Skip to main content

Posts

Showing posts with the label ராமலக்ஷ்மி

விருது

விருது முதுமையைத் தொட்டபோது ஒட்டிக் கொண்டன தனிமையும் தளர்வும். இளமையில் துணையிருந்த திறமைகளும் திடமும் விடை பெற்றிருந்த வேளையில், காலம் கடந்து அறிவிப்பான விருதை ஏற்க மறுத்தப் பெருமிதத்துடன் அவனது இரு கைகளும் இறுகப் பற்றிக் கொள்கின்றன மேசை இழுப்பறையில் பத்திரமாய்ப் பாதுகாத்து வந்த பேனாவையும் தூரிகையையும். எல்லோரும் கொண்டாடிய எத்தனையோ கவிதைகளுக்கான மையைச் சுரந்திருக்கிறது அந்தப் பேனா. புருவங்களை உயர வைத்த அழகோவியங்கள் பலவற்றைத் தீட்டியிருக்கிறது அந்தத் தூரிகை. மூதாதையர் கடிகாரத்தின் பெண்டுலச் சத்தம் பின்னணி இசைக்கச் சொட்டுச் சொட்டாகக் கசிகிறது பேனாவிலிருந்து மை. பெருகிப் பிரவாகிக்கிறது சமுத்திரமாக. மிதந்த பேனாவின் மேல் அமர்ந்து வேகமாகப் பயணிக்கிறது மனம் படைப்பாற்றலில் உச்சத்திலிருந்தக் கணம் நோக்கி. சிறிய பெரிய மீன்கள் யானையை விடப் பெரிய சுறாக்கள் திமிங்கலங்கள் ஆயிரம் வயதான ஆமைகள் ஆரவாரத்துடன் பின் தொடருகின்றன. தோலின் சுருக்கங்களைத் தாண்டிப் பிரகாசித்த முகத்திலிருந்து வெளிப்பட்ட வெளிச்சம் இன்னொரு கை...

பறத்தலின் மீதான புரிதல்

உனக்கான இடம் இதுவல்ல உள்ளுணர்வு சொல்லிய போது உணர்கிறான் தோளோடு இருந்த வலுவான இறக்கைகளை அடைய வேண்டிய உயரமும் போக வேண்டிய பாதையும் வரைபடமாக விரிந்த போதும் இறகுகளை நீவி அழகு  பார்த்தபடி நிற்கிறான்  எவருக்கும் தனை நிரூபிக்கும் விருப்பங்கள் அற்றவனாய் பறக்க அஞ்சுவதாக எழுந்த பரிகாசங்களைப் புறந்தள்ளுகிறான் வானத்துக்கு மட்டுமே புரிந்த புதிராக மேகங்களின் வேகமும் மாறும் அதன் வடிவங்களும் பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும் பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன் வானம் தாண்டிக் கோடானு கோடிக் கோள்களைப் பார்க்க இயலும் பிரபஞ்சத்தின் உச்சியை  அடைகின்ற பொழுதில்.. விரிக்கக் கூடும் தன் சிறகுகளை அளவற்ற ஆனந்தத்தில். ***

அழகன்

அந்தக் கனவில் அவன் அழகாகத் தெரிந்தான் கழுத்து நிறையப் பதக்கங்களுடன் வெற்றிகளைக் குவித்திருந்தான் ஒரு கனவில் அவனை இந்திரன் சந்திரன் என்றனர் மெத்தப் படித்த மேதாவி என்றனர் அவன் முகத்தின் பொலிவு கண்டு அவன் கண்களே கூசின தனி விமானத்தில் உலகம் சுற்றிய நீண்ட கனவொன்றில் அவன் கம்பீரம் கூடியிருந்தது தன் இருபத்தெட்டு மாடிவீட்டின் மேல்தளத்துத் தோட்டத்தில் காலைத் தேநீர் பருகிய கனவில் மேகங்கள் முற்றுகையிட்டுக் கொண்டாடின அவன் அந்தஸ்தை கனவுகள் தந்த சந்தோஷங்களுடனே புலர்ந்தன தினம் பொழுதுகள் இப்போதெல்லாம் அவற்றுக்காகவே சீக்கிரமாய் உறங்கச் செல்கிறான் நிஜம் தொடாத நிகழ்வுகள் ஓடிய திரை தந்தப் போதையில் பகல் கனவும் பழக்கமாயிற்று பலிக்குமெனச் சொல்லப்பட்ட பகல் கனவுகளில் மறந்தும் ஒருதுளி வியர்வை வெளியேறிடாமல் மேனி மினுமினுப்பைப் பாதுகாத்துக் கொண்டான் நிஜத்தை மட்டுமே பிரதிபலிக்கிற அறைநிலைக்கண்ணாடி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள இயலா சகிப்புடன் காட்டிக் கொண்டிருந்தது விழிசெருக வாய் திறந்து கனவில் கிடந்தவனை அவலட்சணத்தின் மொத்த இலக்கணமாக.

உண்மை

        உண்மைகள் என்றால்  அவனுக்குக் கொள்ளைப் பிரியம் தனக்குத் தெரியாத உண்மைகளே  இருக்கக் கூடாதென்பதில் தணியாத மோகம் அரைகுறை உண்மைகளை அறவே வெறுத்தான் முழு உண்மைகளை என்ன விலை கொடுத்தேனும் வாங்கத் தயாராக இருந்தான் அவனது பாதுகாப்பே விலையென்றாலும்  பயப்பட மாட்டான் எந்தக் கடையில் எந்த உண்மை விலைக்கு வந்தாலும் முதலில் அவனுக்கே  சொல்லி அனுப்பினார்கள் சந்தைக்கு வராத உண்மைகளைச் சந்திப்பவரிடமெல்லாம் தேடினான் சத்தியத்தை மீறியேனும் அவை தன் சட்டைப்பைக்குள் வர சகல உத்திகளையும் கையாண்டான் சேகரித்த உண்மைகள் இரும்பாய்க் கனத்து இழுத்தாலும் காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்தே நடந்தான் அறியாதவற்றால் ஏற்படும் ஆச்சரியங்களாலும் தெரிய வராதவற்றால் தொடரும்  சுவாரஸ்யங்களாலும் உயிர்த்திருக்கும் வாழ்வில் மறுக்கப்படும்  உண்மைகளால் மட்டுமே பிழைத்துக் கிடைக்கும் நாளையைப் பற்றியதான நம்பிக்கை  என்கிற உண்மை மட்டும் பார்வைக்குச் சிக்காமல்  அவனது நடுமுதுகில் அமர்ந்து  கண்சிமிட்டிச் சிரித்தபடி  சவாரி செய்து கொண்டிருந்தது தன்னை விலை பேசவே முடியாதென்று...

தொடரும் பயணம்

  ஒரு தேவதையைப் போலதான்  வாழ்ந்திருந்தாள். கிரீடத்தில் நட்சத்திரங்களாக  ஒளிர்ந்த வைரங்களுடன் கூந்தலின் நிறம் போட்டி போடவும் பறத்தலில் வேகம் குறைந்தது. உதிரும் சிறகுகளால் வீடெங்கும் குப்பையாவதாக இறக்கைகள்  வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டன. ஆயினும் கூட்டிலே ஓய்வெடுக்க அனுமதியில்லை. நடந்தேனும் ஊர்ந்தேனும்  தனக்கான தானியத்தை ஈட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம். பாய்ந்து வந்த வார்த்தை அம்புகளைத் தடுக்க எட்டுகிற தொலைவில் கிடந்தும் கேடயத்தை எடுக்கின்ற தெம்பில்லை. சுழற்றி வீச வாளொன்று  சுவரிலே தொங்கியும் நிமிர்த்திப் பிடிக்க  விரல்களில் வலுவில்லை. இவள் தொட்டு ஆசிர்வதித்த செங்கற்களைக் கொண்டு  எழுந்த மனையென்பது எவர் நினைவிலும் இல்லை. மேகங்களுக்குள் புகுந்து வெளிவந்த காலத்தில்  அதன் வெண்மையை வாங்கி  மிளிர்ந்த உடை பழுப்பாகிப் போய்ப் பாதந்தடுக்க இரை தேடக் கிளம்புகிறாள். வழக்கமாகச் செல்லும் பேருந்தைத் தவற விட்டதாக எண்ணி நடக்கத் தொடங்குகிறாள். ஓரிரு மணித்துளிகளில் ஒட்டி வந்து நின்றது அன்றைக்குத் தாமதமாகப்  புறப்பட்டிருந்த பேருந்து. சாலைவித...

புதிய அத்தியாயம்

சொன்ன கதையையே திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்கிறது குழந்தை. கவனப் பிசகாக சிங்கத்தைப் புலியென்றோ முயலை மானென்றோ இரண்டு குருவிகளை மூன்றென்றோ சொன்னோமேயானால் பிஞ்சுவிரல்களால் நம் இதழ்களை மூடித் தவறென்று திருத்துகிறது. உறக்கம் அழுத்தும் அதன் விழிகளைக் கண்டு சுருக்கி முடித்திட நினைத்தால் திருப்தியற்றுச் சிணுங்குகிறது. ‘அதன்பிறகு அனைவரும் நலமே வாழ்ந்தார்கள்’ எனும் கடைசி வாக்கியத்துக்காக இமைகள் விரியக் காத்திருந்து நிறைவான புன்னகையுடன் தூங்கச் செல்கிறது. வாழ்க்கையைப் பல நேரங்களில் அதன் போக்கில் விட்டுப் பார்க்க அஞ்சுகிற நமக்கும் குழந்தைக்குமான வித்தியாசத்தைத் தேடித் திகைத்து நின்ற புள்ளியில் ஆரம்பம் ஆனது... அணைத்த விளக்கு பரப்பிய இருளில் ஒளிர்ந்த சன்னல்வழி நட்சத்திரமா ய் புதிய அத்தியாயத்தின் முதல் எழுத்து.

சுயநலம்

அதிகமாய் பேசுகிறேனோ அடிக்கடி சந்தேகம் வருகிறது பேசாமல் இருப்பதே உசிதம் சமயத்தில் தோன்றதான் செய்கிறது கேட்பவர் முகங்களில் தெரிகிற சோர்வைக் கண்டு கொள்ளாமல் தொடர விழைகிற மனதின் மேல் கோபம் கூட வருகிறது பேசுவதை நிறுத்தி விடலாமெனப் பொறுப்புணர்வுடன் தீர்மானிக்கப் போகையில்.. யாருக்காகப் பேசுகிறேன் எனும் கேள்வி எழ, புரிய வந்தது இதுகாலமும் பேசிய யாவும் எனக்காகவே என்று. ஒத்தி வைக்கப்பட்டது காலவரையரையின்றி தீர்மானம். *** ***

அரங்கு நிறையாக் காட்சிகள்

நண்டுகளோடு ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன வெள்ளலைகள் ஆளுயர அலைகளுக்கு அகப்படாமல் பறந்தெழும்பித் தணிந்தமர்ந்தன மீண்டும் மீண்டும் சாமர்த்தியமாய்.. நண்டைப் பிடிக்கவோ நீர் பருகவோ குழுமியிருந்த கடற்பறவைகள் எண்பதெழுபது கிலோ எடை மனிதர்களை அநாயசமாய் இழுத்தோடி உற்சாகமாய் வலம் வந்தன உடற்பயிற்சி ஆசான்களாகி.. அழகான நாய்க்குட்டிகள் கடலுக்குள் இறங்கும் சூரியனின் கதிர்வீச்சில் நிஜத்தை விட பன்மடங்கு நீண்டு விழுந்து பிரமிப்பைத் தந்தன கரையோர நிழல்கள் இணக்கமாய் கோர்த்துக் கொண்ட இரு கரங்களிலிருந்து விடுப்பட்டு உப்புக் காற்றோடு கரைந்தன சில பிணக்கங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன எவ்விடத்திலும் ஏதேனும் அற்புதக் காட்சிகள் அவசரகதியில் சுழலும் பூமியரங்கில் அமர்வாரின்றிக் காத்தேக் கிடக்கின்றன அநேக நாற்காலிகள். *** ***

ஆறாவது அறிவு

கிழக்கு மேற்காய் வடக்கு தெற்காய் நேர்க் கோட்டில் சில கணங்கள் வளைந்து திரும்பி, இராட்டினக்குதிரை போல் உயர்ந்தும் தாழ்ந்தும் சில கணங்கள் கைக்கெட்டும் தூரத்தில் கைக்கெட்டா கனவொன்றைப் போல் பறந்து கொண்டிருந்த பருந்தினை விடாமல் பின்தொடர்ந்தது அங்குல இடைவெளியில் இரண்டாம் பருந்து. மேகங்கள் கூடிக் கூடி வேடிக்கை பார்த்திருக்க மூன்றாவதாய் ஓர் பருந்து வேகமாய் இவற்றைக் கடக்க ஆவலாய் முதல் பருந்து அதனைத் தொடர ஆரம்பிக்க விக்கித்து விலகிய இரண்டாவது செய்வதறியாத நிலையில் உயர உயர எழும்பி சுற்றிச் சுற்றி வந்தது தன்னந்தனியாகக் காற்றுவெளியில்.. தாழப் பறந்து கொண்டிருந்த புறாவொன்று கண்ணில் படவும் அதிவிரைவாய் காற்றைக் கிழித்துக் கீழிறங்கி ஆக்ரோஷமாய் துரத்தத் தொடங்கியது வாழ்வோ பணியோ பதவியோ பந்தயமோ ஏமாற்றத்தின் வலியை தோல்வியின் துயரை எளியோனிடம் கடத்தும் மனிதனைப் போலவே. ***

மொழம்

'பண்டிகை நேரம் பதினஞ்சு ரூவாய்க்குப் பைசா குறையாது மொழம்' காசில் கறாராய் இருந்தாலும் களை கட்டியிருந்தது அவள் கடையிலே வியாபாரம். வந்து நின்ற பேருந்திலிருந்து இறங்குகிறாள் ஒரு இளந்தாய் கன்னப் பொட்டில் திருஷ்டி கழிந்த மூன்று குட்டித் தேவதைகளுடன். எண்ணெய் வைத்து வாரிமுடித்த பூச்சூடாப் பின்னல் நுனிகள் பச்சை மஞ்சள் ஊதா ரிப்பன்களில். கூடைமல்லி பார்த்ததுமே தவிப்பாகிக் குழந்தைகளை இழுத்துக் கொண்டு வேகமாகக் கடந்தவளைக் கூவி அழைத்துக் கொடுக்கிறாள் பூக்காரம்மா 'அம்மாவா நினைச்சு சும்மா புடி தாயீ’ என்று நாலு முழம் அளந்து மணக்கும் ரோஜா நாலு சேர்த்து. *** *** ***

ராணித் தேனீ

தேனீக்கள் பற்றிய புதியபாடம் நாளைக்கு ஆசிரியர் நடத்தும் முன் வாசித்துச் செல்லும் பழக்கம் செல்வராணிக்கு ‘குடும்பமாய் வாழும் தேனீக்கள்.. குடும்பத்தின் தலைவி ராணீத்தேனீ ‘ படத்தில் கம்பீரமாகத் தெரிந்தது ராணீத் தேனீ “எப்போடி வந்தே, சாப்பிட்டியா?” உழைத்த களைப்பைக் குரலில் காட்டாமல் கேட்டாள் வீட்டுக்குள் நுழைந்த அம்மா. ‘ராணியாக வளரவேண்டிய புழுவுக்கான அறை பிரத்தியேகமானது நிலக்கடலை வடிவில் அழகிய கிண்ணம் போன்றது’ “எந்திரிடி போயீ திண்ணயில உக்காந்து படி” உதைத்துத் துரத்தினார் போதையில் வந்த அப்பா. ‘ராஜாக்களின் வேலை உண்பது உறங்குவது இனம் பெருக உதவுவது.. இவற்றுக்குக் கொடுக்குகள் கிடையாது’ "அய்யோ விடு புள்ளை பரீச்சைக்கி கட்ட வச்சிருக்கம்யா” உள்ளே பாத்திரங்களின் உருளல் அம்மாவின் அலறல் “சம்பாதிக்க திமிராடி பொட்டக்குட்டி படிச்சு என்னாத்தக் கிழிக்கப் போவுது” அப்பாவின் உறுமல் மீண்டும் டாஸ்மாக் நோக்கி நகர்ந்தன அவர் கால்கள் ‘பஞ்சகாலத்தில் வெளியே தள்ளப் படுவார்கள் சோம்பேறி ராஜாக்கள்’ எத்தனை முறை வாசித்தாலும் இதுமட்டும் மனதில் ஏறாமல் கேட்கத் தொடங்கியிருந்தது அம்மாவின் கேவல் மேலே படிக்க இயலாத செல்வராணியின் ...

அழகிய வீரர்கள்

மிகக் கவனமாக கீழிருந்து ஆரம்பித்து மெல்லத் தோள் வரைக்கும் தோழமையாய் தொடர்ந்து தலை தடவி சாதுரியமாய் மூளை புகுந்து அரவணைத்தது சாட்டை புதுப் பம்பரத்தை இறுக்கமாக.. அணைப்பின் கதகதப்பில் கிடைத்த பாதுகாப்பு உணர்வில் சிலிர்த்துப் பரவசமாகிய பச்சிளம் பம்பரம் களத்தில் இறங்கத் தயாரானது துடிப்பாக.. இலாவகமாய் இழுத்துவிட்ட கயிறு விலகி நின்று வேடிக்கை பார்க்க வீரியமாய் சுழலாயிற்று தன் வசீகரத்தில் தானே மயங்கி பார்ப்பவர் வியக்கும் வண்ணமாக.. விசை குறைந்து சாயும்முன் உடனுக்குடன் தூக்கி உச்சிமுகர்ந்து பாராட்டி ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ’அழகியவீரன் நீ’யென ஆர்ப்பரித்து அனுப்புகின்ற சாட்டையைத் துதிக்கின்ற விசுவாசியாக.. காலமுள் சிரித்தபடி நகர கயிற்றின் கணக்குகள் புரியாமல் ஆடியோடியதில் கூர்முனை மழுங்கி வண்ணங்கள் சோபை இழக்க வனப்பைத் தொலைத்துத் தோற்கத் தொடங்கியது பம்பரம் சபையிலே தள்ளாடி.. மழுங்கிய முனைக்கு மருத்துவம் செய்யும் முனைப்போ அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு இரங்கும் மனமோ எப்போதும் கொண்டிராத சாட்டை வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி.. இக்கணத்திலும் வட்டமிடும் பருந்துகளாய் வான்வெளியை நிறைத்து பசியோடு கருநாகச் சாட்ட...