Skip to main content

நீங்களும் படிக்கலாம் - புத்தக எண் : 42அழகியசிங்கர் 
அன்புள்ள மோஹினிக்கு,

வணக்கம்.

கடந்த சில மாதங்களாக நான், நீங்கள், ஜெகன் மூவரும் சந்தித்துக்கொள்ள முடியவில்லை.   உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று அறிந்தேன்.  வயிற்றில்தான் ஏதோ பிரச்சினை என்று ஜெகன் குறிப்பிட்டார்.  உண்மையில் நாம் வயிற்றைத்தான் சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.  இன்னொன்றும் ஜெகன் சொன்னார்.  இப்போது நீங்கள் பரவாயில்லை என்று.  
நாம் மூவரும் ஒவ்வொரு முறையும் சந்தித்துக் கொள்கிறோம்.  அதோடு அல்லாமல் புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.  யாராவது புத்தகங்கள் படிப்பதில் விருப்பமில்லாதவர்கள் நாம் பேசுவதைக் கேட்டால் பைத்தியம் பிடித்து ஓடிப்போய்விடுவார்கள். 
ஜெகன் சொன்னார் நீங்கள் முடிச்சூர் ரோடிலிருந்து வருவதாகவும் அவர் மடிப்பாக்கத்திலிருந்து வருவதாகவும்.  நீங்கள் இருவரும் அவ்வளவு தூரத்திலிருந்து என்னைப் பார்க்க வருவது மகிழ்ச்சிதான்.  நான் இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருந்தது தப்புதான்.  ஒரு முறை நானும் நீங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறேன். புத்தகங்களைப் பற்றி அங்குப் பேசலாம்.  உங்கள் பெண்ணிற்கு கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதா?  
இந்தக் கடிதத்தை ஏன் எழுதுகிறேன் என்றால் üகறையான்ý என்ற வங்க நாவலைப் படித்த மகிழ்ச்சியை தங்களிடம் தெரிவிக்கத்தான்.  இந்த நாவலை சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வங்க மொழியிலிருந்து மொழி பெயர்த்திருக்கிறார்.  
நேஷனல் புக் டிரஸ்ட் இந்த நாவலைக் கொண்டு வந்துள்ளது.  1976ல் இந்த நாவலை விலைக்கு வாங்கினேன்.  அப்போதே பழைய புத்தகம் மாதிரி இருந்தது.  வாங்கியவுடன் படித்தும் விட்டேன்.  146 பக்கங்கள் என்பதால் படித்து விட்டேன்.  உண்மையில் ஒரு புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்கிறேன் என்றால் அந்தப் புத்தகத்தில் எதாவது இருக்க வேண்டும்.  முதலில் ஒரு வங்க மொழியிலிருந்து எழுதிய நாவல் மாதிரி தெரியவில்லை. இதுவே முக்கிய காரணமாக நான் நினைக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு முழுவதும் மறந்தும் விட்டேன்.  பொதுவாக நான் புத்தகம் படிக்கிறேன் என்றால் அந்தப் புத்தகத்தில் எதாவது குறிப்புகள் எழுதியிருப்பேன்.  இந்த மாதத்தில் இந்த ஆண்டில் படித்திருக்கிறேன் என்று எழுதியிருப்பேன்.  அல்லது புத்தகத்தில் எதாவது கோடுபோட்டு குறித்து வைத்திருப்பேன்.  ஆனால் இந்தப் புத்தகத்தில் எதுவும் செய்யவில்லை.  திரும்பவும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று தோன்றியது.  எடுத்துப் படிக்க படிக்கப் புத்தகத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றும் உடைந்து உடைந்து தூள் தூளாக மாறியது.  இரண்டு நாட்கள் முன் எக்மோரில் இருக்கும் நேஷனல் புக் டிரஸ்ட் புத்தகக் கடைக்குச் சென்றேன்.  இந்தப் புத்தகம் அங்கு விற்பனைக்கு இல்லை.   திரும்பவும் அச்சடித்துக் கொண்டிருப்பதாக கடையில் பணிபுரிபவர் கூறினார்.  எனக்கு நம்பிக்கை இல்லை. பொய். 
நேற்றுதான் (22.06.2018) இந்தப் புத்தகத்தை திரும்பவும் படித்து முடித்தேன்.  எப்போதும் ஒரு புத்தகத்தைப் படித்து விட்டால் அது குறித்து எதாவது எழுதுவது என் வழக்கம்.  அல்லது நாம் சந்திக்கும்போது அதுகுறித்துப் பேசுவோம்.  கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது இந்தப் புத்தகத்தைப் படித்தபோது எனக்கு ஆல்பெர் காம்யுவின் அந்நியன் என்ற நாவல் ஞாபகத்திற்கு வந்தது.  இருத்தலியலை அடிப்படையாகக் கொண்டு நாவல் எழுதியிருப்பார்.  ஒரு விதத்தில் கறையான் நாவலும் அப்படித்தான்.
சீர்ஷேந்து முகோபாத்யாதான் இந்த நாவலை எழுதி உள்ளார்.  வங்காள மொழியில் இந்த நாவல் பெயர் குண்போகா.  1967ஆம் ஆண்டு இந்த நாவலை எழுதி உள்ளார்.  1942ல் அந்நியன் என்ற நாவலை ஆல்பெர் காம்யு எழுதி உள்ளார்.  இந்த நாவலின் முன்னுரை எழுதியவர் இப்படி எழுதுகிறார் : சமூகமும் அரசியலும் மனிதனின் நோக்கில் செல்லாக் காசாகிவிட்ட ஒரு காலத்தில் அவன் தன்னிடம் திரும்பி வரும் கதையை எழுதுகிறார்கள் நாவலாசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார்.
செயின்ட் அன்ட் மில்லர் கம்பெனி வேலையை ஜøன் மாதத்தில் விட்டுவிட்டான் சியாம் என்று ஆரம்பிக்கிறது கதை.  பொன் முட்டை இடக்கூடிய வேலை.  வேலையை விடுவதற்குரிய
முக்கிய காரணம் எதுவுமில்லை  ஷ்யாமின் மேலதிகாரி ஹரி மஜ÷ம்தார் எல்லோருடைய காதுகளில் விழும் மாதிரி ஷ்யாமை வேசி மகன் என்று திட்டிவிட்டான்.  இது பெரிய யோசனையில் கொண்டு விட்டது ஷ்யாமிற்கு.  உடனே வேலையை விட்டுவிட்டான்.  இந்த நாவல் இப்படிப் போகிறது.   அதன் பின் ஷ்யாம் எந்த வேலைக்கும் செல்லவில்லை.  ஒரு நாடோடி மாதிரி கல்கத்தாவிலேயே சுற்றி சுற்றி வருகிறான்.  அலுவலகம் போகவில்லை என்பதால் தாடி வளர்த்துக் கொள்கிறான்.  உடை மோசமாக இருக்கிறது.  கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்கார நிலையில் இருக்கிறான்.  
ஷ்யாம் சந்திக்கும் நபர்களும் வித்தியாசமானவர்கள்.  மித்ரா என்ற ஒருவனை சந்திக்கிறான்.  உண்மையில் இந்த நாவல் எல்லோரையும் சந்திப்பதுதான்.  மித்ரா 40 வயதுக்காரன்.  அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறான்.  அவனுக்குப்  பெண்ணே கிடைக்கவில்லை.  அந்த விரக்தியில் ஷ்யாமுடன் பேசுகிறான்.  கையில் தூக்க மாத்திரிகளை வைத்திருப்பதாக.  ஒரு நாள் எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுவேன் என்கிறான்.  ஷ்யாம் அவனிடம், எனக்கும் பாதி மாத்திரிகளைப் பத்திரப்படுத்து என்கிறான்.
தற்செயலாக லீலா என்ற பெண்ணைப் பார்க்கிறான் ஷ்யாம்.  ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள்.   அவள் அலுவலகம் உள்ள தெருவில் ஒரு கம்பத்தில் சாய்ந்துகொண்டு அலுவலகக் கண்ணாடி கதவு வழியாக அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான் ஒருநாள் முழுவதும்.  அவள் அவனைப் பார்க்கவே பயப்படுகிறாள்.  அவள் வேலை முடிந்து வெளியே வரும்வரை ஷ்யாம் அங்கிருந்து நகராமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.   அவளைப் பார்த்துப் பேசக்கூட ஷ்யாம் சங்கடப் படுகிறான்.  அவளும் ஆரம்பத்தில் அவனைப் பார்த்துப் பயந்தாள் என்றாலும் பின்னால் பயப்படவில்லை.  ஒவ்வொரு முறை அவனைப் பார்க்காமலே  போய்விடுவாள்.  இந்த நாவலில் பல தகவல்கள் இருக்கின்றன.  ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.  விசித்திரமான சில விபரங்களும் உண்டு;   ஷ்யாம் சாப்பிடும் ஓட்டல் வாசலில் நாய்கள் காத்துக்கொண்டிருக்கும்.  ஒவ்வொரு நாளும் அவற்றின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகும்.  இப்போது படித்தாலும் இந்த நாவல் புத்துணர்ச்சியைத் தரும்படி இருக்கிறது.
ஷ்யாமின் பித்து நிலைதான் இந்த நாவல்.  இதை எடுத்துக்கொண்டு போகிற விதம் சிறப்பாக உள்ளது.  இந்தப் புத்தக நிலை மோசமாக இருப்பதால் இந் நாவலை இன்னொரு முறை படிக்க முடியாது. ஆனால் மறக்க முடியாத புத்தகம். நான் இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் அந்நியன் நாவலை எடுத்து வைத்துக்கொண்டேன் படிப்பதற்கு.
மோஹினி உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.  இந்தக் கடிதத்தின் நகலை ஜெகனுக்கும் அனுப்புகிறேன்.   திரும்பவும் சந்திப்போம்.

அன்புள்ள

அழகியசிங்கர்

   

Comments