Skip to main content

பார்வைகள்

 
 
 
 
 
டெட்ராய்ட் நகரத்தின் ஒரு டிசம்பர்மாதக்  காலைப்பொழுது.
 
வழக்கம் போல ஜாக்கிங்கிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி சிறு அறிமுகம்.
 
பெயர் அரவிந்தன்.வயது இருபத்தி எட்டு,இந்தியாவிலிருந்து அலுவலக வேலையாய் அமெரிக்கா வந்திருக்கிறேன்.கார் நகரத்துக்காரிகைகளை ரசித்தபடியே ஆறுமாதங்களைக்கழித்துவிட்டேன்..ஆயிற்று அடுத்தவாரம் தாய்மண்ணே வணக்கம் என்று கூவிக்கொண்டுசிங்காரச்சென்னைக்குப்போய்விடுவேன்.
 
தினமும் ஜாக்கிங் செய்யும் பாதையில்  என் கால்கள் செல்கின்றன. எங்கும் மூடுபனியின் ஆக்கிரமிப்பு.
 
மிச்சிகன் மாகாணத்தின் பிரசித்தி பெற்ற குளிருக்குப் பாதுகாப்பாய்த் தான் புறப்பட்டு வந்திருக்கிறேன்.
 
எல்லாவற்றிலும் எனக்கு முன்எச்சரிக்கை உணர்வு அதிகம். என் பார்வை கூர்மையானது. பள்ளி நாட்களிலிருந்தே கண்பார்த்ததை மனசு உள் வாங்கிக் கொள்ளும். எனது இந்தத் திறமைதான் என்னை இந்த உயர்நிலைக்கு வரவழைத்திருக்கிறது என்பதில் பெருமை எனக்கு!
 
எதேதோ நினனத்தபடி ஜாக்க்கிங் முடித்து என் அபார்ட்மெண்ட்டிற்குத் திரும்ப நடக்கிறேன்.
 
அப்போதுதான் உணர்கிறேன் பாதை தெரியாத  அளவுக்கு பனிப்படலம் புகையாய் சூழ்ந்துவிட்டிருக்கிறது என்பதை.
 
ஒருக்கணம் என்ன செய்வதென்றே புரியவில்லை.
 
அலுவலகத்தில் இன்று முக்கியமான மீட்டிங் வேறு சரியான நேரத்திற்குப் போக வேண்டுமே?
 
தவிப்புடன் நிற்கும் போது தொலைவில் யாரோ நடந்து வருவதை டக்டக் என்ற ஷூவின் ஒலி நிரூபித்தது.
 
பெருமூச்சுவிட்டவன்," எக்ஸ்யூஸ்மீ?" என்று குரல் கொடுக்கிறேன்.குரல்தான் இப்போதுஎனக்குப்பார்வையாக இருக்கிறது.
 
ஷூ சத்தம் நிற்கிறது."யெஸ்?" என்று கேட்கிறது. குரலுக்குரியவருக்கும் என்னைதெரிய வாய்ப்பில்லைதான்  பனிப்புகை தான் எங்களை மறைக்கிரதே!
 
தொடர்ந்து," உங்களூக்கு ஏதும் நான் உதவவேண்டுமா?" என்கிறது
ஆர்வத்துடன்.அந்த ஆங்கில உச்சரிப்பு குரலுக்குரிய நபர் அமெரிக்கர் என உறுதிப்படுத்துகிறது.இந்த ஊர்க்காரர்களுக்கு  ஓரளவு எல்லா இடமும் அத்துப்படியாய் இருக்குமே?
 
நான், எனது நிலைமையைக்கூறி உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 
"வித் ப்ளஷர்... எதற்கும் நான் என் கைத்தடியை நீட்டுகிறேன் அதை பிடித்துக் கொண்டு என்னைத் தொடர்ந்து வாருங்கள்" என்றார் அந்த மனிதர்.குரலைவைத்து நாற்பதுகளில் வயதைச் சொல்லலாம் போலிருக்கிறது.
 
நான் அவர் நீட்டிய கைத்தடியை பனிப்புகைமண்டலத்தில் அனுமானமாய் கைவிட்டுத் துழாவி கெட்டியாய் பிடித்துக் கொள்கிறேன்.
 
போகும்வழியில் என்னைப்பற்றி கூறிவிட்டு,"இந்த ஆறுமாதத்தில் எனக்கு இப்படி வழி தெரியாமல் போனதே இல்லை..என் பார்வையில் ஒருதடவை எதைப்பார்த்தாலும் அது மனதில் பதிந்துவிடும். என்னவோ இன்று இப்படியாகிவிட்டது" என்கிறேன்.
 
"ஓ அப்படியா?" என்கிறார் அவர் வியப்புடன்.
 
அபார்ட்மெண்ட் வாசலுக்கு என்னைக் கொண்டுவிடுகிறார்.
 
"நன்றீ"என்று நான் கூறும்போதே சூரியன் எட்டிப்பார்க்க மெல்லப்பனிப் படலம்  விலக ஆரம்பிக்கிறது.
 
அவரை நோக்கி,"அதெப்படி,பனிப்படலத்தில் வழி  பிசகாமல் நடந்து வந்தீர்கள்? ஆச்சரியமாய் இருக்கிறது!" என்றுகேட்டேன்.
 
அந்த மனிதர் சட்டென தனது கறுப்புக் கண்ணாடியைக் கழற்றியபடி," என்னைப் போன்றவர்களுக்கு பாதங்களில் தான் பார்வை. உங்களுக்கு இன்று உதவமுடிந்ததில் மகிழ்ச்சி வருகிறேன்' என்று அடக்கமுடன் கூறி கைகுலுக்கி விடை பெறுகிறார்.
 
டக் டக் டக்..
 
அவரது கைத்தடியின் ஓசை கம்பீரமாக ஒலித்தபடி நகர்கிறது அந்த நேரம்அதுவரை என்னைப்பற்றிய பெருமையில் நிமிர்ந்திருந்த என் பார்வை சட்டென தாழ்கிறது.

Comments

கைத்தடியைக் கொடுத்தவுடனேயே வழிகாட்டும் அவர் பார்வையற்றவராகத்தான் இருக்க வேண்டுமென நான் ஊகித்து விட்டேன். நல்ல கதை