Skip to main content

ஆறாவது அறிவு

கிழக்கு மேற்காய் வடக்கு தெற்காய்
நேர்க் கோட்டில் சில கணங்கள்

வளைந்து திரும்பி,
இராட்டினக்குதிரை போல்
உயர்ந்தும் தாழ்ந்தும் சில கணங்கள்

கைக்கெட்டும் தூரத்தில்
கைக்கெட்டா கனவொன்றைப் போல்
பறந்து கொண்டிருந்த பருந்தினை

விடாமல் பின்தொடர்ந்தது
அங்குல இடைவெளியில்
இரண்டாம் பருந்து.

மேகங்கள் கூடிக் கூடி
வேடிக்கை பார்த்திருக்க

மூன்றாவதாய் ஓர் பருந்து
வேகமாய் இவற்றைக் கடக்க

ஆவலாய் முதல் பருந்து
அதனைத் தொடர ஆரம்பிக்க

விக்கித்து விலகிய இரண்டாவது
செய்வதறியாத நிலையில்
உயர உயர எழும்பி
சுற்றிச் சுற்றி வந்தது
தன்னந்தனியாகக் காற்றுவெளியில்..

தாழப் பறந்து கொண்டிருந்த
புறாவொன்று கண்ணில் படவும்

அதிவிரைவாய்
காற்றைக் கிழித்துக் கீழிறங்கி
ஆக்ரோஷமாய்
துரத்தத் தொடங்கியது

வாழ்வோ பணியோ
பதவியோ பந்தயமோ

ஏமாற்றத்தின் வலியை
தோல்வியின் துயரை

எளியோனிடம் கடத்தும்
மனிதனைப் போலவே.
***

Comments

நல்ல ஆழமானக் கவிதை.. அசுரத்தனமான மூர்க்கத் தனமாய் ஏழாம் அறிவு எட்டிப் பார்க்கிறது... வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி...
மிக்க நன்றி நீலகண்டன்.
வல்லூறின் பார்வை எப்போதும் புறாவின் மீதுதான்

அதற்குத் தெரியும் இன்னொரு வல்லுறிடம் அதன் திறமை பலிக்காதென்று

அன்புடன்

தமிழ்த்தேனீ
கருத்துக்கு மிக்க நன்றி தமிழ்த் தேனீ சார்!