அழகியசிங்கர்
ஒவ்வொரு முறை திருக்குறளைப் படிக்கும்போது மனதிற்குள் குறள் என்ன சொல்ல வருகிறது என்று நினைத்துக்கொள்வேன். ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல பல முறை குறள் நமக்கு எதோ தகவலை அளித்துக்கொண்டிருக்கிறது. எளிமையான ஒன்றரை அடிகளில் முடிந்து விடுவதில்லை அது. இதோ இந்தக் குறளைப் பார்ப்போம்.
உரனென்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
ஐம்பொறிகள் என்னும் யானைகளை அறிவு என்னும் அங்குசம் கொக்ஷ்;டு அடக்க வல்லவன் எவனோ அவன் எல்லாவற்றையும் துறந்தவன். அவன்தான் இந்த நிலத்திற்கு ஏற்ற ஒப்பற்ற உரமாகவும் இருக்க வல்லவன். நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். ஆனால் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது என்பது நம்மால் இயலாது.
உதாரணமாக ஐம்புலன்களின் ஒன்றான வாயை நம்மால் அடக்க முடிகிறதா? வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலுக்குப் போய் உருளைக் கிழங்கு போன்டா சாப்பிடாமல் இருக்க வேண்டுமென்று நினைப்போம். ஆனால் கால்கள் தானாகவே அங்குச் சென்று போன்டா வை ஒரு பிடிபிடிப்போம். அதே மாதிரி நாம் பேசியே எத்தனைப் பேர்களைப் புண் படுத்துகிறோம். அதனால்தான் சொல்கிறேன் திருவள்ளுவர் எவ்வளவு பெரிய மகான். இந்த ஐந்துபுலன்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை.
எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் சொர்க்கவாசி என்ற கவிதையைப் படித்தால், ஐந்து புலன்களையும் அடக்கி ஆள வேண்டுமென்ற எண்ணம் தோன்றுமா என்ன? நக்கலுடன் கவிதை எழுதி இருக்கிறார்.
யேசு வந்தார்
பாவம் ஒழிந்தது
காந்தி வந்தார்
தீண்டாமை ஒழிந்தது
புத்தர் வந்தார்
உயிர்வதை ஒழிந்தது
சாக்ரடீஸ் வந்தார்
மூடச்சிந்தனை ஒழிந்தது
மார்க்ஸ் வந்தார்
ஆதிக்க வர்க்கம் ஒழிந்தது
டால்ஸ்டாய் வந்தார்
வேறுபாடுள்ள சமுதாயம் ஒழிந்தது
லிங்கன் வந்தார்
அடிமைத்தனம் ஒழிந்தது
பெரியார் வந்தார்
அறிவிலித்தனம் ஒழிந்தது
வேறு யாரோ வந்தார்
தீமை ஒட்டுமொத்தமாக ஒழிந்தது
உல்லாசமாக இருக்கிறேன்
காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு
யார் வருகைக்கோ காத்துக்கொண்டு
Comments