Skip to main content

திருக்குறள் சிந்தனை 21

திருக்குறள் சிந்தனை 21

அழகியசிங்கர்



நேற்று படிக்க முடியவில்லை  திருக்குறளை.  ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக சில புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன்.  அதைப் பற்றியும் எழுதுவதாக உள்ளேன்.  ஏன் திருக்குறளைப் படிக்கிறேன் என்றால், குறள் எதாவது சொல்கிறது.  அதைப் படித்து படித்து நானும் எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.  நீத்தார் பெருமை என்ற இந்த அத்தியாயத்தில் பத்து குறள்கள் இருக்கின்றன.  நாவலர் உரையில் துறந்தார் சிறப்பு என்று எழுதியிருக்கிறது.  
குறளை இங்கு பார்ப்போம்.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.  

நல் ஒழுக்கத்தையே தழுவி வாழும் உலகப் பற்றை நீக்கிய சான்றோர்களின் பெருமையை நூல்களும் போற்றி புகழும்.   கவனிக்க வேண்டிய வரி 'வேண்டும் பனுவல் துணிவு.'
உலகப் பற்றை நீக்கிய சான்றோர்கள் நம்மிடையே இருக்கிறார்களா என்ற கேள்வி ஏற்படாமல் இல்லை.  அப்படிப்பட்ட ஒருவர் இருந்தால் நூல்கள் வழியாக அவர்களைப் போற்றிப் பாராட்டாமல் இருக்க முடியாது.
எப்போதாவது... என்ற வைதீஸ்வரன் கவிதைதான் இந்தக் குறளைப் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது.  இதோ கவிதை.

சிலகணங்கள்
இவ் வுலகத்திற்கு
உபயோக மற்றுப் போவதில்
எனக்கு வருத்தமில்லை

முதுகேறி என்னை
ஓயாமல் சவாரி செய்யும்
வாழ்க்கையை
ஒரு கணம் உதறி
சாவுக்கும் வாழ்வுக்கும்
இடையில்
சரித்திரமற்ற ஒளியில்
விழித்துக் கிடக்கும் ஆசையில்
உள்ளம் தவம் இருக்கிறது.
       (மனக்குருவி - வைதீஸ்வரன் கவிதைகள்)

Comments