Skip to main content

நீங்களும் படிக்கலாம் தொகுதி 2

அழகியசிங்கர்




இந்தப் பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்களும் படிக்கலாம் 1 என்ற தொகுதியை திருவாளர் அழகியசிங்கர் அவர்கள் கொண்டு வந்தார்.  அத் தொகுதியில் 20 புத்தகங்களைப் பற்றி எழுதியிருப்பதாகக் கூறினார்.  கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் வரை படித்து எழுதியதாகவும் கூறினார்.   3000 பக்கங்கள் படித்தாலும் ஒவ்வொரு  புத்தகத்தைப் பற்றி எழுதும்போதும் இன்னொரு முறை என்று திரும்பவும் படிக்கும்படி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவது என்பது சிரமமானது என்று அசோகமித்திரன் அவர்கள் இவரிடம் குறிப்பிட்டதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

இந்தப் புத்தகம் எதற்குப் பிரயோசனம் என்று அழகியசிங்கரிடம் கேட்டபோது அவருக்குக் கோபம் வந்துவிட்டது.  "யாராவது என் புத்தகத்தைப் படித்துவிட்டு அதில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களில் ஒன்றாவது வாங்கினால் எனக்கு அது பெருமை இல்லையா?" என்று என் கேள்விக்கு பதில் அளித்தார்.

அவர் சொல்வது உண்மைதான்.  இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து  அழகியசிங்கரின்  நீங்களும் படிக்கலாம் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள் பழைய புத்தகங்களாக மாறி இருக்கும்.  பலருக்கு இப்படியெல்லாம் புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்ற ஆச்சரியமும் ஏற்பட்டிருக்கும்.

அந்த முதல் தொகுதியைக் தொடர்ந்து நீங்களும் படிக்கலாம் இரண்டாம் தொகுதியைக் கொண்டு வந்துள்ளார்.  இதிலும் 21 புத்தகங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.  இந்தப் புத்தகம் முதல் தொகுதி வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து வந்திருப்பதாகக் கூறி உள்ளார்.   ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகத்தைத்தான் படித்துவிட்டு எழுதுவதாகக் கூறி உள்ளார்.  அதனால் நீங்களும் படிக்கலாம் தொகுதி 2  இரண்டு ஆண்டுகள் கழித்து வந்திருப்பதாகக்  கூறுகிறார்.  இத் தொகுதியில்  கீழே குறிப்பிட்டவர்களின் புத்தகங்களைப் பற்றி எழுதி இருப்பதாகச் சொல்கிறார்.

1. தமிழவன் 2. பேயோன் 3. எம் டி முத்துகுமாரசாமி 4. சாரு நிவேதிதா 5. தினமணி மருத்துவ மலர்  6. எம் ஜி சுரேஷ் 7. லா ச ரா 8. உஷாதீபன் 9. எஸ் எம் ஏ ராம்  10. நாகார்ஜ÷னன் 11. அசோகமித்திரன் 12. எம் ஜி சுரேஷின் இன்னொரு புத்தகம் பற்றி 13. சாரு நிவேதிதாவின் மார்ஜினல் மேன் என்ற புத்தகம் பற்றி 14.  மா அரங்கநாதன் 15. எஸ் சண்முகம் 16. முபீன் சாதிகா 17. எஸ் ராமகிருஷ்ணன் 18. கடற்கரை 19. பிரமிள் 20. பாவண்ணன் 21. வைதீஸ்வரன்

கட்டுரைகள் ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்குள் கன கச்சிதமான வடித்தில் அடங்கி விடும். சாருநிவேதிதா, எம் டி முத்துகுமாரசாமியின் புத்தகங்கள் பற்றிய கட்டுரைகள் அதிகப் பக்கங்கள்.
 
96 பக்கங்கள் உடைய இந்தப் புத்தகத்தை வெங்கட் சாமிநாதனுக்கு அர்ப்பணித்துள்ளார்.  இந்தப் புத்தகத்தின் விலை ரூ.70.
எல்லோரும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று சொல்வதில் அழகியசிங்கர் சங்கடப் படுகிறார்.  அவருக்குப் பதில் நான் சொல்கிறúன்.  வாங்கிப் படியுங்கள். இப் புத்தகம் வேண்டுமென்றால் 9444113205 என்ற செல் போனில் தொடர்பு கொள்ளுங்கள். 


Comments