Skip to main content

திருக்குறள் சிந்தனை 17



அழகியசிங்கர்




மழை பெய்யாவிட்டால் என்னன்ன ஆபத்துக்கள் காத்திருக்கும் என்று பத்து குறள்களில் திருவள்ளுவர் சொல்லிக்கொண்டே போகிறார்.   எப்படி மழையைப் பற்றி திருவள்ளுவர் அந்தக் காலத்தில் யோசித்தார் என்பது எனக்கு ஆச்சரியம்.  மழை இல்லாமல் வாரம் ஒருமுறை தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் எங்கள் வீடுகளில்.  இன்றைய காலத்தில் திருவள்ளுவர் அவதரித்தால் இதையும் தன் குறளில் பாடிவிடுவார். நான் குறளில் வான்சிறப்பு படித்துவிட்டு எழுதிக்கொண்டிருப்பதால், திருவள்ளுவர் கருணையால் நேற்று இரவு நல்ல மழை.  
இன்றைய குறளைப் பார்ப்போம்.  
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்.

மழைபெய்யாவிட்டால் கடல்நீரின் அளவுகூட குன்றிவிடும் என்கிறார்.  உண்மையில் கடல்நீரிலிருந்து உருவாகும் மேகம்தான் மழையாக உருமாறுகிறது.  மழையாக வராவிட்டால் கடல் கூட தன் வளத்தில் குறையும்.  
இந்தக் குறளில் தடிந்துஎழிலி என்ற வார்த்தைப் பிரயோகம் பிடித்திருக்கிறது.  
நவீன கவிஞர்கள் யாரும் மழையைப் பற்றி எழுதுவதில் சளைத்தவர்கள் இல்லை. நான் 400 கவிதைப் புத்தகங்கள் வைத்திருக்கிறேன்.  எந்தக் கவிதைத் தொகுதியை எடுத்தாலும் அதில் மழையைப் பற்றி எழுதாமல் ஒரு கவிதை கூட தப்பாது.  மழையோடு நெருக்கமானவர்கள் நவீன கவிஞர்கள் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.  இதோ தேவதச்சன் அவர்களின் கவிதையான üமழையைப் பற்றியý என்ற கவிதையை இங்குக் கொடுக்க விரும்புகிறேன்.

மழையைப் பற்றிய எல்லாக் கவிதைகளையும் நீங்கள்
படித்திருக்க மாட்டீர்கள்
மழைக்கவிதைகளைப் படிக்கையில் நீங்கள் எழுதியவனைப்
பற்றியும்
உங்களைப் பற்றியும் தெரிந்துகொள்வதோடு
மழையைப் பற்றியும்
ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் போகிறீர்கள்.
தாள்களை நனைக்காமல் பெய்கிறது மழை.
எனினும் தாள்களில் தேங்கி நிற்கும் மழை நீரில்
உங்கள் கணுக்கால்வரை மறைந்திருக்கிறீர்கள்.
கவிதைக்கு வெளியேயும்,
மழையைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்
மழை எப்படியெல்லாம் பெய்யாமல் போகிறது என்று.
மழையை வழியனுப்பிய அந்தக்கால சடங்குகள் பற்றி
அதற்குரிய தெய்வங்கள் பற்றி 
மழை மட்டுமா போச்சு என்று
சிறகி நாரை கொக்கு முக்குளிப்பான்
உள்ளான் நீர்க்கோழி பனங்காடை எல்லாம்
எங்கே போச்சு.
அவை மீனைத் தின்கின்றன.
மீன்கள் இல்லை
"காடுகளில் 
மரபுத் தான்யங்கள் போய்
ஒட்டுத் தான்யங்கள் வந்துவிட்டன
பறவைகள் எல்லாம் எங்கே போச்சு
வடக்கேயா மேற்கேயா"
அவர்களுக்குத் தெரியவில்லை
கவிதைக்கு வெளியே
மாடுகளை விற்க
ஓட்டிக்கொண்டு போகிறார்கள்
கவிதைக்கு உள்ளே,
காலித் தொழுவங்கள்.
இன்னும் கொஞ்ச நாளில்
அவர்களும் காணாமல் போய்விடுவார்கள்
வடக்கேயோ மேற்கேயோ சூன்யத்திலோ
பெய்யாத மழைக்கவிதையின் நிர்வாணத்தில் நீங்கள்
கணுக்கால்வரை கூட மறையாமல்
தெரிகிறீர்கள்            

(மர்ம நபர் - தேவதச்சன் கவிதைகள்)



Comments