் கவிதை எழுதுபவனாக) பதிப்பாளராகவும், விற்பனையாளனாகவும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் ஆபத்து. ஆனால் விதி விலக்காக, என் எழுத்தாள நண்பர் புத்தகக் காட்சியில் இரண்டு அரங்கு எடுத்திருக்கிறார். அவருடைய எழுத்துக்கள்தான் அவர் கடை முழுவதும். எதை எடுத்தாலும் அவர் புத்தகம்தான் வாங்க வேண்டும். அவருக்கு ரசிகர்களும் அதிகம். உண்மையில் சிறப்பாக எழுதக் கூடியவர். புத்தகக் காட்சியில் அவர் கடை முன் கூட்டம் அதிகமாக இருந்து கொண்டிருக்கும். அவர் கடைக்கு வருகிறாரென்றால் கூட்டம் அதிகமாகிவிடும. அவ்வளவு ரசிகர்கள். தாமதமாகத்தான் அவர் திறமையை உணர்ந்திருந்தார். உணர்ந்த பிறகு தனிப் பதிப்பகம் ஆரம்பித்து கடையும் போட்டிருந்தார்.
Comments