Skip to main content

அஞ்ச லட்டைக் கதைகள் 14

அழகியசிங்கர்


இது என் 14வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 


மஞ்சள் நிறப் பூனைக்குட்டி 



வீட்டு வாசல்படியில் ஒரு மஞ்சள் நிறப்பூனைக்குட்டி பார்க்கக் கவர்ச்சியாக இருந்தது.  அதைப் பிடித்துக் கொஞ்ச வேண்டும்.  கிட்ட நெருங்கிப் போனால் ஓடி விடுகிறது.

ஒருநாள் கதவு அருகில் யோசனையுடன் அமர்ந்து இருந்தது. அந்தத் தோற்றமே அழகு.  திரும்பவும் மெதுவாக அதற்குத் தெரியாமல் பிடித்து விடலாமென்று நினைத்தேன்.  நான் கிட்ட வருவதைப் பார்த்தவுடன் அலறி அடித்துக்கொண்டு ஓடியது. 

இந்தப் பூனையை கைவசப்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு.  எப்போதும் என் காரின் அடியில் கம்பீரமாகச் சயனித்துக் கொண்டிருக்கும்.  யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்களென்று திமிர் அதனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும்.

பார்த்தவுடன் மிரட்ட நினைத்தேன்.  கார் கிட்டே போய் ' ச்சூ...ச்சூ'  என்று விரட்டினேன்.  கவலையே படாமல் அசையாமலிருந்தது.  ஒரு கழியை எடுத்துக்கொண்டு விரட்டினேன்.  கழியைப் பார்த்தவுடன் பயந்து ஓடிவிட்டது.  

கொஞ்ச நாட்களாய் பூனையைக் காணவில்லை.  எங்கே போயிற்றென்று தெரியவில்லை.  முதலில் எங்கிருந்து இது வந்தது? 

எங்காவது விபத்தில் இது செத்துப் போயிருக்குமோ என்று தோன்றியது.  தெருவில் நான் நடந்து போகிற பாதையில்  இது கண்ணில் படவில்லை.  நகுலன் என்ற தமிழ் எழுத்தாளரின் நாவல்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  அவர் எழுதிய நாவல்களின் ஒன்றின் பெயர்  'அந்த மஞ்சள் நிற பூனைக் குட்டி.'.   ஒரு வினாடி யோசித்தேன்.  சரிதான் அந்த நாவலுக்குள்  அது நுழைந்து விட்டது.




Comments