Skip to main content

திருக்குறள் சிந்தனை 15


அழகியசிங்கர்



காலையில் எழுந்தவுடன் திருக்குறள் படிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை எனக்கு வந்து விட்டதுபோல் தோன்றுகிறது.  ஒரு நாளைக்கு ஒரு குறள் விதம்தான் படிக்கிறேன்.  அப்படிப் படிக்கும்போது நேற்று அதன் முதல் தினம் படித்தக் குறள்களையும் திரும்பவும் எடுத்துப் படிக்கிறேன்.  
திருக்குறள் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது.  வான்சிறப்பு என்ற பெயரில் ஒவ்வொரு குறளாக எடுத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  மழை என்ற ஒன்று இல்லாவிட்டால், நம்மால் வாழவே முடியாது என்பதைக் குறள் அழுத்தமாக வலியுறுத்துகிறது.
என் பள்ளி பருவத்தில் திருக்குறளைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது.  ஏன்னென்றால் நான் மனப்பாடம் செய்து தேர்வில் கேள்வி கேட்டால் எழுத வேண்டும்.  இப்படி மனப்பாடம் செய்து ஒப்பிப்பதை நான் விரும்பி ஏற்றுக்கொண்டதில்லை. 
ஒன்றரை அடியில் அழுத்தம் திருத்தமாக தன் கருத்துக்களைச் சொல்வதோடல்லாமல் போதிக்கும் தன்மையாகவும் திருக்குறள் தென்படுகிறது.  ஒருவர் ஒரு திருக்குறளைப் படித்துவிட்டு அதை விட்டு வெளியே வரும்போது எந்த மன நிலையில் இருப்போம் என்பதையும் யோசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
இதோ 15வது குறளை உங்கள் முன் அளிக்கிறேன்.

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 

இன்று நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது தாங்க முடியாத வெயில்.  அப்போதுதான் மேலே குறிப்பிட்ட குறள் ஞாபகத்திற்கு வந்தது.  உலக மக்களை தவிக்கச் செய்வதும் அப்படித் தவிக்கின்றவர்களின் துன்பங்களை நீக்குவதும் மழை ஒன்றுதான்.  இந்த மழை இல்லாவிட்டால் தவித்தபடியே இருக்க வேண்டியதுதான்.  மழையே கடவுள் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.  கெடுப்பதையும் எடுப்பதையும் மழைதான் செய்து கொண்டிருக்கிறது.  இந்தக் குறளில் கெடுப்பதூஉங் எடுப்பதூஉம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் அற்புதமாக அமைந்துள்ளன.
வனம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை வந்தது யாருக்காவது தெரியுமா?  ஸ்ரீ நேகனும், ஜீ முருகனும்தான் அதன் ஆசிரியர்கள்.  அக்டோபர் - நவம்பர் 2005 இதழ் என்னிடம் உள்ளது.  வனம் ஐந்தாவது இதழ்.  அந்த இதழைப் புரட்டிக்கொண்டு வந்தபோது என் கண்ணில் பழனிவேள் கவிதை ஒன்று பட்டது.  திடீர் மழை என்ற தலைப்பு  அக் கவிதையை இங்கு தருகிறேன்.

திகைத்த நடவுப்பெண்கள் கரையேறாமல்
வயலில் விளையாட்டாக பெய்யும்
மழையை முக்காடிட்டு நின்றனர்
      கூடுதலானதோடு மழை 
உருமாறத்துவங்கியது
அப்பெண்களின் மேல் அலங்காரமாக

விலகியமுடிகளில் திரளும் முத்துகள்
நெற்றியில் மூக்கின்நுனியில்
உதட்டு விளிம்புவரை அரும்பி
தோடுடைய செவிகள் உருகுகின்றன
கழுத்தில் புதிய மணிச்சரம்
விரல்களி கைகளில் தின்மையாக
கலகலக்கிறது
காலில் நிலையற்று நழுவும் கொலுசுகள்

மழை தீவிர மடைந்துவிட்டது
அவர்கள் முன்னிலும் தெப்பலாகி
பார்க்க மழை நடுங்குகிறது

ஒருத்தில அண்ணாந்து மழையை
விலக்கமுயல
ஒரு துளி நழுவி
நழுவி
அல்குலில்பட்டது
இன்னதென புரியாமல் பரவசப்படுகிறாள்
பிறகு அவள் புதைந்து நிற்கும் சேற்றில்
விசையற்று துளிர்விடத்துவங்கினாள்.

திருவள்ளுவரோ மழை இல்லாவிட்டால் அவ்வளவுதான் ஜாக்கிரதை என்று மிரட்டுகிறார்.  பழனிவேளோ அவருகடைய கவிதையில் மழையை வைத்து விளையாடுகிறார்


Comments