Skip to main content

எதையாவது சொல்லட்டுமா - 56 
ஒரு சம்பவம் நடந்தது.  அதாவது 28ஆம் தேதி ஜூலை மாதம். ஞாயிற்றுக்கிழமை.  வழக்கம்போல் சென்னையிலிருந்து மாயூரம் கிளம்ப வழக்கம் போல் இரவு 8 மணிக்குமேல் e-ticket ஐ பிரிண்ட் எடுத்தேன். எனக்கு டிக்கட் எப்போதும் என் உறவினர் ஒருவரால் புக் செய்யப்படும்.  அவரும் என்னைப்போல் ஞாயிறு இரவு கிளம்பி திங்கள் மாயூரம் வந்து பின் திருக்கடையூர் பயணம் செய்வார். 

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையிலும் அவருக்கும் எனக்கும் டிக்கட் எடுப்பார். எப்போதும் நாகூர் விரைவு வண்டியில்தான் நாங்கள் செல்வோம்.  அது காலையில் மாயூரம் 4.50 மணிக்குச் செல்லும்.  நாங்கள் இருவரும் கொஞ்ச தூரம் நடந்து ஒரு டீக் கடையில் காப்பி குடிப்போம். பின் நடந்து சென்று ஒரு பஸ்பிடித்து நான் என் இடத்திற்கும், அவர் திருக்கடையூரிலுள்ள அவர் இடத்திற்கும் செல்வார்.

28ஆம் தேதி அவர் என் கூட வரவில்லை.  எனக்கு மட்டும் டிக்கட் அவர் பதிவு செய்திருந்தார்.  நான் வழக்கம்போல இரவு 9.45க்குக் கிளம்பி மாம்பலம் ரயில்வே நிலையம் சென்று எக்மோர் டிக்கட் வாங்கி மெதுவாக வந்து சேரும் மின்சார வண்டியில் தொற்றிக்கொண்டு எக்மோர் சென்றேன். 

நாகூர் வண்டியைத் தவிர எல்லா வண்டிகளும் போய் விட்டன.  மெதுவாது s4 கோச்சில் 6 எண்ணைப் பார்த்தேன்.  என் பெயர் இல்லை.  திகைத்தேன்.  எப்படி இந்தத் தவறு நடந்தது? யோசித்தேன்.  பின் டிக்கட்டை ஆராய்ந்தேன்.  தேதி சரியாகப் போட்டிருந்தது.  ஆனால் நாகூர் வண்டிக்குப் பதில் மதுரை எக்ஸ்பிரஸ் என்று போட்டிருந்தது.  அந்த வண்டி 10.45க்குக் கிளம்பிப் போய்விட்டது.  என்னடா இது இப்படி ஒரு தவறு நடந்துவிட்டது என்ற பதறினேன். கடைசிவரை என் உறவினர், ரயில் மாறி டிக்கட் பதிவு செய்ததைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  பின் ரயில்வே டிடிஆரைப் பார்த்து அந்த டிக்கட்டை வைத்துக்கொண்டு போக முடியுமா என்று கேட்டேன்.  அந்த டிக்கட் இனிமேல் செல்லாது என்றார்.  திரும்பவும் ஒரு டிக்கட் வாங்கிக்கொண்டு வர ஓடினேன்.  அலுவலக சாவிகளை வைத்திருப்பதால் நான் போகத்தான் வேண்டும்.  ரிசர்வ் செய்யாத டிக்கட்டை 75 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு, ஓட்டமாய் ஓடி s1ல் ஏறினேன்.  டிடிஆர் இரக்கமே இல்லாமல், 'நீங்கள் unreserve coachல் ஏறிப்போங்கள்,' என்றான். 

வேறு வழியில்லை அங்கு ஏறினேன்.  ஏகப்பட்ட கூட்டம்.  லட்ரின் பக்கத்தில் உள்ள இருக்கையின் கீழ்தான் அமர வேண்டியிருந்தது.  நாற்றம் குடலைப் புடுங்கியது.  காலை மடக்கி உட்கார்ந்தேன்.  ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை.  பின் நீட்டி உட்கார்ந்தேன். அப்படியும் முடியவில்லை.  உண்மையில் அந்த நேரத்தில் பஸ்பிடித்துப் போக முடியாது.  மேலும் வேளாங்கண்ணி கூட்டம் வேறு.  ஒரு வழியாக இப்படியே போனால் சரி என்று நினைத்துக்கொண்டேன். பொதுவாக எனக்கு ரயிலில் தூக்கம் வராது.  இன்னும் தூக்கம் வரப்போவதில்லை என்று நினைத்துக் கொண்டேன்.  மேல் மருவத்தூரில் வண்டி நின்றது. சிகப்பு ஆடை அணிந்த பெண்கள் கூட்டம் புடை சூழ, நான் உட்கார்ந்த இடத்தில் என் மீதே ஏறி மித்ததார்கள்.  ஒரே சத்தம். அதன்பின் நான் எழுந்து நிற்க ஆரம்பித்தேன்.  காலை இங்கேயும் அங்கேயும் நகர்த்தக் கூட முடியவில்லை.  இரவி 1.30 மணியிலிருந்து காலை 5 மணிவரை நின்று கொண்டே காலை நகர்த்தமுடியாமல் நகர வேதனையில் வந்தேன். 

வீடு வந்து சேர்ந்தபோது, பொத்தென்று படுக்கையில் படுத்துக்கொண்டேன்.  2 மணிநேரம் தூங்கியிருப்பேன்.  ஆனாலும் கால் வலி தாங்க முடியவில்லை.  அலுவலகச் சாவி மட்டுமில்லாமலிருந்தால், வந்திருக்கவே மாட்டேன்.  கால் வலி அலுவலகச் சாவியால் மாட்டிக்கொண்டதாக தோன்றியது.  அலுவலகம் சென்று சாவியைக் கொடுத்துவிட்டு, திரும்பவும் வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்துக்கொள்ள நினைத்தேன்.  என்னைப் பார்த்தவுடன் என்னை விடவில்லை மேலாளர்.  வலி இருந்தாலும் பரவாயில்லை.  சும்மா உட்கார்ந்துவிட்டுச் செல்லுங்கள் என்றார்.  வேறு வழியில்லாமல் தலைவிதியை நொந்துகொண்டு அமர்ந்தேன்.  மாலை சீக்கிரமாகக் கிளம்பி 7.30 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்து, படுத்தவன்தான் அடுத்த நாள் காலையில்தான் எழுந்து கொண்டேன்.  

அன்றுதான் முதன்முதலாக நிற்பவர்கள் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.  மயூரா விலாஸில் நின்றுகொண்டே எல்லோருக்கும் காப்பிப் போட்டுக்கொடுக்கும் முதியவரைப் பற்றி நினைத்துக்கொண்டேன்.  பின் பார்சல் பண்ணி தரும் ஒருவரைப் பற்றியும் நினைத்தேன்.  என் அலுவலகத்தில் நின்றுகொண்டே இங்கேயும் அங்கேயும் சென்று வவுச்சர்களை எடுத்துத் தருபவர்களைப் பார்த்து, ''தினமும் நிற்கிறியே, உனக்குக் கால் வலிக்காதா?' என்று கேட்டேன்.  'வலிக்கும்.. ஆனால் காலையில் சரியாகிவிடும்,' என்றான் அவன். 

நின்றுகொண்டே இருப்பவர்களைப் பார்த்து நான் தலை வணங்குகிறேன்.  நான் அமெரிக்கா போய்வந்தது கூட பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.  ஆனால் ரிசர்வ் செய்யாதப் பெட்டியில் பயணம் செய்வது கொடுமையான விஷயமாக எனக்குத் தோன்றியது.

Comments

நிற்பது கடினம்தான்.. உடலின் எடையை சதா சுமந்து கொண்டிருக்கும் கால்களுக்கும் முதுகுக்கும் வேதனைதானே.