காலையில் ஒரு வாழ்த்துச் செய்தி வந்தது. தந்தையார் தின வாழ்த்துக்கள் என்று. தந்தையார் தினமா என்று தெரியவில்லை. இன்று அவரைப் பற்றி நினைத்துக்கொள்வோமே என்று தோன்றியது.
என் அப்பாவைப் பற்றி உயர்வாகச் சொல்வதற்குப் பல விஷயங்கள் உண்டு. அவருடைய பிள்ளைகளை அவர் அடித்ததில்லை. கோபித்துக் கொண்டது இல்லை.
எனக்கு ஆச்சரியமாக இருக்கும் அவர் ஏன் கோபப்படுவதில்லை என்று. மேலும் அவர் யாருடன் பழகும்போது கோபப்பட்டதே இல்லை.
அவருக்குப் போதை வஸ்துக்கள் பழக்கமில்லை. சிகரெட் பழக்கம்மட்டுமல்ல வெற்றிலை பாக்கு கூட பயன்படுத்த மாட்டார். அவருக்குச் சர்க்கரை நோய் ரத்த அழுத்த நோய் எல்லாம் கிடையாது.
அவருடைய பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ளவில்லை. 90 வயதுக்கு மேல் ஆனாலும் தரையில் அமர்ந்து கொண்டு காய்கறிகள் நறுக்கிக் கொடுப்பார். அவர் நான் பயமுறுத்துகிற மாதிரி பெரிய பெரிய புத்தகங்களைப் படிக்க மாட்டார். பின்னால்தான் என் புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். ஜானகிராமன் முழு சிறுகதைத் தொகுதியைப் படித்து விட்டார். அசோகமித்திரன் சிறுகதைகளையும் படித்து விட்டார். ஆனால் அவருக்கு புதுமைப்பித்தன் ஓடவில்லை.
என் குறுநாவல்களைப் பாராட்டிக் கொண்டிருந்தவர் அவரை வைத்தே உறவினர்கள் என்ற குறுநாவல் எழுதியிருந்தேன். அதைப் படித்த பிறகு என்னுடைய எழுத்தையும் படிக்கப் பிடிக்காமல் போய்விட்டது.
என்ன எழுதறே ? என்பார். நான் சிரித்துக்கொண்டே போய் விடுவேன்.
அவருக்கு ஹோமியோபதி மருந்தில் விருப்பம் அதிகம். இந்த கொரோனா காலத்தில் அவர் இருந்திருந்தால் ஹோமியோபதி மருந்தைச் சாப்பிடும்படி வற்புறுத்துவார்.
அவருக்கு 95 வயது வரை எந்த நோயும் கிடையாது. இதய நோய் எதுவும் வந்ததில்லை. தள்ளாமைதான் காரணம். 2017ஆம் ஆண்ட புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன் இறந்து விட்டார். அந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டு.
“
Comments