Skip to main content

நேற்றைப் போல் இன்று இல்லை



ராஜேஸ் குமார் 




"இவன்தான் ஸார்....”

குரல் கேட்டு ஃபைல் ஒன்றைப் புரட்டிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் நிமிர்ந்தார். ஹெட்கான்ஸ்டபிளின் பிடியில் அவன் சிக்கியிருந்தான். பரட்டைத்தலையும், கை வைத்த பனியனும், பூப்போட்ட லுங்கியும் மண்ணெண்ணெயில் நாறிக் கொண்டிருந்தது.
கலியபெருமாள் ஃபைலைப் பட்டென்று மூடிவிட்டு அவனைக் கோபமாய்ப் பார்த்தார்.

"ஏண்டா! போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னுக்கு முன்னாடி வந்து தீக்குளிச்சு தற்கொலை பண்ற அளவுக்கு உனக்கு என்னடா பிரச்சினை ?”

"அய்யா...!” பரட்டைத்தலை சேவித்துவிட்டுக் கண்களில் நீரோடு பேச ஆரம்பித்தான்... “என்னை ஏமாத்திட்டாங்கய்யா...” 

“ஏமாத்திட்டாங்களா... யாரு...?”

 “இந்தக் கிராமத்துல சிட் பண்ட்ஸ் வெச்சு நடத்திட்டிருக்கிற கிருஷ்ணப் பிள்ளைத்தாங்கய்யா, அவர்கிட்டே இருபத்தஞ்சாயிரம் ரூபாய் சீட்டு போட்டிருந்தேன். மாசம் ஆயிரம் ரூபா வீதம் இருபத்தஞ்சு மாசம் கட்டணும்னு சொன்னாங்க... நானும் கட்டிக்கிட்டு வந்தேன். இருபது மாசம் கட்டின பிறகு போன வாரம் அஞ்சாயிரம் ரூபாய் தள்ளி சீட்டு எடுத்தேன். அதுப்படி அவங்க எனக்கு இருபதாயிரம் ரூபாய் தரணும். ‘ரெண்டுநாள் கழிச்சு வா... பணம் தர்றோம்'னு சொன்னாங்க... அவங்க சொன்ன மாதிரியே ரெண்டு நாள் பணத்துக்காகப் போனேன்... ‘பணமா... பணத்தைத்தான் அன்னிக்கே வாங்கிட்டுப் போயிட்டியே'ன்னு சொல்றாங்கய்யா...! ‘பணம் எப்பக் கொடுத்தீங்க... ஏன் இப்படி ஏமாத்தறீங்க'ன்னு கேட்டதுக்கு அடியாட்களை விட்டு அடிக்கறாங்கய்யா. எனக்கு நியாயம் கிடைக் கறதுக்காகத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னாடி தீக்குளிக்க வந்தேன்யா . ..”

இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் ஹெட்கான்ஸ்டபிளை ஏறிட்டார்.

 “கிருஷ்ணப்பிள்ளையோட போன் நெம்பர் தெரியுமா?” 

"தெரியும் ஸார்....”

 “சொல்லு...” 

டெலிபோனைப் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டு ஹெட்கான்ஸ்டபிள் சொன்ன எண்களை டயல் செய்தார் கலியபெருமாள். மறுமுனையில் ரிங் போய் ரீஸீவர் எடுக்கப்பட்டது. 

“ஹலோ ...” 

“கிருஷ்ணப்பிள்ளை இருக்காரா...?” 

“கிருஷ்ணப்பிள்ளைதான் பேசறேன்...” 

“மிஸ்டர் பிள்ளை... நான் இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் பேசறேன்...” 

“சொல்லுங்க ஸார்... என்ன விஷயம்?” 

“பொன்ராஜ்ன்னு ஒரு ஆளு... உங்ககிட்டே சீட்டுப் போட்டவனாம். சீட்டுப்பணம் கொடுக்காமே ஏமாத்திட்டீங்களாம். நியாயம் வேணும்னு சொல்லி ஸ்டேஷனுக்கு முன்னாடி தீக்குளிக்க வந்துட்டான்.” 

மறுமுனையில் கிருஷ்ணப்பிள்ளை பதற்றப்பட்டார். 

“ஸார்... அந்தப் பொன்ராஜ் சொல்றது பொய். ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து பணம் இருபதாயிரம் வாங்கிட்டுப் போய்ட்டான்...' 

“என்னது.... வாங்கிட்டுப் போயிட்டானா?” 

"ஆமா ... ஸார்...” கலியபெருமாள் எதிரே நின்றிருந்த பொன்ராஜைக் கோபமாய் ஏறிட்டார். 

“ஏண்டா... பணத்தை வாங்கிட்டியாமே?”

 “அய்யா ... ஆ...ஆ...ஆ..!” என்று பெரிதாய் அரற்றிவிட்டுத் தலையில் அடித்துக்கொண்டான் பொன்ராஜ். “அவங்க பொய் சொல்றாங்கய்யா... அவங்க பேச்சை நம்பாதீங்கய்யா... பணம் இருக்கிறவங்க பேச்சை நம்பிக்கிட்டு என்னை மோசம் பண்ணிடா தீங்கய்யா ...”


கலியபெருமாள் பொன்ராஜைக் கையமர்த்திவிட்டு மறுபடியும் டெலிபோனின் ரீஸிவருக்கு கையைக் கொடுத்தார். .

 “மிஸ்டர் பிள்ளை . . . ! நீங்க பணம் தரலைன்னு அவன் சொல்றானே...?” -

 "பச்சைப் பொய் ஸார்... லாக்-அப்புல வெச்சு கொஞ்சம் லாடம் கட்டுங்க. உண்மையச் சொல்லிடுவான்.”

“அவன் பணம் வாங்கிக்கிட்டதுக்கு அடையாளம் நீங்க ஏதாவது கையெழுத்து வாங்கியிருக்கீங்களா...?”

“கையெழுத்து வாங்கல ஸார்... ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்தப் பொன்ராஜ் பணம் வாங்க வந்தப்ப என்னோட சம்பந்தி ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கிட்டார்ன்னு போன் வந்தது... அப்ப அந்தப் பதற்றமான நேரத்துல அவன்கிட்டயிருந்து கையெழுத்து வாங்க மறந்துட்டேன். அதைக் காரணமா வெச்சிக்கிட்டு மறுபடியும் பணம் கேட்கிறான்னு நினைக்கிறேன் ஸார்...”

“ஸாரி... பிள்ளை ...! நீங்க சொல்ற காரணம் எனக்குச் சரியாப் படலை. நீங்க பொன்ராஜுக்குப் பணம் கொடுத்ததுக்கான ஆதாரம் ஏதாவது இருந்தாத்தான் சட்டப்படி அவன் மேல் நடவடிக்கை எடுக்க முடியும். நான் பணம் கொடுத்துட்டேன்னு நீங்க வெறும் வாய்ல சொன்னா போதாது. ஏதாவது ஆதாரம் காட்டணும்... ”

“இன்ஸ்பெக்டர்...! நான் பொய் சொல்வேன்னு நீங்க நினைக்கிறீங்க ளா ...?” 

“பண விஷயத்துல யார் எப்படி வேணும்னாலும் மாறலாமே...?” 

“இன்ஸ்பெக்டர்...” பிள்ளை பேச முயல், கலியபெருமாள் குரல் உயர்ந்தது. 

“ஒருத்தன் தற்கொலை பண்ற அளவுக்கு வந்து இருக்கான்னா அவன் பக்கம் நியாயம் இருக்கிற மாதிரிதான் என்னோட மனசுக்குப் படுது. ஸ்டேஷனுக்கு முன்னாடி தீக்குளிச்சு அவன் செத்துப் போயிருந்தா உங்க மேல் வன்கொடுமை வழக்குப் பதிவு பண்ணிக் கைது செய்வதைத் தவிர வேற வழியில்லை... இன்னிக்கு அவன் தீக்குளிக்க இருந்ததை நாங்க தடுத்துட்டோம்... நாளைக்கு நிலைமை எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது...” - 

“இன்ஸ்பெக்டர்... நான் என்ன சொல்ல வர்றேன்னா...?”

“வெரி ஸாரி பிள்ளை... உங்களுக்கு பனிரெண்டு மணி நேரம் டயம். அதுக்குள்ள பொன்ராஜுக்கு நீங்க பணத்தை செட்டில் பண்ணனும். இல்லேன்னா உங்க வீட்டுக்கு முன்னாடி போலீஸ் ஜீப் நிற்கும். அதுக்கப்புறம் உங்க சிட்பண்ட்ஸ் பிஸினஸ் படுத்துடும்.... பரவாயில்லையா?”. 

“வேண்டாம் ஸார்... பணத்தைக் கொடுத்துடறேன்...”

 “இப்ப சொன்னீங்களே... இது வார்த்தை!” - ரிஸீவரை உற்சாகமாய் வைத்தார் கலியபெருமாள்.

ரூபாய் இருபதாயிரத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டிய பொன்ராஜின் மனசுக்குள் சந்தோஷம் கும்மியடித்தது.

‘ஐந்து லிட்டர் மண்ணெண்ணெயைத் தலையில் ஊற்றிக்கொண்டு ஒரு சின்ன ‘டிராமா' பண்ணியதில் இருபதாயிரம் ரூபாய் லாபம். சம்பந்திக்கு கார் ஆக்ஸிடெண்ட் என்று சொன்னதுமே பிள்ளை பதறியடித்துக்கொண்டு என்னிடம் கையெழுத்து வாங்காமல் போனதுக்கு போனஸ் இருபதாயிரம் ரூபாய்...!'

பொன்ராஜுக்கு சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டும் போல் இருந்தது. 'வெளியே லேசாய் பெய்துகொண்டிருந்த மழைக்கு பெப்பர் சிக்கனும் ஒரு குவார்ட்டரும் கையில் இருந்தால் சூப்பராய் இருக்குமே!'

வீட்டைப் பூட்டிக் கொண்டு தலையில் துண்டைப் போட்டபடி லேசாய்ப் பெய்துகொண்டிருந்த மழையில் ஒயின் ஷாப்பை நோக்கி நடந்தான் பொன்ராஜ்.

மறுநாள் காலை வந்த எல்லா நாளிதழ்களிலும் ஏதாவது ஒரு பக்கத்தில் ஒரு சின்ன பகுதியில் அந்தச் செய்தி இடம் பிடித்து இருந்தது.

மின்னல் தாக்கி உடல் கருகி இளைஞர் மரணம். சமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பொன்ராஜ். வயது 25. நேற்று கிராமத்து வீதியில் மழையில் நனைந்தபடி சென்றுகொண்டிருந்த போது மின்னல் இவரைத் தாக்கியது. அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார். இவரையும் சேர்த்து, தமிழகத்தில் பெய்துவரும் மழைக்கு நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments