Skip to main content

சின்னஞ்சிறு கதைகள்.....

அகாலம்




நான் பத்து வயதாக இருக்கும்போது, என் சித்தப்பாவோடு மாயூரத்தில் இருந்து வரும் கடைசிப் பஸ் போய்விட நெடுஞ்சாலையில் இரண்டு மணிநேரம் நின்று, லாரி ஒன்றில் இடம் பிடித்து, இரவு 1 மணிக்கு வீடு வந்து சேர்ந்தபோது, வெளிச்சத்தில் கண்களை இடுக்கிக்கொண்டு, வந்த கூன் பாட்டி கேட்டாள் : வாங்க, வாங்க ரொம்ப அகாலமாயிடுச்சு...கொஞ்சம் உப்புமா கிண்டித் தரச் சொல்றன..." பேசியபடி அடுப்பைப் பற்ற வைத்து, சூடான உப்புமாவையும், தொட்டுக்கொள்ள (வேறு ஒன்றும் இல்லாததால்) சீனியும் சுபையோ சுவை.

என் முப்பதாவது வயதில் இரவு 12.30க்கு ஸ்கூட்டர் பஞ்சர் ஆனதால், இருட்டில் தேடி, பஞ்சர் ஒட்டிக்கொண்டு பிறகு, வந்து சேர்ந்தேன். மனைவி சரிந்த வயிறோடு மெதுவாக நடந்து வந்து, "தயிர் சாதம் சாப்பிடறீங்களா?" என்றாள்.

ஐம்பத்தெட்டாவது வயதில் முதல் மருமகள் தூக்கம் கலைந்து விடும் என்ற பயத்தில் மகன் வாசலிலேயே விளக்கைப் போட்டுக்கொண்டு காத்திருந்தான். "தம்பி, தூங்கலியாப்பா?" என்று துவங்குமுன்பே, "பகல் டிரெயினில் வந்திருக்கலாமே, அப்பா?" என விளக்கை அணைத்துவிட்டு ஓசையின்றி நடந்து சென்றான்.

இன்று எழுபத்தொன்பதில் இரவு 12.30 மணிக்கு விமானம் வந்து சேர்ந்தாலும் கூட, வெளியே செல்லவில்லை. காலை பொழுது விடியட்டும் என்று காத்திருக்கிறேன். பேரனும், அவன் மனைவியும் குடியிருக்கும் மூடிய சமூகம் இரண்டு அடுக்கு பாதுகாப்பு கொண்டது. இரவு 10 முதல் காலை ஆறு வரை கதவு திறக்க அவர்களே எழுந்து வந்து அனுமதி தர வேண்டும். எனவே அகாலம் ஆகாது.

இது அகாலம்தான்...

Comments

அகாலம்தான்... நல்ல கதை....
அ"கால" மாற்றம்..!