Skip to main content

உண்மை

 
 
 
 உண்மைகள் என்றால் 
அவனுக்குக் கொள்ளைப் பிரியம்

தனக்குத் தெரியாத உண்மைகளே 
இருக்கக் கூடாதென்பதில்
தணியாத மோகம்

அரைகுறை உண்மைகளை
அறவே வெறுத்தான்

முழு உண்மைகளை
என்ன விலை கொடுத்தேனும்
வாங்கத் தயாராக இருந்தான்

அவனது பாதுகாப்பே
விலையென்றாலும் 
பயப்பட மாட்டான்

எந்தக் கடையில் எந்த உண்மை
விலைக்கு வந்தாலும்
முதலில் அவனுக்கே 
சொல்லி அனுப்பினார்கள்

சந்தைக்கு வராத உண்மைகளைச்
சந்திப்பவரிடமெல்லாம் தேடினான்
சத்தியத்தை மீறியேனும் அவை தன்
சட்டைப்பைக்குள் வர
சகல உத்திகளையும் கையாண்டான்

சேகரித்த உண்மைகள்
இரும்பாய்க் கனத்து இழுத்தாலும்
காட்டிக் கொள்ளாமல்
நிமிர்ந்தே நடந்தான்

அறியாதவற்றால் ஏற்படும்
ஆச்சரியங்களாலும்
தெரிய வராதவற்றால் தொடரும் 
சுவாரஸ்யங்களாலும்
உயிர்த்திருக்கும் வாழ்வில்

மறுக்கப்படும் 
உண்மைகளால் மட்டுமே
பிழைத்துக் கிடைக்கும்
நாளையைப் பற்றியதான நம்பிக்கை 
என்கிற உண்மை மட்டும்

பார்வைக்குச் சிக்காமல் 
அவனது நடுமுதுகில் அமர்ந்து 
கண்சிமிட்டிச் சிரித்தபடி 
சவாரி செய்து கொண்டிருந்தது

தன்னை விலை பேசவே முடியாதென்று.

Comments

உண்மையின் தரமானது நம்பிக்கையால் மட்டுமே உரசிப் பார்க்க இயலும். மூளையால் உண்மையின் தரத்தைக் கண்டு கொள்வதென்பது குழப்பமானது இன்றைய உலகில்...உண்மையின் சுமையில் உலவும் மனிதரை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
/மூளையால் உண்மையின் தரத்தைக் கண்டு கொள்வதென்பது குழப்பமானது இன்றைய உலகில்.../

அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.மிக்க நன்றி நீலகண்டன்.
ஷைலஜா said…
//அவனது நடுமுதுகில் அமர்ந்து கண்சிமிட்டிச் சிரித்தபடி சவாரி செய்து கொண்டிருந்தது
தன்னை விலை பேசவே முடியாதென்று///

அருமை....அதிலும் இப்படி முடித்தவிதம்!
Unknown said…
//
மறுக்கப்படும்
உண்மைகளால் மட்டுமே
பிழைத்துக் கிடைக்கும்
நாளையைப் பற்றியதான நம்பிக்கை
என்கிற உண்மை மட்டும் //

நுட்பமாக கையாண்டிருக்கும் வரிகளுக்கு வாழ்த்துக்கள்..
Anonymous said…
மிகவும் அழகான கவிதை... நன்றி... சூர்யா