Skip to main content

எதையாவது சொல்லட்டுமா........40

முதியோர்களை நாம் எப்படி நடத்துகிறோம்? இந்தக் கேள்வி சமீபத்தில் தோன்றி கொண்டிருந்தது. 89 வயது முடிந்து அப்பாவிற்கு 90வது வயது நடந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. கடந்த 2 மாதங்களாக அவர் என்னுடைய சகோதரன் வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறார். அங்கு எல்லா வசதிகளுடனும் அவர் தங்கிக் கொண்டிருக்கிறார். தேவைக்கு அதிகமாக சாப்பாடு. 24 மணி நேரமும் டிவி என்று பொழுது போவதற்கு எல்லா அம்சங்களும் உண்டு. ஆனால் அவர் அந்த வீட்டிலிருந்து எங்கும் செல்ல முடியாது. சகோதரன் குடும்பத்தைத் தவிர வேறு யாருடனும் உரையாட முடியாது.

90 வயதில் இது ஒரு பிரச்சினை. யாரிடமாவது எதாவது பேசாமல் அவர்களால் இருக்க முடியாது. 90 வயதில் நான் எப்படி இருப்பேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நிச்சயமாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றியது. சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்த நோய் என்று போராடிக் கொண்டிருப்பவன் நான். 90 வயதைத் தொடக் கூட முடியாது. அப்பாவிற்கு எந்த நோயும் கிடையாது. முதுமையைத் தவிர.

காலையில் அவர் எழுந்தவுடன் ஒரு சொம்பு நிறையா தண்ணீர் குடிப்பார். பின் எழுந்து நிதானமாக மாடிக்குச் செல்வார். நடை நடை என்று 1 மணி நேரம் மேல் நடப்பார். பல்லே இல்லை என்பதால் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் நிதானமாக சாப்பிடுவார்.

என் பெண்ணிற்கு உதவி செய்ய மனைவி போய் விட்டதால், நான் இருக்கும் போஸ்டல் காலனி வீட்டில் யாருமில்லை. ஞாயிறுகளில் நான் மட்டும் வந்து தங்கிவிட்டுப் போய் விடும். அப்பா என்னுடன் இருக்கும்போது தினமும் போன் செய்யாமல் இருக்க மாட்டார். ''ஒண்ணுமில்லை. சும்மாதான் போன் செய்தேன்,'' என்பார். என் நண்பர்கள் என்று யாராவது என்னைத் தேடி வந்துவிட்டால் போதும். அப்பாவிடம் கட்டாயம் மாட்டிக்கொண்டு விடுவார்கள். அவர்களிடம் அப்பா ஹோமியோபதியைப் பற்றி பேசி பேசி அலுக்க அடித்துவிடுவார். பின் அரசியலைப் பற்றி பேசுவார்....அந்தக் காலத்தில் அவர் லஞ்சம் வாங்காத அதிகாரியாக இருந்ததைப் பெருமையாகப் பேசுவார். ..எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளதோ அந்தக் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதில் வல்லவர். சமீபத்தில் கலைஞர் மு.க மாதிரி பேசுவதில் ஒருவித திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். எல்லோரிடமும் அப்படிப் பேசிக் காட்டுவார்.

தம்பி வீட்டிலும் அவர் அப்படிப் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கெல்லாம் கடுமையாக கோபம் வந்துவிட்டது. அப்படியெல்லாம் யாராவது வந்தால் பேசக் கூடாது என்று தடை உத்தரவு போட்டுவிட்டார்கள். அவர்கள் வீட்டிற்கு யாராவது வந்தால், அவர்களுடன் பேசக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். அதனால் அப்பாவிற்கு தெம்பு குறைந்து விட்டதுபோல் தோன்றியது.

போன ஞாயிற்றுக்கிழமை, தெலுங்கு வருஷம் ஒட்டி திங்களும் விடுமுறை என்பது அப்பாவிற்கு தெரிந்து விட்டது. 'கழுத்து வலி தாங்க முடியவில்லை. ஹெல்த் சென்டருக்குப் போய்க் காட்ட வேண்டும்.' என்று நான் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். தம்பி வீட்டில் சொகுசை அனுபவித்தவர், இங்கு குறுகிய இடத்தில் கட்டிலில் அவருக்கு சரியாக தூங்க முடியவில்லை. என் வீட்டில் அவருக்கு உள்ள சுதந்திரம். எல்லா இடத்திற்கும் அவர் எளிதாக செல்வது. யாரைப் பார்த்தாலும் எதையாவது பேசுவது? டெலிபோன் மணி ஒலித்தால் போதும், போனை கையில் எடுத்து God Bless You என்று சொல்லாமல் இருக்க மாட்டார். திங்கள் காலையில் ஹெல்த் சென்டருக்கு தானாகவே நடந்து செல்ல ஆரம்பித்து விட்டார். பரபரப்பாக இருக்கும் ஆர்யா கவுடா தெருவில் நடப்பதைப் போல் ஆபத்து எதிலும் இல்லை. ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்க மாட்டார். இங்குதானே இருக்கிறது. நடந்தே போய் விடலாம் என்று பிடிவாதமாக கூறுவார். ஜெய் சங்கர் தெருவில் இருக்கும் சாய்பாபா கோயிலுக்கும் அவர் இப்படித்தான் நடந்தே போய்விடுவார். பலமுறை கண்டித்தும் அவர் கேட்க மாட்டார்.

எப்போதும் தெருவில் நடக்கும் போது, தெருவில் யாராவது புகை பிடித்துக் கொண்டு சென்றால், அவர்களை நிற்க சொல்லிவிட்டு, 'சிகரெட் உடம்பிற்குக் கெடுதல், பிடிக்காதீர்கள்,' என்பார். ஒருமுறை ஒருவர் கோபத்துடன், Mind your business என்று கூற அதைக் கேட்டு I mind my business. but you mind your health என்று கூறினாராம்.

என் வீட்டைச் சுற்றிலும் இருக்கும் மற்ற குடியிருப்போர்கள், அப்பா வரவில்லையா என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

'ஒன்றுமில்லை. கழுத்து எலும்பு தேய்ந்து விட்டது' என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். 'ஒன்றுமில்லை. கழுத்தைத் தூக்கி டிவியைப் பார்க்காமல் இருந்தால் சரியாகிவிடும்,' என்றான் என் சகோதரன்.

'செவ்வாய்க் கிழமைதான் எக்ஸ் ரே தருவதாக சொல்கிறார்கள்....வாங்கிக்கொண்டு வந்து விடுகிறேன்...'' என்றார் அப்பா. நான் சீகாழி போய்விட்டால் அப்பாவை தனியாக எப்படி விட்டுவிட்டுச் செல்வது. 'நீ பயப்படாதே...போ..' என்றார் அப்பா. என் சகோதரன், 'என் வீட்டிற்கு வந்து விடு...அங்கிருந்து கார் வைத்து உன்னை ஹெல்த் சென்டருக்கு அனுப்புகிறேன்,' என்றான் சகோதரன். அங்கு போகத் தயாராய் இல்லை அப்பா.

மார்ச்சு மாதம் அலுவலகக் கெடுபிடியால் என்னால் லீவு எடுத்துக் கொள்ள முடியவில்லை. 'வேறு வழியில்லை. நான் போய்த்தான் ஆக வேண்டும்.' என்றேன். சகோதரன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான். அப்பாவோ என்னிடம், 'அவனிடம் எதுவும் சொல்லாதே...நான் ஹெல்த் சென்டருக்கு போய்விட்டு மாலை அடையார் சென்று விடுகிறேன்,' என்றார். நான் சீர்காழி வந்தவுடன் அப்பாவைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். காலையில் அப்பா போன் செய்தார். 'ஏன் அவனிடம் சொன்னாய்...அவன் லீவு எடுத்துக் கொள்வதாக சொல்கிறான்...' என்றார் அப்பா. திரும்பவும் அப்பா சகோதரனையும் லீவு எடுத்துக்கொள்ள வேண்டாமென்று சொல்லிவிட்டார். பின் தானாகவே ஆட்டோ வைத்துக்கொண்டு ஹெல்த் சென்டருக்குச் சென்றுவிட்டு மாத்திரிகைளை வாங்கிக்கொண்டு ஆட்டோ வில் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்கு பத்திரமாக வந்துவிட்டேன் என்று எனக்கு போன் செய்தார்.

மாலை சகோதரனுடன் அடையார் சென்று விட்டார். நான் அப்பாவிற்குப் போன் செய்தேன்..'வந்துவிட்டேன்.....இனிமேல் போர்....சாப்பிட வேண்டியது...டிவி பார்க்க வேண்டியது...'என்றார் அப்பா.

(இன்னும் வரும்-.)

Comments

அப்பாவுக்கு என் வணக்கங்கள்.
அப்பாவிடம் ஹோமியோபதி குறித்துப் பேச மிக்க ஆவலுடன் நான் இருக்கிறேன். அப்பா மிகுந்த ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
Venkatramanan said…
//சமீபத்தில் கலைஞர் மு.க மாதிரி பேசுவதில் ஒருவித திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். எல்லோரிடமும் அப்படிப் பேசிக் காட்டுவார்.//

அன்பின் அழகிய சிங்கர்,
நான் தங்கள் வீட்டிற்கு வந்தபோது கூட அவர் ஆர்வமாக என்னிடம் இப்படி பேசி காட்டியது நினைவிலுள்ளது!
அந்த ஞாயிற்றுக்கிழமையே எனக்கு மிகவும் சுவாரசியமான நாள்! என்னை விட என் மனைவிக்கு.
இதை அச்சிட்டு என் மனைவிக்கு படித்துக்காட்டப் போகிறேன்!
அம்மா, அப்பா மற்றும் மனைவி அனைவரையும் கேட்டதாக சொல்லவும்!

அன்புடன்
வெங்கட்ரமணன்
anaamikaa said…
மதிப்பிற்குரிய தோழருக்கு, வணக்கம். உங்கள் தந்தையைப் பற்றி நீங்கள் எழுதியிருந்தது எனக்கு என் தாத்தாவை நினைவுபடுத்திவிட்டது. சில விஷயங்களில் நம்மால் ஒன்றுமே செய்ய இயலவில்லையே என்று வருத்தமாக இருந்தது. குறிப்பாக, வயது, நோய் போன்ற விஷயங்களில்.

நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன்.

அக்கம்-பக்கம் அல்லது அதுபோன்ற பெயரில் பேசித்தான் ஆகவேண்டும் என்று தோன்றுகிற சில கருத்துகளைத் தொடர்ந்த இடைவெளிகளில் எழுதியனுப்பினால் இந்த இணையதளப் பகுதியில் வெளியிடுவீர்களா?

தோழமையுடன்

லதா ராமகிருஷ்ணன்