ஒவ்வொரு முறையும் அந்தக் கோயிலைத் தாண்டித்தான் வண்டி போகும். இதோ நான் இங்கு வந்து 2 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஒவ்வொரு முறையும் நான் பஸ்ஸைவிட்டு இறங்கி வைதீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்று நினைப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை. எங்கள் குடும்ப குலதெய்வம் அந்தக் கோயில்.
செப்டம்பர் 3 ஆம்தேதி சனிக்கிழமை இறங்கி அந்தக் கோயில்போய் சாமி தரிசிக்க வேண்டுமென்று நினைத்தேன். எதிர்பாராதவிதமாய் சங்கரைப் பார்த்தேன். அந்தக் கோயிலில் அவன் குடும்பமே பணிபுரிகிறது. புதிதாக திறந்த ஒரு ஓட்டலுக்கு என்னை அழைத்துப் போனான். பின் அந்தக் கோயிலைப் பற்றி சொன்னான். மொத்தம் 300 பேர்கள் பணிபுரிவதாக சொன்னான். கூட்டம் தாங்க முடியாது. திருப்பதிக்குப் பிறகு இதுதான் என்றான். உண்மைதான் கூட்டம் தினமும் மொய்த்துக் கொண்டுதான் இருக்கும்.''என் சகோதரர்கள் இருப்பார்கள். நீங்கள் போய் சாமி தரிசனம் பண்ணி அர்ச்சனை பண்ணுங்கள்,''என்றான்.
அர்ச்சனை டிக்கட்டுக்களையும், அர்ச்சனைப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.
பழையபடி அழுக்காகவே அந்தக் கோயில் காட்சி அளித்தது. தினமும் ஆயிரக்கணக்கானவர் வருகின்ற கோயில் அப்படியே இருக்கிறதே என்று வருத்தமாக இருந்தது. அர்ச்சனை பண்ணும்போது அர்ச்சனைப் பண்ணுபவர்களிடையே ஒரு போட்டி நிலவுகிறது. தட்டில் விழுகிற எல்லாப் பணமும் எந்தந்த அர்ச்சர்களின் தட்டுக்களில் விழுகிறதோ அவர்களுக்குச் சொந்தம். பக்தியைவிட அதிகமாக பணம் பண்ண வேண்டுமென்கிற எண்ணமே அவர்களிடம் இருப்பதாகப் பட்டது.
அந்தக் கோயிலின் அழகே குளம்தான். அது பாசிப்பட்டு வீணாகிப் போய்க் கிடந்தது. தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரைக் கொண்டு வர எந்த பிரயத்தனமும் அங்கில்லை. நான் சாமிக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்தேன். என்னிடம் அர்ச்சனைத் தட்டு வாங்கியவர், என்ன நட்சத்திரம் என்றுகூட கேட்கவில்லை. பின் கோபமாகக் கூட சாமி கும்பிட வந்தவர்களைத் திட்டினார். அம்மனிடம் அர்ச்சனையை முடித்துக்கொண்டு சாமி சந்நிதானம் வந்தேன். அங்கேயும் உள்ள அர்ச்சர்கள் யந்திரத்தன்மையுடன் உற்சாகமில்லாமல் காணப்பட்டார்கள். அதில் ஒருவர் விபூதி குங்குமத்தைப் பொட்டலம் கட்டி 10 ரூபாய் என்று விற்றுக்கொண்டிருந்தார். சாமியைப் பார்க்க வரும் பக்தர்களிடம் காணப்படும் பக்தி இவர்களைப் பார்க்கும்போது ஓடியே போய்விடும் போல் தோன்றியது. பெரும்பாலான இந்துக்களுக்கு வைதீஸ்வரன் கோயில் என்ற பெயரில் உள்ள அந்தக் கோயில் குலதெய்வக் கோயில்.
அடுத்தநாள் திருஇந்தளூரில் உள்ள பரிமேள ரங்கநாதன் கோயிலுக்குச் சென்றேன். முக்கியமான திவ்ய தரிசன கோயில். சாமி உள்ள அறையில் நல்ல வெளிச்சமாக இருந்தது. ஏசி செய்திருந்ததால் குளு குளுவென்றிருந்தது. கோயில் வெளியில் பல சிற்ப வெளிப்பாடுகள் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. கோயிலை சுத்தமாக வைத்திருந்தார்கள். அரங்கநாதரின் சயனத்திருக்கும் தோற்றத்தை நெருக்கத்தில் கண்டு களிக்க முடிந்தது. 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தும் சரியாக பராமரிக்காத வைதீஸ்வரன் கோயில் எங்கே?
இந்தக் கோயில் எங்கே என்று தோன்றியது. பக்தி மணம் என்பது பணம் பறிக்கும் குறிக்கோளால் சிதறிப் போய் விடுவதாக தோன்றுகிறது.
Comments
அதற்கு முன்னர் மகனுக்கு காதுகுத்தல் முடிந்திருந்தது. மகனுக்கு காது குத்திய பெரியவர் 34 ஆண்டுகளுக்கு முன் என் காதையும் குத்தியவர் என்ற ஆச்சர்யம் - நெகிழ்வு கரப்புகளின் இருப்பால் ஓடியே போனது.