Skip to main content

திருக்குறள் சிந்தனை 25



அழகியசிங்கர்


சமீபத்தில் திருக்குறள் சம்பந்தமாக எந்தப் புத்தகம் இருந்தாலும் நான் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்.  இதுமாதிரி புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டிருப்பதைப் பற்றி வள்ளுவர் பெருமான் என்ன சொல்கிறார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளேன்  
சமீபத்தில் நான் வாங்கிய புத்தகம் ராஜாஜியின் வள்ளுவர் வாசகம் என்ற புத்தகம். 
ராஜாஜி அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் இப்படி எழுதுகிறார் :

'முனிவர் எழுதிய பாட்டுகளை இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின் படித்து, அவற்றில் நான் கண்ட பொருளை எழுதுகிறேன்.  குற்றங்கள் பல இருக்கும்.  பெரியோர்கள் மன்னிப்பார்கள்.'

என்ன தன்னடக்கம் பாருங்கள் ராஜாஜிக்கு.   இந்த இடத்தில் நானும் அதுமாதிரியே சொல்ல வருகிறேன்.

நான் பல திருக்குறள் உரைகளை வைத்திருப்பதால் ஒவ்வொருவரும் ஒரு குறளுக்கு என்ன பொருள் எழுதியிருக்கிறார் என்று ஆராய்வதில் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன்.  

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

இங்கே தெளிவாகவே நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இப்படிக் கூறுகிறார் :
ஐந்து இந்திரியங்களையும் அடக்குவதால் அடையக் கூடிய ஆற்றலுக்கு இந்திரியங்களை அடக்கி யாகங்களைச் செய்து இந்திர பதவி அடைகின்ற தேவேந்திரன் கதையே சாட்சியாகும் என்கிறார்.
வள்ளுவரே குறளில் கோமான் இந்திரனே என்கிறார்.  சரி நாத்திகரான நாவலர் என்ன சொல்ல வருகிறார் என்று அவர் உரையை ஆராய்ந்தேன்.  அவர் நிச்சயமாக இந்திரன் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார் என்பது என் நம்பிக்கை.  நான் எதிர்பார்த்த மாதிரியே அவர் உரை இருந்தது.
வான்புகழ் கொண்டோரில் இனிய திறமைமிக்க, அறிவாற்றலில் சிறந்த சான்றோராகக் கருதப்படும் அறிவன் தக்க சான்று ஆவான் என்கிறார்.   இந்திரன் என்ற பெயரைச் சொல்லாமல் நாவலர் எப்படித் தப்பிக்கிறார் என்று தோன்றியது.
நவீன கவிதை எதாவது கண்ணில் தட்டுப்படுகிறதா என்று பார்த்தேன்.  நீத்தார் பெருமை என்ற தலைப்பில் எழுதப்பட்ட எந்தக்  குறளுக்கும் நவீன கவிதை தட்டுப்படாது என்று தோன்றியது. ஐந்து இந்திரியங்கள் என்றெல்லாம் சொல்கிறார் வள்ளுவர்.  எழுத்து இதழைப் புரட்டிக்கொண்டு வரும்போது, கடன்பட்டார் என்ற தலைப்பில் டி கே துரைஸ்வாமி என்ற பெயரில் எழுதிய நகுலனின் கவிதை கண்ணில் தட்டுப்பட்டது.  அந்தக் கவிதையின் கடைசி பாராவை தருகிறேன்.

கூத்தனே,
உடுக்க ஒரு முழம்
உண்ண ஒரு நாழி
உடன் கூட ஒரு நங்கை
எடுத்து வளர்க்க ஒரு மகவு
அண்டமெல்லாம் எடுத்துச் சாட ஒரு உள்ளம்.
அதுவே உ;னனை நினைந்து
மடங்கிக் குவிய நாட்டம்
இவையன்றோ
மனிதரென நாமம் தரித்தார்
நாடக் கடன்பட்டார்

Comments